என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ந் தேதி முடிகிறது.

    இதனை தொடர்ந்து 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறும் வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்கள் சிலர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் ஓபராக செயல்படுகிறார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இரு தொடரிலும் தேர்ந்தெடுக்கபடலாம் எனவுக் தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை வருகிற 12-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது.
    • இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் பெற்றது.

    21-23-ல் நடைபெற்ற 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்திய அணி இந்த 2 தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஜூன் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி தொடரில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை தவறவிட்டது.

    2025-27-ம் ஆண்டுக்கான 4-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 18 டெஸ்டில் விளையாடுகிறது. ஜூன்-ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று இந்திய அணி 5 டெஸ்டில் பங்கேற்கிறது. இதோடுதான் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீசுடன் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) தென் ஆப்பிரிக்காவுடன் உள்ளூரில் 2 டெஸ்டில் ஆடுகிறது.

    அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று 2 டெஸ்டிலும், அக்டோபர்-டிசம்பர் மாதம் நியூசிலாந்து சென்று 2 டெஸ்டிலும் பங்கேற்கிறது.

    இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது. சொந்த மண்ணில் இந்த தொடர் நடைபெறும்.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி உள்ளூரில் 9 டெஸ்டிலும், வெளிநாட்டில் 9 டெஸ்டிலும் விளையாடுகிறது. 

    • கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.

    கொல்கத்தா:

    13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணி இரு கோல் அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இறுதியில் இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி வெற்றி பெற்றது.

    • 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
    • 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 615 ரன்களும், பாகிஸ்தான் 194 ரன்களும் அடித்தன.

    இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பாபர் அசாம் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    3-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் அடித்தது. ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ரம் ஷசாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய குர்ரம் ஷசாத் 18 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த கம்ரான் குலாம் 28, சவுத் ஷகீல் 23 என விக்கெட்டை இழந்தனர். ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய மசூத் 145 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரிஸ்வான்- சல்மான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.

    ரிஸ்வான் 41, சல்மான் 48, ஜமால் 34, ஹம்சா 16 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 478 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 58 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 7.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • கரும்பிலிருந்து சாறு உரியப்பட்ட சர்க்கரை போல பும்ரா பயன்படுத்தப்பட்டார்.
    • டிராவிஸ் ஹெட் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3 - 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்களுக்குப் பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிபோட்டிக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா, தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

    இந்த போராட்டத்திற்கு தோல்வியும் காயமும் மட்டுமே பும்ராவுக்கு கிடைத்தது. இந்நிலையில் பும்ராவின் இந்த நிலைக்கு கடைசி போட்டியில் ரோகித் சர்மா இல்லாத நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியை தவறாக தேர்ந்தெடுத்ததே காரணம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கரும்பிலிருந்து சாறு உரியப்பட்ட சக்கை போல பும்ரா பயன்படுத்தப்பட்டார். டிராவிஸ் ஹெட் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. லபுஸ்ஷேன் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. ஸ்மித் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் மட்டும் எவ்வளவு ஓவர்கள் வீசுவார். அதனால் அவர் கடைசியில் பவுலிங் செய்வதற்கு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

    ஒருவேளை பும்ரா விளையாடி இருந்தாலும் ஆஸ்திரேலியா வென்றிருக்கும். அவர்கள் 6-க்கு பதிலாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருப்பார்கள். கொஞ்சம் கடினமாக வெற்றி பெற்று இருப்பார்கள். ஆனால் நீங்கள் பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்கள். அணி நிர்வாகமான நீங்கள் அவர் எவ்வளவு ஓவர் வீச வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும்.

    அதே போல அணி தேர்வும் சரியாக இல்லை. வேகத்துக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் நீங்கள் இரண்டு ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்தீர்கள். இவ்வளவு கிரிக்கெட்டில் விளையாடி பார்த்த எனக்கு அது புரியவில்லை. பிட்ச் பார்த்ததும் எந்த மாதிரியான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சிறிய விஷயம் கூட உங்களுக்கு தெரியவில்லை.

    எனக் கூறினார்.

    • 2016-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் ரிஷி தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
    • ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.

    தரம்சாலா:

    தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷி தவான் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். 34 வயதான நிலையில் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

    வலது கை வேகப் பந்துவீச்சாளராகவும், வலது கை பேட்ஸ்மேன் ஆகவும் அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இமாச்சலப் பிரதேச அணிக்காக ரிஷி தவான் உள்ளூர் போட்டிகளில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதிக விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

    இதையடுத்து 2016-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் ரிஷி தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ரிஷி தவான் மொத்தம் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். மூன்று ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும், ஒரு டி20 போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார். 

    இந்த நான்கு போட்டிகளில் மொத்தமாக 13 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதன் பின் ரிஷி தவானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இடம் பெற்று உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் அவருக்கு அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஒட்டுமொத்தமாக 25 ஐபிஎல் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங்கில் பெரிய அளவுக்கு ரன் குவிக்கவில்லை. தற்போது உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிவு செய்து இருக்கிறார்.

    • மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டி என்ற நகரில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
    • இந்த தொடரில் நடந்த போட்டியில் ஒரு வீரர் 9 பந்துகளில் 35 ரன்கள் விளாசியுள்ளார்.

    மகாராஷ்டிரா:

    மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டி என்ற நகரில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் நடந்த போட்டியில் ஒரு வீரர் 9 பந்துகளில் 35 ரன்கள் விளாசியுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்த பார்வையாளர் பவன் என்ற நபர் மைதானத்திற்குள் நுழைந்து அந்த பேட்ஸ்மேன் மீது ரூ. 500 நோட்டுகளை தூவி பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு சென்றார்.

    இதனையடுத்து சுற்றியிருந்த பார்வையாளர்கள் அவர் பறக்க விட்ட ரூ.500 நோட்டுகளை எடுத்து செல்ல மைதானத்திற்குள் வந்தனர். அந்த பேட்ஸ்மேனும் பணத்தை பார்வையாளர்களுக்கு எடுத்து கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ந் தேதி தொடங்குகிறது.
    • 8 அணிகளும் தங்களுடைய தற்காலிக அணியை ஜனவரி 12-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்தத் தொடரைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இது பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. எனினும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தங்களுடைய தற்காலிக அணியை ஜனவரி 12-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இதில் வீரர்கள் காயம் காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம். வீரர்களை மாற்ற பிப்ரவரி 13-ந் தேதி வரை அனுமதி உள்ளது. இங்கிலாந்து அணி மற்றுமே இந்த தொடருக்கான அணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா மோதும் போட்டிகள்:

    இந்தியா vs வங்கதேசம்: பிப்ரவரி 20, 2025 (துபாய்)

    இந்தியா vs பாகிஸ்தான் : பிப்ரவரி 23, 2025 (துபாய்)

    இந்தியா vs நியூசிலாந்து: மார்ச் 2, 2025 (துபாய்)

    அரையிறுதி (தகுதி இருந்தால்): மார்ச் 4, 2025 (துபாய்)

    இறுதிப் போட்டி (தகுதி இருந்தால்): மார்ச் 9, 2025 (துபாய்/லாகூர்)

    • சச்சின் பலமுறை சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
    • சுனில் கவாஸ்கரிடம் விராட் கோலி ஆலோசனை கேட்டால் நிச்சயமாக அவர் நல்ல தீர்வை கொடுப்பார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் முக்கிய காரணம் என விமர்சனங்கள் என தொடங்கியுள்ளன.

    குறிப்பாக மூத்த வீரரான விராட் கோலியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் இந்த டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தமே 190 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது சராசரி 24 ரன்களுக்கு குறைவாக உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான இர்பான் பதான்

    இந்தியாவுக்கு சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தேவையில்லை. அவர்களுக்கு அணி கலாச்சாரம் தேவை. கடைசியாக விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் எப்போது விளையாடினார் என்று உங்களால் சொல்ல முடியுமா? அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

    லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் பலமுறை சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். கோலியை குறைத்து மதிப்பிடுவதற்காக நான் இதனை சொல்லவில்லை. ஒரே மாதிரியாக அவர் அவுட் ஆகி வெளியேறுகிறார் என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். சுனில் கவாஸ்கரிடம் விராட் கோலி ஆலோசனை கேட்டால் நிச்சயமாக அவர் நல்ல தீர்வை கொடுப்பார்.

    தவறிலிருந்து பாடம் பெற்று அதனை திருத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் விராட் கோலி அதில் ஆர்வம் காட்டவில்லை.

    என்று பதான் கூறியுள்ளார்.

    பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். அவற்றில் 8 முறை அவர் ஆட்டம் இழந்தார். அவை அனைத்தும் ஒரே மாதிரியாக நடந்தவை என்பதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    • இந்திய அணியின் கேப்டனாக மந்தனா, துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கேப்டனாக செயல்பட்ட கவுருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 10-ந் தேதி ராஜ்கோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக மந்தனா, துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணியின் கேப்டனாக இருந்த கவுருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரேனுகா சிங் தாகூருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரிச்சா கோஷ் மற்றும் உமா செத்ரி விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-

    ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது , சைமா தாகூர், சயாலி சத்கரே.

    • ஆப்கானிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றியின் மூலம் இருதரப்பு தொடரை ஆப்கானிஸ்தான் முதல் முறையாக வென்றுள்ளது.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்றது.

    இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ரஹ்மத் ஷா 139 குவித்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்து 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதி நாள் இன்று நடைபெற்றது. மீதம் இருந்த 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 7 விக்கெட்டும், ஜிய உர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் முதல் இருதரப்பு தொடரை ஆப்கானிஸ்தான் முதல் முறையாக வென்றுள்ளது.

    • ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.
    • இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாடுகிறது.

    பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டம் காரணமாக ஏராளான மாற்றங்கள் அரங்கேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்தத் தொடரைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இது பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. எனினும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது.

     


    சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்வு எழுந்துள்ளது. இது குறித்து வெளியான தகவல்களில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் 2025 சாம்பிய்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி விவரங்களை பி.சி.சி.ஐ. விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    ×