என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.
    • பாகிஸ்தானின் மோசமான தோல்விக்கு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    கராச்சி:

    சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆனால் தொடரை நடத்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடம் பிடித்தது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார்.

    நான் சில நாட்களுக்கு முன் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை சந்தித்தேன். மைதானத்தை மேம்படுத்த அவர் செய்த முன்முயற்சிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. அவர் மேலும் கடாஃபி மைதானத்தை மெருகேற்ற விரும்புகிறார். ஆனால் அவர் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என கூறினார்.

    உங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் தொடங்கி இயக்குநர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

    கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரிசெய்ய முடியும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால் தான் அணியும் முன்னேற்றம் அடையும்.

    நாம் எப்போதும் தயாரிப்புகளைப் பற்றிப் பேசுகிறோம், ஒரு நிகழ்வு வந்து தோல்வியடையும் போது அறுவை சிகிச்சை பற்றிப் பேசுகிறோம். உண்மை என்னவென்றால் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யூவில் உள்ளது என தெரிவித்தார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
    • மற்றொரு இந்திய வீரரான லக்‌ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.

    பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் டோமா 21-19, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் பிரணாயை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே பிரனாய் வெளியேறியது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார். அந்த போட்டி மாலை 6.25 மணிக்கு தொடங்குகிறது.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டி நேற்று நடந்தது.

    இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, போலந்தின் ஜேன் ஜிலின்ஸ்கி-பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 3-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-8 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
    • கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளது.

    உலக அளவில் பேசப்படும் டி20 தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் 18-வது சீசன் இந்த மாதம் 22-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் நிறைய வீரர்கள் மற்ற அணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஹோம் மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது.

    அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர்தான் பயன்படுத்தப்படும் என பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது.
    • ரூ. 18 கோடிக்கு டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்ட அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

    இந்த தொடருக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. இதனால் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் கேப்டன் பதவியை நிராகரித்துள்ளதாகவும் ஒரு வீரராக அணிக்கு பணியாற்ற விரும்புவதாகவும் கேஎல் ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அக்சர் படேலை ரூ. 18 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது குறிப்பிடதக்கது.

    • சச்சின், ரோகித் தொடக்க வீரர்களாக கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
    • இந்த அணியில் பும்ராவுக்கு இடம் கிடைக்கவில்லை.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, உலகின் சிறந்த ஒருநாள் அணியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏழு ஐசிசி கோப்பைகளை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்தியா ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு கேப்டனாக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்துக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மாவை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.

    மூன்றாம் வரிசையில் விராட் கோலியும் நான்காம் வரிசையில் மொஹிந்தர் அமர்நாத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 1983-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வெற்றியில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றவர்.

    2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங் ஐந்தாம் வரிசையிலும் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆறாம் வரிசையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஏழாம் வரிசையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கபில் தேவ், எட்டாம் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்ததாக அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

    வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சமி மற்றும் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை.

    சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி ஆகிய நான்கு வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் தனது சிறந்த ஒருநாள் அணியில் இடம் அளித்துள்ளார்.

    அதேபோல, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார்.

    1983 உலகக் கோப்பை வென்ற மொஹிந்தர் அமர்நாத் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்-டைம் ஒருநாள் போட்டி இந்திய அணி:

    சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி, மொஹிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, ஜாகீர் கான்.

    • கார்லோஸ் அல்கராஸ், டெனிஸ் விக்டோரோவிச் ஷபோவலோவுடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்ற அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்தியன்வெல்ஸ்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் கனேடிய வீரரான டெனிஸ் விக்டோரோவிச் ஷபோவலோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்ற அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையற் பிரிவு ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை சபலென்கா 6-1, 6-2 என்ற கணக்கில் இத்தாலி வீராங்கனை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப் 7-1, 6-2 என்ற கணக்கில் கிரேக்க வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் மார்ச் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார்.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் அணியில் வழக்கமான வீரர்கள் மிட்செல் சான்ட்னர், டெவான் கான்வே, கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

    இதன் காரணமாக நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அணியின் அனுபவ வீரரான கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. இதன் காரணமாக இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம், டிம் செய்ஃபெர்ட், பென் சீயர்ஸ் மற்று, ஃபின் ஆலன் ஆகியோருக்கு இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்து டி20 அணி:

    மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்செல் ஹெய், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷாம், வில்லியம் ஓ'ரூர்க், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது சென்னைக்கு செல்ல இருந்தேன்.
    • அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்றனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கடைசியாக இடம் பிடித்தவர் வருண் சக்கரவர்த்தி.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்துடன் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தை வருண் ஈர்த்தார். இதனையடுத்து ஒருநாள் தொடரில் இடம் கிடைத்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

    அதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்தார். ஆனால் லீக் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கடினம் என பேசப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை நாக் அவுட் போட்டிகளில் களமிறங்கி அசத்தினார்.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான வாய்ப்பு குறித்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வெளிப்படையாக பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது சென்னைக்கு செல்ல இருந்தேன். அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்றனர். பின் ஒருநாள் தொடர் முடிந்து வீட்டிற்கு கிளம்பலாம் என இருந்தபோது சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாட துபாய் செல்ல போகிறோம் என்றனர். இப்போது கோப்பையை வென்றுவிட்டோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    இவ்வாறு வருண் கூறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
    • 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை வென்றது வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கோப்பையுடன் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பு முடிந்த பின்னர் அங்கிருந்து கிளம்பிய ரோகித், சாம்பியன்ஸ் கோப்பையை மறந்து விட்டு சென்றார். இதனை கவனித்த அதிகாரி ஒருவர் கோப்பையை எடுத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இதேபோல் சாம்பியன்ஸ் டிராபி கொடுப்பதற்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு வெள்ளை நிற கோட் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீரர்களாக அந்த கோட்டை வாங்கினர். அப்போது கேஎல் ராகுல் மறந்துபோய் பேட்டிங் பேட்களுடன் அதை வாங்க சென்றார். இதனை பார்த்த இந்திய அணி வீரர்கள் ராகுலை பார்த்து சிரித்தனர். உடனே சுதாரித்து கொண்ட கேஎல் ராகுல் பேட்களை கழற்றினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



     


    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லோகேஷ் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.
    • மயங்க் யாதவை லக்னோ அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது.

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

    இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த நவம்பர் மாதம் நடந்த ஏலத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான லோகேஷ் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.

    இந்நிலையில் அவர் இந்த ஐபிஎல் தொடரின் முதல் சில பாதிகளை தவரவிட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ராகுல் மனைவிக்கு இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் முதல் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசவ சமயத்தில் மனைவியை அருகில் இருந்து கவனிக்க விரும்பும் லோகேஷ் ராகுல் ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.

    இதேபோல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அகாடமியில் காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.

    அவர் எப்போது முழு உடல் தகுதியை எட்டுவார் என்பது தெரியவில்லை. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளது. மயங்க் யாதவை லக்னோ அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்பில் இருந்து சிந்து விலகி இருந்தார்.
    • சிந்து தனது முதல் மோதலில் தென்கொரியாவின் கா என் கிம்மை சந்திக்கிறார்.

    பர்மிங்காம்:

    பழம்பெருமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி தொடரில் இந்திய வீரர்கள் பிரகாஷ் படுகோனே 1980-ம் ஆண்டும், கோபிசந்த் 2001-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்றனர். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் பட்டம் வென்றதில்லை.

    மொத்தம் ரூ.12.65 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து களம் இறங்குகிறார். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகிய சிந்து தனது முதல் மோதலில் தென்கொரியாவின் கா என் கிம்மை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத், சிங்கப்பூரின் ஜியா மின் யோவுடன் மோதுகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார். இன்னொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பிரான்சின் தோமா ஜூனியர் போபோவுடன் தனது மோதலை ஆரம்பிக்கிறார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, துருவ் கபிலா-தனிஷா, சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியாத் ஜோடியும் கலந்து கொள்கின்றன.

    ×