என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2016 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது முறைகேடு வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட்டது.

    இதையடுத்து பி.சி.சி.ஐ.யை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. புதிதாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவியேற்றவுடன் இந்த நிர்வாக குழு பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இதையடுத்து பி.சி.சி.ஐ நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

    உச்சநீதிமன்றத்தின் நிர்வாக குழுவின் 33 மாத நிர்வாகம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ தலைவராக அதிகாரப்பூர்வமாக சவுரவ் கங்குலி இன்று பதவியேற்றார். மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் பதவியேற்றார். அடுத்த 9 மாதங்களுக்கு கங்குலி பிசிசிஐ-க்கு தலைமை தாங்குவார். 

    மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா புதிய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜே ஷா செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்களும் இன்று பதவியேற்றனர்.

    முன்னாள் பி.சி.சி.ஐ தலைவரும், நிதித்துறை இணை மந்திரியுமான அனுராக் தாக்கூரின் தம்பி அருண் துமால் பொருளாளராகவும், கேரளாவைச் சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ் இணை செயலாளராகவும் பதவியேற்றுள்ளனர்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வெளிநாடுகளில் உள்ளது போன்று இந்தியாவிலும் குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.
    ராஞ்சி:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 டெஸ்ட் போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், புனே, ராஞ்சியில் நடைபெற்றது. இந்த தொடரில் ரசிகர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது. சில நாட்கள் மைதானம் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது. இந்தியாவில் மொத்தம் 27 மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 2000-ம் ஆண்டுக்கு பிறகு மட்டும் 18 ஸ்டேடியங்களில் டெஸ்ட் போட்டி அரங்கேறி இருக்கிறது.

    வெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவில் பெரிய அணிகள் வரும்போது மெல்போர்ன், அடிலெய்டு, பிரிஸ்பேன், சிட்னி, பெர்த் ஆகிய மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இங்கிலாந்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் லண்டன் லார்ட்ஸ், ஓவல், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், நாட்டிங்காம் ஆகிய இடங்களில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்தும் இத்தகைய பாணியையே பின்பற்றுகின்றன.

    இதே போல் இந்தியாவிலும் பாரம்பரியமிக்க, பிரபலமான இடங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா, மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, மொஹாலி, நாக்பூர் போன்ற இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கும் போது எப்போதும் அமோக வரவேற்பு கிடைப்பது உண்டு. அதை மனதில் வைத்து கோலி இவ்வாறு கூறியிருக்கிறார்.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது:-

    இந்தியாவில் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் நீண்ட காலமாகவே விவாதித்து வருகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், நிரந்தரமான டெஸ்ட் மைதானங்கள் தேவை. எல்லா மைதானங்களிலும் டெஸ்ட் போட்டியை நடத்தக்கூடாது. சில இடங்களில் ரசிகர்கள் கூட்டம் வருவதில்லை.

    எனவே இந்தியாவில் வலுவான 5 டெஸ்ட் மைதானங்கள் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இங்கு வரும் வெளிநாட்டு அணிகள் தாங்கள் இந்த 5 மைதானங்களில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

    இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. அவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் போட்டிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இது 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு சரியாக இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியாவில் கால்பதிக்கும் வெளிநாட்டு அணிகளுக்கு தாங்கள் இந்த 5 மைதானங்களில், இத்தகைய ஆடுகளங்களில் தான் ஆடப்போகிறோம், ரசிகர்கள் வருகை இப்படி தான் இருக்கும் என்பவை எல்லாம் தெரிய வேண்டும். அதுவே சவாலான விஷயமாக இருக்கும்.

    நமது அணி வெளிநாடு சென்று 4 டெஸ்டுகளில் பங்கேற்க போகிறோம் என்றால், இந்த மைதானத்தில் தான் விளையாடப்போகிறோம், அங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியப்போகிறது என்பதை எல்லாம் முன்கூட்டியே அறிந்து கொள்கிறோம்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    தென்ஆப்பிரிக்காவை ‘ஒயிட்வாஷ்’ செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்ற விராட் கோலி மேலும் கூறியதாவது:-

    ஒட்டுமொத்த இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். உண்மையான நோக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும்போது சாதகமான முடிவுகள் தானாகவே வந்து சேரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த அணியாக திகழ வேண்டும், ஒவ்வொரு அணிக்கும் கடும் போட்டி அளிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த மனநிலை தான் கைகொடுக்கிறது. எத்தகைய சூழலிலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணமே, எங்களது வெற்றியின் ரகசியம் ஆகும்.

    இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் வியப்பூட்டும் வகையில் இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி பதற்றத்தையும், தயக்கத்தையும் தாண்டி களத்தில் ஜொலித்த விதம், தொடக்க வீரராக களம் கண்ட முதல் தொடரிலேயே தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்ட அவருக்கே ஒட்டுமொத்த பெருமையும் சேரும்.

    இவ்வாறு கோலி கூறினார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இதன்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்கிறார்.

    இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக மத்திய மந்திரி அனுராக் தாகூரின் தம்பியும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம், துணை தலைவராக மஹிம் வர்மாவும் பொறுப்பேற்கிறார்கள். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பதை தொடர்ந்து கடந்த 33 மாதங்களாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட நிர்வாக பணிகளை கவனித்து வந்த வினோத்ராய் தலையிலான நிர்வாக கமிட்டியின் செயல்பாடு முடிவுக்கு வருகிறது.

    பொதுக்குழு கூட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘பொதுக்குழு கூட்டத்தில் முதலில் கடந்த 3 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். அடுத்து தேர்தல் அதிகாரி, புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பார். நாளைய நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கங்குலியுடன் இன்று (நேற்று) கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எல்லா விஷயங்களும் நடந்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தான் எங்களை இந்த பணிக்கு நியமித்தது. கோர்ட்டு உத்தரவின்படியே நாங்கள் இந்த பணியில் இருந்து விடுபடுகிறோம். கோர்ட்டு உத்தரவின்படி தான் எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. எங்களுக்கு என்ன பணி கொடுக்கப்பட்டதோ? அதனை நாங்கள் செய்தோம்’ என்றார்.
    பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மிட்செல் லீயை (கனடா) வீழ்த்தினார்.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மிட்செல் லீயை (கனடா) வீழ்த்தினார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சுபாங்கர் தேவ் 15-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் தாமி சுகிர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்தார்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் வெற்றி, கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
    ராஞ்சி:

    தென்ஆப்பிரிக்காவை பந்தாடிய பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:-

    உலகின் எந்த இடத்தில் விளையாடினாலும் ஆடுகளம் பற்றி கவலைப்படுவதில்லை. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது தான் தேவை. அதில் தான் எப்போதும் கவனம் செலுத்துகிறோம். நம்மிடம் உள்ள பேட்டிங் கிளிக் ஆகி, பந்து வீச்சாளர்களும் 20 விக்கெட்டுகளும் வீழ்த்தும் போது பெராரி கார் போல் நமது அணியும் பட்டைய கிளப்பும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் வெற்றி, கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன். வழக்கமாக இந்தியாவில் நடக்கும் தொடர்களில் ஒன்றிரண்டு வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த தொடரில் 6-7 வீரர்கள் பிரகாசித்துள்ளனர். இரட்டை சதம் அடித்த கேப்டன் விராட் கோலி, கேப்டன்ஷிப்பில் முன்மாதிரியாக இருக்கிறார். தொடக்க வீரர்கள் இருவரும் இரட்டை சதம் அடித்துள்ளனர். மிடில் வரிசையில் ரஹானே செஞ்சுரி போட்டார். புஜாரா, ஜடேஜா தங்களது பங்களிப்பை அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினர். இந்த மாதிரி ஒருங்கிணைந்த பங்களிப்பைத் தான் இந்திய அணி விரும்புகிறது.

    புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீமின் பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் முதல் விக்கெட் வீழ்த்திய போது, அதை பிஷன்சிங் பெடி பார்த்து இருந்தால் அற்புதம் என்று கொண்டாடியிருப்பார் என்று கூறினேன். அந்த அளவுக்கு அவரது இடக்கை சுழற்பந்து வீச்சு ஆக்‌ஷன் அருமையாக இருக்கிறது. பதற்றமின்றி தொடங்கிய அவர் முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் ஒவ்வொரு பந்தும் மிரட்டின. சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் 4 விக்கெட்டுகளுடன் நதீம் தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கி இருப்பது எனக்கு மகிழ்ச்சியே.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
    ஸ்ரீநிவாசனை திட்டியதாக கூறி ஸ்ரீசாந்தின் வாய்ப்பை தடுத்ததாக கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக பிசிசிஐ அவருக்கு ஆயுட்கால தடைவிதித்தது. பிசிசிஐ-யின் ஆயுட்கால தடையை எதிர்த்து கோர்ட்டில் வெற்றி பெற்றுள்ளார். இருந்தாலும் தற்போது 36 வயதாகும் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்ததுள்ளது.

    2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நான் இடம்பெறாததற்கு தினேஷ் கார்த்திக்-தான் காரணம் என ஸ்ரீசாந்த் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார்.

    மேலும், இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில் ‘‘நான் ஸ்ரீநிவாசனை திட்டயதாக தினேஷ் கார்த்திக், அவரிடம் சொல்லியிருக்கிறார் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணி அறிவிக்கப்பட்டபோது அதில் எனக்கு இடமில்லை. இதற்கு ஒரே காரணம் தினேஷ் கார்த்திக் ஸ்ரீநிவாசனிடம் என்னைப் பற்றி சொல்லியதுதான். தினேஷ் கார்த்திக் இதை நீங்கள் படித்தீர்கள் என்றால், எனக்கும் எனது குடும்பதிற்கும் நீங்கள் செய்தது மன்னிக்க முடியாததாகும்.

    அடுத்த வருடம் நீங்கள் கேரளாவுக்கு விளையாட வரும்போது, என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடவுள் ஆசிர்வதிப்பார்’’ என்று தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து கேள்ளி எழுப்பியதற்கு தினேஷ் கார்த்திக் பதில் அளிக்கையில் ‘‘ஸ்ரீசாந்த் என்ன கூறியிருக்கிறார் என்பதை நான் அறிந்தேன். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு நான்தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தால் கூட, அது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும்’’ என்றார்.
    கிரிக்கெட் வீரர்களின் போராட்டத்தில் ஒன்றுமில்லை. அவர்கள் மிரட்டுகிறார்கள் என வங்காளதேச கிரிக்கெட் போர்டின் இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார்.
    வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்நாட்டு கிரிக்கெட் போர்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டிற்கு திரும்பமாட்டோம் என ஷாகிப் அல் ஹசன் உள்பட சீனியர் வீரர்கள் பத்திரிகைகளுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

    இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. வீரர்கள் பேராட்டத்தால் இந்தத்தொடர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் போராட்டத்தில் ஒன்றுமில்லை, நாட்டின் கிரிக்கெட் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கான சதி என வங்காளதேச கிரிக்கெட் போர்டின் இயக்குனர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘இந்தியத் தொடர் நெருங்கும் நேரத்தில் வீரர்களின் எதிர்பாராத இந்த போராட்டம், நாட்டின் கிரிக்கெட்டிற்கு எதிரான சதியாக பார்க்கப்படுகிறது. இந்த சதிக்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடிப்போம்’’ என்றார்.

    இயக்குனர் ஜலால் யுனுஸ் கூறுகையில் ‘‘கிரிக்கெட் வீரர்கள் கோபமாகவும், ஏமாற்றமாகவும், விரக்தியாகவும் இருப்பதாக நாங்கள் காணவில்லை. அவர்கள் கிரிக்கெட் போர்டின் முன்புதான் கோரிக்கைகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள் மீடியாக்கள்களுக்கு பேட்டியளித்துள்ளனர். இதில் ஒன்றுமில்லை. இது மிரட்டல்தான்’’ என்றார்.
    எம்எஸ் டோனியின் எதிர்காலம் குறித்து தேவைப்படும்போது பிசிசிஐ தலைவர் கங்குலி என்னிடம் பேசுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் ஓய்வில் இருக்கிறார். இதனால் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா தொடர்களில் அவர் விளையாடவில்லை.

    அடுத்த மாதம் இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எம்எஸ் டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவிடம் பேச விரும்புகிறேன் என்று பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் எம்எஸ் டோனி விவகாரம் குறித்து கங்குலி ஏதாவது பேசினாரா? என்று விராட் கோலியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விராட் கோலி பதிலளிக்கையில் ‘‘பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளேன். அவர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்பான விஷயம். இதுவரை அவர் எம்எஸ் டோனி விவகாரம் குறித்து என்னிடம் பேசவில்லை.

    அவருக்கு தேவை ஏற்படும்போது என்னை தொடர்பு கொண்டு பேசுவார். அவர் என்னிடம் பேச விரும்பும்போது, நான் அவரை சந்தித்து பேசுவேன்’’ என்றார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி இந்தியர்களுக்கான தீபாவளி பரிசு என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.
    ராஞ்சி:

    தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி 20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    இதற்கிடையே, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 என தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. 
     
    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றி இந்தியர்களுக்கான தீபாவளி பரிசு என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது.
    இந்த வெற்றியை அனைத்து இந்தியர்க்ளுக்கும் தீபாவளி பரிசாக இந்திய அணி வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக ஷேக் ஹசினா கொல்கத்தா வரும் நிலையில் பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்க கங்குலி தீர்மானித்துள்ளார்.
    கொல்கத்தா: 

    வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணிக்கு எதிராக  மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 

    2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது.  இந்த போட்டியை காண வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.  பிரதமர் ஷேக் ஹசினா அந்த அழைப்பை ஏற்று போட்டியை காண ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என பெங்கால்  கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

    வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா

    இது குறித்து கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள 2வது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று  போட்டியை காண வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 21ம் தேதி அவர் கொல்கத்தா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    நவம்பர் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொல்கத்தா வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அப்போது இந்த போட்டியை காண வருமாறு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என தெரிவித்தார். 

    ‘எல்லாம் சரியாக நடந்தால், இருநாட்டு பிரதமர்கள் மற்றும் மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி மூவரும் ஈடன் கார்டனில்  கிரிக்கெட்டைப் பார்ப்பார்கள்’ என மற்றொரு அதிகாரி கூறினார்.  

    இதற்கிடையில், வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது  கோரிக்கைகள் நிறைவேறும் வரை சர்வதேச போட்டிகள் உள்பட எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மாவின் திறமையை விமர்சனம் செய்ய இங்கிலாந்து வீரருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு சதம், ஒரு இரட்டை சதத்துடன் 529 ரன்கள் குவித்தார்.

    ரோகித் சர்மாவின் ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் அவரது சாதனையை விமர்சனம் செய்துள்ளார்.

    ரவுனாக் கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை விவரித்து பாராட்டியிருந்தார். அதற்கு பதில் அளித்து நிக் காம்ப்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வெளிநாட்டு தொடரில் விளையாடும்போது ரோகித் சர்மாவின் நிலைமை என்ன?’’ என்று பதிவிட்டிருந்தார்.

    இதனால் கடும் கோபம் அடைந்த ரோகித் சர்மாவின் ரசிகர்கள் நிக் காம்ப்டனுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். 

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்
    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒரு சதம், ஒரு இரட்டை சதத்துடன் 340 ரன்கள் குவித்த மயாங்க் அகர்வாலின் சாதனை பேசப்படாமல் போய்விட்டது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என வென்றது.

    இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக பேசப்பட்டது. அதேவேளையில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வாலின் ஆட்டம் பேசப்படாமல் போய்விட்டது.

    விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் (215) விளாசினார். ரோகித் சர்மா சதம் (176) அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்த மயங்க் அகர்வால், முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய வீரர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

    2-வது இன்னிங்சில் ரோகித் சர்மா 127 ரன்கள் குவித்த நிலையில், மயங்க் அகர்வால் 7 ரன்னில் வெளியேறினார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. மயாங்க் அகர்வாலின் இரட்டை சதம் எடுபடாமல் போய்விட்டது.

    புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ரோகித் சர்மா 14 ரன்னில் வெளியேறிய நிலையில், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் (108) அடித்தார். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (254) அடித்தார். இதனால் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    மயங்க் அகர்வால்

    ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா இரட்டை சதம் (212) அடிக்க, மயங்க் அகர்வால் 10 ரன்னில் வெளியேறினார். இதனால் ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒட்டுமொத்தமாக மூன்று சதங்களுடன் 529 ரன்கள் குவித்த ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    இரண்டு சதங்களுடன் 340 ரன்கள் குவித்த மயங்க் அகர்வாலால் ஒரு ஆட்ட நாயகன் விருதைக்கூட பெற முடியாமல் ஏமாற்றமே அடைய முடிந்தது.
    ×