search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "SAvPAK"

  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது.
  • சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

  13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று சிக்கலில் தவிக்கிறது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா போராட்டம் என்பதில் சந்தேகமில்லை.

  'அணி சரிவில் இருந்து மீள்வதற்காக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரும் ஆதரவாக நிற்கிறோம். ஊக்கப்படுத்துகிறோம். ஆனால் உலகக்கோப்பை முடிந்ததும் செயல்பாட்டை ஆராய்ந்து, அணியின் நலன் கருதி அதிரடி முடிவு எடுப்போம்' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு ஆபத்து என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. இதுவும் பாபர் அசாமுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். 

  பயிற்சியில் பாகிஸ்தான் அணி வீரர்கள்.

  பயிற்சியில் பாகிஸ்தான் அணி வீரர்கள்.

  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது. 282 ரன்கள் சேர்த்த போதிலும் அதை வைத்து ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த முடியாமல்போய் விட்டது.

  சொதப்பலான சுழற்பந்து வீச்சும், மந்தமான பீல்டிங்கும் தான் தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் கேப்டன் பாபம் அசாம் புலம்பி தீர்த்தார். சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவானது. சுழலுக்கு உகந்தது. அதனால் ஷதப் கான், முகமது நவாஸ் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதே போல் பேட்ஸ்மேன்களும் ஒருசேர கைகொடுக்க வேண்டும். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (302 ரன்) நன்றாக ஆடுகிறார். கேப்டன் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், இப்திகர் அகமது ஆகியோரும் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை அடையலாம்.

  யாரும் எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி 4-ல் வெற்றி (இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வி (நெதர்லாந்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.

  பேட்டிங்கில் எதிரணி பவுலர்களை திணறடிக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் நடப்பு தொடரில் 4 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதில் இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தது அடங்கும். குயின்டான் டி காக் (3 சதத்துடன் 407 ரன்), ஹென்ரிச் கிளாசென் (15 சிக்சருடன் 288 ரன்), எய்டன் மார்க்ரம் (265 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, கோட்ஜி, யான்சென் (தலா 10 விக்கெட்), கேஷவ் மகராஜ் (7 விக்கெட்) கலக்குகிறார்கள். சரியான நேரத்தில் தென்ஆப்பிரிக்க அணி சிறந்த நிலையை அடைந்திருக்கிறது.

  ஆனால் சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம். மொத்தத்தில் தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் அந்த அணியினர் களத்தில் வரிந்து கட்டுவார்கள்.

  ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 82 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 51-ல் தென்ஆப்பிரிக்காவும், 30-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக்கோப்பையில் மோதிய 5 ஆட்டங்களில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

  போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

  பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், ஷதப் கான், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, உஸ்மா மிர், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.

  தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது லிசாத் வில்லியம்ஸ்.

  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

  செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. #SAvPAK
  தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடைபெற்றது.

  டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பாபர் ஆசம் (23), பகர் சமான் (17) ஓரளவு ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களும், கேப்டன் சோயிப் மாலிக் 18 ரன்களும் சேர்த்தனர்.

  சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 8 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ரிக்ஸ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

  பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஹென்ரிக்ஸ் (5), மலன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டஸ்சன் 35 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.


  டஸ்சன்

  அதன்பின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 29 பந்தில் 55 ரன்கள் விளாசினாலும், தென்ஆப்பிரிக்காவால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

  இதனால் பாகிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 3 விக்கெட்டும் சதாப் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
  டி20 கிரிக்கெட் தொடரில், தொடர் வெற்றிகளை குவித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. #SAvPAK
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தொடர்களை கைப்பற்றி வந்த அந்த அணி, ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

  பாகிஸ்தான் அணி கடந்த 10 தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் (இரண்டு முறை), உலக லெவன் அணி, இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி வாகை சூடியிருந்தது. இது உலக சாதனையாகும்.

  இந்நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக சேஸிங்கில் தோல்வியை சந்திக்காக பாகிஸ்தான், கேப் டவுனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.  நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து டி20 தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்து வந்ததற்கு தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. #SAvPAK
  தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று பகல்-இரவாக ஆட்டமாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 241 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

  தொடக்க வீரர் பகர் சமான் 70 ரன்னும், இமாத் ஹசிம் 47 ரன்னும் எடுத்தனர். பிரிடோரியஸ், பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டும், ஸ்டெயின், ரபாடா, முல்டர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் 58 பந்தில் 83 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் டு பிளிசிஸ், வான்டர் டஸ்சன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 50 ரன்கள எடுத்தனர். முகமது அமீர், உஸ்மான் ஷின்வாரி, ‌ஷஹீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.


  டு பிளிசிஸ்

  இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே 2-வது, 3-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. பாகிஸ்தான் முதல் மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

  அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. முதல் ஆட்டம் கேப்ட வுனில் நாளை நடக்கிறது.
  சர்பிராஸ் அகமதுக்கு ஐசிசி நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ICC #PCB
  தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோ நான்கு விக்கெட் வீழ்த்தியதுடன், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

  37-வது ஓவரின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பெலுக்வாயோவை நோக்கி பாகிஸ்தான் அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து ஸ்லெட்ஜிங் செய்தார். ஸ்டம்பில் இருந்த மைக்கில் சர்பிராஸ் அகமதின் குரல் தெளிவாக பதிவாகியிருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

  தனது கருத்துக்கு டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார் சர்பிராஸ் அகமது. அத்துடன் பெலுக்வாயோவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் சர்பிராஸ் அகமதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்றார்.

  இதனால் பிரச்சனை அத்துடன் முடிந்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்தது. ஆனால் போட்டி நடுவர் இந்த பிரச்சனையை ஐசிசி பார்வைக்கு கொண்டு சென்றார். ஐசிசி நான்கள் போட்டிகளில் விளையாட சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதித்தது.

  இந்நிலையில் ஐசிசி தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘சர்பிராஸ் அகமதுக்கு எதிரான ஐசிசி-யின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

  சர்பிராஸ் அகமது டுவிட்டர் மூலமாகவும், நேரடியாகவும் மன்னிப்பு கேட்டார். டு பிளிசிஸ் நாங்கள் மன்னித்து விட்டோம் என்று கூறினார். இதனால் வீரர்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட்டதாக எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்து கோரிக்கைகளும் ஐசிசி-யால் புறக்கணிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.
  தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறிக்கு எதிரான வகையில் ஸ்லெட்ஜிங் செய்த சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. #SAvPAK
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டர்பனில் 2-வது போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் சொற்ப ரன்களில் சுருண்டது.

  தென்ஆப்பிரிக்கா சேசிங் செய்யும்போது, நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பெலுக்வாயோ சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து பெலுக்வாயோவை ஸ்லெட்ஜிங் செய்தார்.

  உருது மொழியில் பேசிய சர்பிராஸ் அகமதின் வாய்ஸ், ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதற்கு அர்த்தம் தெரிந்த பின்னர் கடும் விமர்சனம் எழும்பியது. சர்பிராஸ் அகமது 3-வது போட்டி தொடங்குவதற்கு முன் பெலுக்வாயோவிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டார்.

  இருந்தாலும் ஐசிசி இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் சர்பிராஸ் அகமது விளையாடமாட்டார்.
  பெலுக்வாயோ குறித்து சர்பிராஸ் அகமது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
  தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் மோதிய 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்யும்போது, பெலுக்வாயோ பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தென் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசினார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் கூறும்போது, ‘‘சர்பிராஸ் அகமது தனது பேச்சு குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவரை நாங்கள் மன்னித்து விட்டோம்’’ என்றார்.
  தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. #SAvPAK
  டர்பன்:

  தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. 

  இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினார்கள். பாகிஸ்தானின் ஹசன் அலி 59 (45) மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கண்டார். இவர் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களையும் விளாசினார். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 41 (59) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.  தென்ஆப்பரிக்கா சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டுகளும், ஷம்சி 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

  204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஹெண்ட்ரிக்ஸ், அம்லா களமிறங்கினர். ஷகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட அம்லா 8 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். ஷகின் ஷா அப்ரிடி வீசிய நான்காவது ஓவரில், 5 ரன்கள் எடுத்திருந்த ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கேப்டன் பேஃப் டு பிளசிஸ் 8 ரன்னில் வெளியேறினர்.   இதையடுத்து ஹி வேன் டெர் டுசன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  பொறுப்புடன் விளையாடிய டுசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 (123) ரன்கள் சேர்த்தார். மில்லர் 31 (26) ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சார்பில் ஷகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களும், ஷதப் கான் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.  4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் பெலுக்வாயோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-1 என தென்ஆப்பிரிக்க அணி சமன் செய்தது. 3-வது ஒருநாள் போட்டி 25-ந் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது. #SAvPAK

  ஹசன் அலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் #SAvPAK
  தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

  அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் (5), அடுத்து வந்த பாபர் ஆசம் (12) ஆகியோரை ரபாடா வெளியேற்றி பாகிஸ்தானுக்கு தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை போட்டார். அதன்பின் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது.


  3 விக்கெட் வீழ்த்திய ஷம்சி

  அந்த நேரத்தில் கேப்டன் சர்பிராஸ் அகமது உடன் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஜோடி சேர்ந்தார். ஹசன் அலி ருத்ரதாண்டவம் ஆட பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஹசன் அலி 38 பந்தில் தலா மூன்று பவுண்டரி, சிக்சருடன் அரைசதம் அடித்தார்.


  4 விக்கெட் வீழ்த்திய பெலுக்வாயோ

  பாகிஸ்தான் ஸ்கோர் 202 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சர்பிராஸ் அகமது 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமது - ஹசன் அலி ஜோடி 90 ரன்கள் குவித்தது. அடுத்து ஷஹீன் அப்ரிடி களம் இறங்கினார். ஹசன் அலி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 45.5 ஓவரில் 203 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

  இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.