என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
    • மும்பை-குஜராத் ஆகிய இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது.

    மும்பை:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (தலா 10 புள்ளிகள்), குஜராத் ஜெயன்ட்ஸ் (8) ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (6), உ.பி. வாரியர்ஸ் (6) ஆகியவை வெளியேற்றப்பட்டன.

    டெல்லி, மும்பை அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி 15-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது? என்பது நாளை தெரியும். மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேறும்.

    இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது. வதோதராவில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 9 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் விளையாடும்.

    அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட் டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • விராட் கோலி 1 இடம் பின்தங்கி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.

    ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையை இன்று ஐசிசி-யை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10- இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அதன்படி 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 1 இடம் பின் தங்கி 5-வது இடத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற நியூசிலாந்து வீரர் 14 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • இகா ஸ்விடெக் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் கரோலினாவை எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • பெகுலா 7-5, 1-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

    இண்டியன்வெல்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனையான இகா ஸ்விடெக்கும் செக் வீராங்கனையான கரோலினா முச்சோவாவும் மோதினர்.

    இதில் இகா ஸ்விடெக் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் கரோலினாவை எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையாக ஜெசிகா பெகுலாவும் உக்ரைன் வீராங்கனையான எலினா மைகைலிவ்னாவும் மோதினர். இதன் முதல் செட்டை பெகுலா 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    அடுத்த 2 செட்டை எலினா 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார். இதனால் பெகுலா 7-5, 1-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா அலெக்ஸாண்ட்ரோவ்னாவும் சீன வீராங்கனையான ஜெங் கின்வென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    • சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்
    • பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    இந்த வெற்றியை இந்திய வீரர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா அவரது ஸ்டைலில் கொண்டாடினார். பிட்ச் மத்தியில் கோப்பையை வைத்து பாண்ட்யா இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல ஸ்டைலாக போஸ் கொடுப்பார்.

    2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற போதும் அவரது தனித்துவமான ஸ்டைலில் போஸ் கொடுத்தார். அதே மாதிரி இந்த முறையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். இந்தப் பதிவு தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
    • இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளில் கைப்பற்றி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா வென்ற 7-வது கோப்பை இதுவாகும்.

    இந்நிலையில் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்தியாவிற்கு என் வாழ்த்துகள். இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி. நியூசிலாந்து அணியில் இடம்பெற்றதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

    என ரச்சின் கூறினார்.

    4 போட்டிகளில் விளையாடிய ரச்சின், 263 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷப்பண்டின் தங்கை சாக்‌ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார்.
    • திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார்.

    டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்டின் தங்கை சாக்ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார். இவர்களது திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. 

    இதையொட்டி திருமண சடங்குகள் நேற்று தொடங்கியது. திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார். இதே போல் சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தோனி, சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் குத்தாட்டம் போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ரிஷப் பண்டின் தங்கை திருமணத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது டெஸ்ட் போட்டி 1877-ம் ஆண்டில் நடந்தது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டு கால போட்டி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 1977-ம் ஆண்டு நடந்தது.

    மெல்போர்ன்:

    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது டெஸ்ட் போட்டி 1877-ம் ஆண்டில் நடந்தது. மெல்போர்னில் நடந்த அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டு கால போட்டி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 1977-ம் ஆண்டு நடந்தது. இவ்விரு டெஸ்டிலும் ஆஸ்திரேலியா தலா 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டு கால கொண்டாட்டம் 2027-ம் ஆண்டில் தொடங்குகிறது. இதையொட்டி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் சிறப்பு டெஸ்ட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 2027-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மெல்போர்னில் இந்த டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் நேற்று அறிவித்தார்.

    ஆஸ்திரேலிய மைதானங்களில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவாக பிங்க் பந்தில் நடந்துள்ளது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் பிங்க் பந்து டெஸ்ட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

    • 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்ததுடன், அவருக்கு எதிராக போராட்டமும் வலுத்ததால் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

    புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் சிங் தேர்வானார். இதனால் சர்ச்சை தொடர்ந்தது. அத்துடன் புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிந்த சில நாட்களில் 15 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரிஜ் பூஷனின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடத்தப்படும் என்று புதிய நிர்வாகிகள் அறிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட 3 நாளிலேயே இந்திய மல்யுத்த சம்மேளனத்தை, மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க பூபிந்தர் சிங் பாஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

    இந்த நிலையில் 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது. இதனால் மல்யுத்த சம்மேளனம், தேசிய விளையாட்டு சம்மேளனத்துக்கான அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளது. விளையாட்டு மற்றும் வீரர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம், புதிய நிர்வாகிகள் இடையே அதிகார சமநிலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.

    'மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுவதில் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
    • அது தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

    இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் கூட மேடையில் இடம்பெறவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு "விதிமுறைகள்" தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளிக்கப்பட்டுள்ளது. "எங்களுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் புகார் தெரிவித்து இருக்கிறோம்," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

    அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புகாருக்கு ஐ.சி.சி. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. "பாக். கிரிக்கெட் வாரிய மான்டரியன்கள் பார்த்தால், ஐ.சி.சி. சி.இ.ஓ. ஜெஃப் அலார்டைஸ் கூட மேடையில் ஏறவில்லை. இதற்கான காரணம் விதிமுறைகள் தான்," என்று ஐ.சி.சி. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • அல்பைன் அணியின் மாற்று வீரராக இந்தியாவின் குஷ் மைனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    • பார்முலா1 கார்பந்தயத்தில் தடம் பதிக்கும் 3-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.

    மும்பை:

    கார்பந்தயத்தில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார்பந்தயம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான பந்தயம் மொத்தம் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதலாவது சுற்று வருகிற 16-ந்தேதி மெல்போர்னில் ஆஸ்திரேலிய கிராண்ட்பிரியுடன் தொடங்குகிறது.

    இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் களம் காணுகிறார்கள். இவற்றில் அல்பைன் அணியும் ஒன்று. இந்த அணிக்காக கார் ஓட்டும் பிரதான வீரர்களாக ஜேக் டூஹான் (ஆஸ்திரேலியா), பியரே கேஸ்லி (பிரான்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் அல்பைன் அணியின் மாற்று வீரராக இந்தியாவின் குஷ் மைனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 24 வயதான குஷ் மைனி ஏற்கனவே பார்முலா2 பந்தயங்களில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம் பார்முலா1 கார்பந்தயத்தில் தடம் பதிக்கும் 3-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் ஆகியோர் பார்முலா1 கார்பந்தயத்தில் பஙகேற்று இருக்கிறார்கள்.

    • டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மும்பை அணி 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தது.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பார்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53, ரிச்சா கோஷ் 36, பெர்ரி 49 ரன்கள் அடித்துள்ளனர்.

    இதையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை களமிறங்கியது.

    இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டி ஆர்சிபி அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

    • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், தைவானின் சு லீ யாங் உடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 13-21 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-17, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து விலகினார்.

    ×