search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    மவுனத்தை ஆயுதமாக்கி நினைத்ததை சாதித்த ரங்கசாமி

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மவுனத்தையே ஆயுதமாக்கி தான் நினைத்ததை சாதிக்கொண்டார் ரங்கசாமி.
    புதுச்சேரி:

    சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பே புதுவை அரசியல் களம் களை கட்ட தொடங்கியது.

    அதிலும் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, அரசு கவிழ்ப்பு, கட்சி தாவல் என தேர்தல் களம் அனல் பறந்தது. முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமிநாராயணன் ஆகியோரின் திடீர் ராஜினாமாவும், என்.ஆர்.காங்கிரசுக்கு தாவியதும் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆரம்பத்தில் நமச்சிவாயத்தை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோரும் காங்கிரசின் நிர்வாகிகள் பலரும் பா.ஜனதாவுக்கு இடம் மாறினர்.

    இதனால் 10 நாட்களாக பா.ஜனதா பக்கம் பெரும் அலை வீசியது. பா.ஜனதா தலைமையில்தான் புதுவையில் கூட்டணி உருவாகும் என்றும், பா.ஜனதாதான் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் என்ற நிலையும் ஏற்பட்டது.

    பா.ஜனதாவின் முயற்சியால்தான் ஆட்சியே கவிழ்ந்தது என்ற தோற்றம் ஏற்பட்டது. அங்குதான் முதல் திருப்பத்தை ரங்கசாமி விதைத்தார்.

    ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணன் ஆகியோர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தபோதுதான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியின் பிரதான இடத்தில் ரங்கசாமி இருந்தார் என தெரியவந்தது.

    காங்கிரஸ் அரசு கவிழ பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஒன்றாக இணைந்து ஓரணியாக செயல்பட்டன. இதனால் இந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இன்றி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அடுத்த திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை ரங்கசாமி நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் ரங்கசாமி வெளியிடாமல் வழக்கம்போல மவுனம் காத்து வந்தார்.

    அடுத்தகட்டமாக காங்கிரசிலிருந்து கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி. ஆறுமுகம், வன்னியர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் செந்தில் கவுண்டர் ஆகியோர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தனர்.

    இதில் ஏ.கே.டி.ஆறுமுகம் ரங்கசாமியை நேரடியாக எதிர்த்து 2 முறை போட்டியிட்டவர். கே.எஸ்.பி.ரமேஷ் கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபாலை எதிர்த்து கதிர்காமம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர். தேர்தலுக்கு பின் காங்கிரசில் இணைந்து முக்கிய பொறுப்பு பெற்று ரங்கசாமியை எதிர்த்து வந்தார்.

    இந்நிலையில் ரங்கசாமியின் கோட்டை என கருதப்படும் கதிர்காமம், இந்திராநகர் தொகுதிகளை சேர்ந்த கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி.ஆறுமுகமும் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் ரங்கசாமியின் தந்திரத்தை நிரூபிப்பதாக இருந்தது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும் துணையாக இருந்தார்.

    இதனிடையே பா.ஜனதாவை சேர்ந்த புதுவை தலைவர்கள், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் ரங்கசாமியை தொடர்பு கொண்டனர். ரங்கசாமியோ தன்னை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் எனக்கூறி அடுத்த அதிர்ச்சியை அளித்தார். பேச்சுவார்த்தை நடத்தி வந்த புதுவை மாநில தலைவர்கள், மேலிட பொறுப்பாளர்களுக்கு பிடி கொடுக்காமல், ரங்கசாமி ஆன்மிக பயணம் மேற்கொண்டுவந்தார்.

    தொடர்ந்து எந்த பதிலும் கூறாமல் ரங்கசாமி மவுனம் சாதித்தார். இதனால் ஒரு கட்டத்தில் பா.ஜனதா அதிருப்தி அடைந்தது. கூட்டணி தொடருமா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் தங்கள் பங்கில் போட்டியிட பா.ஜனதாவும் வேட்பாளர் பிரமுகர்களை தேடிப்பிடித்து கட்சியில் இணைக்க தொடங்கியது.

    இதனிடையே ரங்கசாமியின் பிடிவாதத்தையும், நழுவிச்செல்வது குறித்தும் பா.ஜனதா மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா மேலிடம் நேரடியாக ரங்கசாமியிடம் பேசியது. என்.ஆர்.காங்கிரசை சேர்ந்தவர்களும் வரும் காலத்தில் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தாலும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவோடு சுமூகமாக செல்ல வேண்டிய நிலை இருப்பதை சுட்டிக்காட்டினர்.

    மத்தியில் இன்னும் 3½ ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினர். ஏற்கனவே 4 தேர்தலில் கூட்டணியாக செயல்பட்டுள்ளோம். ஒரு சில தொகுதிகளை இழந்தாலும், கூட்டணியில் தொடர்வதே வரும்கால ஆட்சிக்கு மத்திய அரசின் சலுகைகள், நிதி கிடைக்க உதவியாக இருக்கும் என்பதையும் எடுத்துக்கூறினர்.

    இதில் ஒரு சிலருக்கு விருப்பம் இல்லை. ஒரு சிலருக்கு சீட் கிடைக்காது என்ற எண்ணம் இருந்தது. இதனால் அவர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

    இருப்பினும் ரங்கசாமி எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தனர். இதன்பின் கூட்டணியில் தொடர ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.

    அதேநேரத்தில் பா.ஜனதா மேலிடமும் ரங்கசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்கவும், அவர் கேட்கும் தொகுதியை அளிக்கவும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதுவையில் ரங்கசாமியே தலைமை வகிப்பார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.

    இதனைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. மவுனத்தையே ஆயுதமாக்கி தான் நினைத்ததை சாதிக்கொண்டார் ரங்கசாமி.

    Next Story
    ×