என் மலர்
புதுச்சேரி
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பே புதுவை அரசியல் களம் களை கட்ட தொடங்கியது.
அதிலும் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, அரசு கவிழ்ப்பு, கட்சி தாவல் என தேர்தல் களம் அனல் பறந்தது. முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமிநாராயணன் ஆகியோரின் திடீர் ராஜினாமாவும், என்.ஆர்.காங்கிரசுக்கு தாவியதும் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் நமச்சிவாயத்தை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோரும் காங்கிரசின் நிர்வாகிகள் பலரும் பா.ஜனதாவுக்கு இடம் மாறினர்.
இதனால் 10 நாட்களாக பா.ஜனதா பக்கம் பெரும் அலை வீசியது. பா.ஜனதா தலைமையில்தான் புதுவையில் கூட்டணி உருவாகும் என்றும், பா.ஜனதாதான் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் என்ற நிலையும் ஏற்பட்டது.
பா.ஜனதாவின் முயற்சியால்தான் ஆட்சியே கவிழ்ந்தது என்ற தோற்றம் ஏற்பட்டது. அங்குதான் முதல் திருப்பத்தை ரங்கசாமி விதைத்தார்.
ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணன் ஆகியோர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தபோதுதான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியின் பிரதான இடத்தில் ரங்கசாமி இருந்தார் என தெரியவந்தது.
காங்கிரஸ் அரசு கவிழ பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஒன்றாக இணைந்து ஓரணியாக செயல்பட்டன. இதனால் இந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இன்றி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அடுத்த திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை ரங்கசாமி நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் ரங்கசாமி வெளியிடாமல் வழக்கம்போல மவுனம் காத்து வந்தார்.
அடுத்தகட்டமாக காங்கிரசிலிருந்து கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி. ஆறுமுகம், வன்னியர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் செந்தில் கவுண்டர் ஆகியோர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தனர்.
இதில் ஏ.கே.டி.ஆறுமுகம் ரங்கசாமியை நேரடியாக எதிர்த்து 2 முறை போட்டியிட்டவர். கே.எஸ்.பி.ரமேஷ் கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபாலை எதிர்த்து கதிர்காமம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர். தேர்தலுக்கு பின் காங்கிரசில் இணைந்து முக்கிய பொறுப்பு பெற்று ரங்கசாமியை எதிர்த்து வந்தார்.
இந்நிலையில் ரங்கசாமியின் கோட்டை என கருதப்படும் கதிர்காமம், இந்திராநகர் தொகுதிகளை சேர்ந்த கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி.ஆறுமுகமும் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் ரங்கசாமியின் தந்திரத்தை நிரூபிப்பதாக இருந்தது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும் துணையாக இருந்தார்.
இதனிடையே பா.ஜனதாவை சேர்ந்த புதுவை தலைவர்கள், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் ரங்கசாமியை தொடர்பு கொண்டனர். ரங்கசாமியோ தன்னை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் எனக்கூறி அடுத்த அதிர்ச்சியை அளித்தார். பேச்சுவார்த்தை நடத்தி வந்த புதுவை மாநில தலைவர்கள், மேலிட பொறுப்பாளர்களுக்கு பிடி கொடுக்காமல், ரங்கசாமி ஆன்மிக பயணம் மேற்கொண்டுவந்தார்.
தொடர்ந்து எந்த பதிலும் கூறாமல் ரங்கசாமி மவுனம் சாதித்தார். இதனால் ஒரு கட்டத்தில் பா.ஜனதா அதிருப்தி அடைந்தது. கூட்டணி தொடருமா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் தங்கள் பங்கில் போட்டியிட பா.ஜனதாவும் வேட்பாளர் பிரமுகர்களை தேடிப்பிடித்து கட்சியில் இணைக்க தொடங்கியது.
இதனிடையே ரங்கசாமியின் பிடிவாதத்தையும், நழுவிச்செல்வது குறித்தும் பா.ஜனதா மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா மேலிடம் நேரடியாக ரங்கசாமியிடம் பேசியது. என்.ஆர்.காங்கிரசை சேர்ந்தவர்களும் வரும் காலத்தில் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தாலும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவோடு சுமூகமாக செல்ல வேண்டிய நிலை இருப்பதை சுட்டிக்காட்டினர்.
மத்தியில் இன்னும் 3½ ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினர். ஏற்கனவே 4 தேர்தலில் கூட்டணியாக செயல்பட்டுள்ளோம். ஒரு சில தொகுதிகளை இழந்தாலும், கூட்டணியில் தொடர்வதே வரும்கால ஆட்சிக்கு மத்திய அரசின் சலுகைகள், நிதி கிடைக்க உதவியாக இருக்கும் என்பதையும் எடுத்துக்கூறினர்.
இதில் ஒரு சிலருக்கு விருப்பம் இல்லை. ஒரு சிலருக்கு சீட் கிடைக்காது என்ற எண்ணம் இருந்தது. இதனால் அவர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
இருப்பினும் ரங்கசாமி எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தனர். இதன்பின் கூட்டணியில் தொடர ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.
அதேநேரத்தில் பா.ஜனதா மேலிடமும் ரங்கசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்கவும், அவர் கேட்கும் தொகுதியை அளிக்கவும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதுவையில் ரங்கசாமியே தலைமை வகிப்பார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. மவுனத்தையே ஆயுதமாக்கி தான் நினைத்ததை சாதிக்கொண்டார் ரங்கசாமி.
புதுவை அரசியலில் திடீர் திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது.
புதுவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளில் இந்த கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தன. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியிலும் இணைந்து செயல்பட்டன.
இந்தநிலையில் திடீரென கூட்டணியில் இருந்து பிரிந்து தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்ததுடன் ரங்கசாமியுடன் கூட்டணி குறித்து பேச முயன்றது. ஆனால் ரங்கசாமி பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பெரும்பாலானோர் பா.ஜ.க. கூட்டணியை விரும்பாததே ரங்கசாமியின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.
பா.ஜ.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிப்பதை கூட உறுதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவே நேரடியாக ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசுக்கு 17 தொகுதிகளை விட்டுக் கொடுப்பதாகவும், முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க சம்மதிப்பதாகவும் அமித்ஷா உறுதி அளித்ததாக தெரிகிறது. இதை ரங்கசாமி ஏற்றுக் கொண்ட நிலையில் மீதமுள்ள 13 தொகுதியை பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பிரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணிக்கு பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் அமித்ஷா பேசியதையடுத்து ரங்கசாமியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, இன்னும் 3 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியே நீடிக்கும். எனவே சட்டமன்ற தேர்தலில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றாலும் அவர்கள் தயவு இன்றி யூனியன் பிரதேசமான புதுவையில் எதையும் சாதிக்க முடியாது என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் தொடர ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதுதொடர்பாக ரங்கசாமி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக முறைப்படி பா.ஜ.க. மேலிடம் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.
இதனிடையே நேற்று என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து கேட்டனர். அவர்களில் ஒரு சிலரிடம் பா.ஜ.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்து தேர்தலை சந்திக்க முடிவு செய்து இருப்பதாக ரங்கசாமி தெரிவித்ததாக என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு போக்கு காட்டி வந்த ரங்கசாமி தற்போது கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதால் இதுநாள்வரை நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, தொகுதி உடன்பாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
புதுவையில் பாரதிய ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியில் தொடர ரங்கசாமி முடிவு செய்துள்ளதையடுத்து, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுடன் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் நிர்மல்குமார் சுரானா நிருபர்களிடம் கூறுகையில்,
எங்களது கூட்டணியில் ரங்கசாமி தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்த கூட்டணி வருகிற தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெறும். ரங்கசாமியின் தலைமையை ஏற்க தயாராக உள்ளோம். தொகுதி பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.
புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 2-வதுகட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 2-வதுகட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பேசினோம்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர். எங்கள் கட்சியின் தலைமை தெரிவித்த கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம். 2 தரப்பினரும் தகவல்களை பரிமாறிக் கொண்டோம். அவர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கையை தெரிவித்தனர்.
எங்கள் கட்சியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வருகிறார். அவர் தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். விரைவில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு விடும். தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் பிற கூட்டணி கட்சிகளுடனும் பேசுவோம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
நீண்ட நாட்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் கட்சியை விட்டுப் போகிறார்களே? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே செல்பவர்கள் அதிருப்தியில் செல்லவில்லை. பா.ஜ.க.வின் மிரட்டலால் சிலர் செல்கிறார்கள். சிலர் நிர்ப்பந்தம் காரணமாக செல்கிறார்கள் என்றார்.
புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலபிள்ளை வீதியை சேர்ந்தவர் ஷகிலா (வயது 51). பிரெஞ்சு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகாத இவர் தனது தந்தை மற்றும் சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஷகிலாவின் தந்தை அஷ்ரப் வீட்டின் மாடியில் தனியாக வசித்து வருகிறார்.
இ்ந்தநிலையில் ராசு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவரது மனைவி இருதய மேரி(38) இவர்களது வீட்டில் வேலை செய்து வந்தார். ஷகிலா தனது நகைகளை எல்லாம் வீட்டின் மாடியில் தந்தை அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஷகிலா நகைகளை சரிபார்க்க பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த நெக்லஸ், செயின், கம்மல், தங்க காசுகள், வளையல், மோதிரம் என 150 பவுன் தங்க நகைகளை காணவில்லை. பீரோ உடைக்காமல் நகைகள் மட்டும் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், தங்கள் வீட்டிற்கு வேலைக்கார பெண் தவிர வேறு யாரும் வெளியில் இருந்து வருவதில்லை என்று கூறினர்.
இதனை தொடர்ந்து போலீசார் இருதய மேரியை பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அவர் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
ஷகிலாவின் வீட்டில் வேலை செய்து வந்த இருதயமேரி மாடியில் உள்ள அறையை சுத்தம் செய்யும் போது அங்கு பீரோவில் நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டார். யாரும் இல்லாத நேரத்தில் அவ்வப்போது ஒவ்வொன்றாக அந்த நகைகளை திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது. மொத்தமாக திருடினால் சிக்கிக் கொள்வோம் என்று கருதி சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் நகைகளை சிறுக சிறுக எடுத்துச் சென்றதும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதைத்தொடர்ந்து போலீசார் இருதயமேரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகூர் மேரி வீதி கன்னியக்கோவில் சாலையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 59). இவர் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர். இவரது மனைவி கல்யாணி (56). கை, கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு சென்றும் மூட்டுவலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த கல்யாணி, நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டு கொட்டகையில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கி, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கல்யாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருமாள் கொடுத்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாகூர்:
பாகூர் அருகே கரையாம் புத்தூர் மாரிநகர் கன்னிய கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார்.
இவரது மனைவி கல்யாணி (வயது58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. கல்யாணி கடந்த 10 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தும் வலி குணமடையவில்லை. இதனால் தினமும் கல்யாணி அவதிக்குள்ளாகி விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பெருமாள் தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பகுதியில் உள்ள ஆட்டு கொட்டகையில் மனைவி சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கல்யாணியை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கல்யாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புதுச்சேரி:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்தவர் மன்சூர். இவரது மகன் இலியாஸ் (வயது30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து இலியாஸ் புதுவை வந்தார்.
வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பையில் ஒரு தனியார் டிராவல்ஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு வசித்து வந்தார்.
அப்பகுதியில் பழைய இரும்பு-பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசித்த டெல்லியை சேர்ந்த ரீனா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
கடந்த 2-ந் தேதி மயங்கிய நிலையில் இலியாசை அவரது மனைவி ரீனா மற்றும் ரீனாவின் பெற்றோர் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இலியாஸ் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இலியாசின் உடலை ரீனாவின் பெற்றோர் கொண்டு சென்று சுல்தான் பேட்டையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இறந்து போன இலியாசின் கழுத்தில் காயம் இருந்ததால் அவர்கள் சந்தேகமடைந்து உடலை புதைக்க அனுமதிக்கவில்லை.
இதையடுத்து ரீனா மற்றும் அவரது பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் சம்பவ நடந்த இடம் தமிழக பகுதி என்பதால் கோட்டக்குப்பம் போலீசாருக்கு வில்லியனூர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் உடல் பரிசோதனை முடிவில் இலியாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரீனாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ரீனா முன்னுக்கு முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய போது ரீனாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் ரீனாவிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். இலியாசுடன் நடந்த திருமணத்துக்கு பிறகும் ரீனா ஒரு வாலிபருடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார். இதனை இலியாஸ் கண்டித்து வந்துள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரீனா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இலியாசை வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து ரீனா கள்ளக்காதலன் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஆட்சியை பிடிக்கும் எண்ணத்துடன் பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இதனால் பெரும்பான்மை இல்லாமல் போனதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்புக்கு துணையாக இருந்தன.
இந்த கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். இதுகுறித்து பேச பா.ஜ.க. தூதுவிட்ட போதிலும் ரங்கசாமி பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார்.
புதுச்சேரியில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முகாமிட்டு இருந்தநிலையில் ஆன்மிக பயணமாக கோவில், குளம் என ரங்கசாமி ஊர், ஊராக சென்று வருகிறார். அவரது நடவடிக்கைகள் பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இருப்பினும் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருந்தால்தான் தேர்தலில் முழு வெற்றியை ருசிக்க முடியும் என்பதால் அவரை விடாமல் பா.ஜ.க. துரத்தி வருகிறது.
வரும் 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அதற்குள் பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி உடன்பாடு செய்து கொள்ள பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் ரங்கசாமி முடிவு எதுவும் செய்யாமல் இருந்து வருவதை பயன்படுத்தி புதுவையின் தனித்தன்மையை காக்க மதசார்பற்ற கூட்டணியில் இணையவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளரான நாஜிம் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்முகமான காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. ரங்கசாமிக்கு விடுத்துள்ள இந்த அழைப்பு பா.ஜ.க. கூட்டணி கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி தொடர்பான விவகாரத்தில் தனது தரப்பை தெளிபடுத்தாமல் மவுனம் காத்து வரும் நிலையில் ரங்கசாமிக்கு அரசியல் வட்டாரத்தில் மவுசு அதிகரித்துள்ளது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரங்கசாமி வழக்கமான தனது பணிகளில் ஈடுபட்டு வருவது புதுவை அரசியல் வட்டாரம் சூடு குறையாமல் இருந்து வருகிறது.
புதுவையில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் பல்வேறு நோய் பாதித்த நிலையில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. நேற்று 3-வது நாளாக இந்த தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இதற்காக மாநிலத்தில் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தற்போது பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களைவிட பொதுமக்களின் பங்கேற்பு அதிக அளவில் உள்ளது.
குறிப்பாக நேற்று முன் தினம் சுகாதார பணியாளர்கள் 250 பேரும், முன்கள பணியாளர்கள் 581 பேரும் மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருந்தனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில் 599 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 941 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் புதுவையில் 1,286 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. 19 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 39 ஆயிரத்து 794 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 166 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
38 ஆயிரத்து 959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 669 பேர் பலியாகி உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.90 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






