என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூரின் ஜியா மின் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜியா மின் 16-21, 21-17, 21-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    • இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இன்று (21ம் தேதி) தொடங்கி வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.

    4 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்

    இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஏக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சர்வதேச புரோ பீச் வாலிபால் தொடர் போட்டிகளை மாமல்லபுரத்தில் துவங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மதிப்புமிக்க போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் இந்தியா சார்பில் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

    இதில், SDAT மூலம் பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இந்த உற்சாகமான நிகழ்வில் தங்கள் முத்திரையை பதித்து, அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த வெற்றியை பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார்.
    • வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறிவருகிறேன்.

    இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக நுழைய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் வெல்ல வேண்டும். இது மிகவும் சவாலானதாகும்.

    ரோகித் சர்மா தலைமையிலான அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. எதிர்பாராத இந்த தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீண்டு ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடுவது முக்கியமானது.

    ஆஸ்திரேலியாவில் கடைசி 2 டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. தற்போது 3-வது தடவையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்து கொள்ளாததால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஏற்றுள்ளார்.

    கேப்டன் பொறுப்பை ஏற்றபின்பு பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கேப்டனாக அணியை வழிநடத்துவது கவுரமான விஷயம். இது ஒரு பாக்கியம். இதை நான் ஒரு பதவியாக எடுத்துக்கொள்ளவில்லை. பொறுப்பாக எடுத்து கொள்கிறேன். விராட் கோலி, ரோகித் போல எனக்கும் தனியாக ஒரு ஸ்டைல் இருக்கிறது. எனக்கென்று ஒரு தனி வழி இருக்கிறது. ரோகித் வந்தபிறகு தான் கேப்டனாக அணியை வழி நடத்துவது தொடர்பாக எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தது.

    வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறிவருகிறேன். அவர்களால் சிறப்பாக அணியை வழி நடத்தமுடியும். வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கேப்டனாக ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். கடந்த காலங்களிலும் வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவ் மாதிரியான சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர். இந்த நம்பிக்கையுடன் ஒரு ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்" என்று தெரிவித்தார்.

    • ரோகித் சர்மா இடம் பெறாததால் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
    • நிதிஷ் ரெட்டி அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. ஒரு சுழந்பந்துடன் இந்தியா களம் இறங்கும்.

    இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக நுழைய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் வெல்ல வேண்டும். இது மிகவும் சவாலானதாகும்.

    ரோகித் சர்மா தலைமையிலான அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. எதிர்பாராத இந்த தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடுவது முக்கியமானது.

    ஆஸ்திரேலியாவில் கடைசி 2 டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. தற்போது 3-வது தடவையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    டெஸ்டுக்கு முன் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடும். ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்கவில்லை. இந்திய அணிகளை உருவாக்கி தங்களுக்குள் போட்டிகளில் விளையாடி பயிற்சி செய்தது. எந்த பயிற்சி ஆட்டத்திலும் ஆடவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் முதல் டெஸ்ட் பெர்த்தில் தொடங்குகிறது. வேகப்பந்து வீரர் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். ரோகித் சர்மாவின் மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. அவர் இந்த டெஸ்டில் ஆடவில்லை. பும்ரா இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்டுக்கு 2022-ம் ஆண்டு கேப்டனாக பணியாற்றி இருக்கிறார்.

    கே.எல். ராகுலும், ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக விளையாடுகிறார்கள். சுப்மன் கில் காயம் அடைந்ததால் பெர்த் டெஸ்டில் ஆடுவது சந்தேகம். போட்டி நடைபெறும் தினத்தில்தான் அவரது நிலை குறித்து முடிவு செய்யப்படும். அவர் ஆட முடியாத பட்சத்தில் தேவ்தத் படிக்கல் 3-வது வரிசையில் ஆடுவார்.

    விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக துருவ் ஜூரல் சிறப்பாக ஆடியதால் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பெறுவார். சர்பரஸ் கான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இடம் பெறுவார். இதில் அஸ்வின், ஜடேஜா இடையே போட்டி நிலவுகிறது. வேகப்பந்து வீரர்களில் ஆகாஷ் இடம் பெறுவார். முகமது சிராஜ், ஹர்சித் ரானா இடையே போட்டி இருக்கும்.

    நிதிஷ் குமார் ரெட்டியும், ஹர்சித் ரானாவும் டெஸ்டில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் நெருக்கடியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கலாம். அவர் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடியவர். கடந்த காலங்களில் இதை பார்த்து இருக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சராசரி 47.83 ஆகும்.

    ஆஸ்திரேலிய அணி கடைசியாக பிப்ரவரி- மார்ச் மாதம் நியூசிலாந்துடன் டெஸ்டில் விளையாடியது. 2 டெஸ்டிலும் வென்று முத்திரை பதித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    அந்த அணியில் உஸ் மான் கவாஜா, ஸ்டீவ் சுமித், லபுஷேன், டிரெவிஸ் ஹெட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ், ஹாசல்வுட், லயன் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். புதுமுக வீரர் நாதன் மெக்ஸ் வீனி டெஸ்டில் அறிமுகமா கிறார்.

    நாளை டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • பெர்த் டெஸ்டில் நிதிஷ் குமாரை களம் இறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
    • ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? என ஹர்பஜன் சிங் கேள்வி.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நிதிஷ் ரெட்டி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோ எங்கே என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    உங்களுக்கு ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல்-ரவுண்டர்கள் தேவை. நிதிஷ் ரெட்டியை களம் இறக்குவதை விட உங்களுக்கு வேறு ஆப்சன் இல்லை. ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? அவர்களை ஒயிட்பால் கிரிக்கெட் வடிவத்திற்குள் சுருக்கிவிட்டோம். இரண்டு மூன்று வருடங்களுக்காக ஷர்துல் தாகூரை உருவாக்கினோம். தற்போது அவரை எங்கே? திடீரென இந்த தொடரில் நிதிஷ் குமார் போன்ற பந்து வீச அழைக்கிறீர்கள்.

    சவுரவ் கங்குலி போன்று ஒன்றிரண்டு ஓவர்கள் நிதிஷ் ரெட்டியால் வீச முடியும். அவர் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினால் அது அவருக்கு போனஸ்ஆக இருக்கும். பந்து வீச்சில் கங்குலி இந்திய அணிக்கு செய்தது போன்று நிதிஷ் ரெட்டி செய்ய முடியும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

    ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஷர்துல் தாகூர் வேகப்பந்து வீச்சு பேட்ஸ்மேன் ஆவார்.

    ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்திருந்தார்.

    • நினைத்ததை விட பந்துகளை மிகவும் வேகமாக அடிக்கும் பேட்ஸ்மேன்.
    • விக்கெட்டுகளுக்கு இடையில் துல்லியமாக பந்து வீசுகிறார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பெர்த்தில் தொடங்குகிறது. பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். சிட்னி ஆடுகளம் மட்டும் சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும்.

    இதனால் பெரும்பாலும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இந்தியா விரும்பும். அந்த வகையில் இந்தியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டியுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் "இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ் ரெட்டி மிகவும் துல்லியமாக பந்து வீசுவது மட்டுமல்லாமல், நாம் நினைப்பதை விட பந்துகளை மிகவும் வேகமாக அடிக்கும் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஆல்-ரவுண்டர் இடத்தை நிரப்ப அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும். ஆஸ்திரேலிய தொடரில் கவனிக்கப்படும் வீரராக திகழ்வார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தார். தற்போது அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஆல்ரவுண்டர் இடம் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி, சீன தைபே ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 12-21, 21-19, 21-18 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் முதலில் நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 39-39 என சமனில் முடிந்தது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசானன் உடன் மோதினார்.

    இதில் பிவி சிந்து 21-17, 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் பேட்மிண்டன் வீராங்கனையுடன் மோதினார். இதில் பன்சோத் 20-22, 23-21, 21-16 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார்.
    • மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இளம் ஸ்டிரைக்கர் தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார்.

    முன்னதாக லீக் சுற்றில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த விருதுகளை வென்ற நிலையில், தற்போது இந்தியா மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

    முன்னதாக தென் கொரியா அணியும் மூன்று முறை மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. தற்போது இந்திய அணி மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.

    • முன்னேற்றம் கண்டு டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்தில் உள்ளார்.

    ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளையாடிய இந்திய வீரர்கள் பலர் ஐசிசி ரேங்கிங்கில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சமீபத்திய டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும், ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கினார். இதே போன்று இளம் இந்திய அணி வீரர் திலக் வர்மா ஐசிசி டி20 ஆடவர் பேட்டிங்கில் டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார்.

    இரண்டு சதங்கள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 280 ரன்களை குவித்து அசத்திய திலக் வர்மா கிட்டத்தட்ட 69 இடங்கள் முன்னேற்றம் கண்டு டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

    டாப் 10 டி20 பேட்டர்கள் பட்டியலில் திலக் வர்மா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்கள் இருவர் தவிர டாப் 10 பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்தில் உள்ளார். 

    • பேட்ஸ்மேன் ஸ்ட்ரைட் டிரைவ் ஆடிய பந்து முகத்தில் பலமாக தாக்கியது.
    • அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை.

    மேற்கு ஆஸ்திரேலியாவின் புறநகர் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து நடுவரின் முகத்தை மிகவும் கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சார்லஸ் வெர்யார்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சீனியர் நடுவரான டோனி டிநொப்ரேகா நடுவராக பணியாற்றினார். அப்போது பேட்ஸ்மேன் நேராக (Straight Drive) அடித்த பந்து, டோனியின் முகத்தின் பயங்கரமாக தாக்கியது. இதனால் நடுவர் நிலைகுலைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    முதலுதவி செய்த மருத்துவர்கள் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதா? என பரிசோதனை செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை ஏதும் தேவையில்லாத நிலையில், மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

    இந்த கொடூரமான சம்பவத்தில் இருந்து டோனி விரைவில் குணமடைய வாழ்த்துவோம், விரைவில் அவர் எழுந்து வருவார் என எதிர்பார்க்கிறோம். நடுவர் குழு உங்களுக்கு பின்னால் உள்ளது என மேற்கு ஆஸ்திரேலியா புறநகர் கிரிக்கெட் சங்கம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    ×