என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    என்.ஆர்.காங்கிரஸ் தங்களது கூட்டணியிலேயே நீடிக்கும் என்று நம்பிய பா.ஜ.க.வுக்கு ரங்கசாமி கூட்டணி பேச்சுவார்த்தையில் கண்ணாமூச்சி காட்டி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
    புதுச்சேரி:

    தொகுதி பேச்சுவார்த்தையில் விடாது துரத்தியும் ரங்கசாமி கண்ணாமூச்சி காட்டுவதால் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    புதுவை சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. காங்கிரஸ் அணியில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாக நிற்கிறது.

    இந்தநிலையில் தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை என்.ஆர்.காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளின் டெல்லி மற்றும் சென்னை தலைமை சார்பில் நடந்து வருகிறது.

    இதற்காக குழு அமைத்து அந்தந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் என்.ஆர்.காங்கிரசில் அந்த நிலைமை இல்லை. அதாவது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படவில்லை. எதுவானாலும் அந்த கட்சி தலைவர் ரங்கசாமி எடுப்பதுதான் முடிவு.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து செயல்பட்ட போதிலும் தற்போது தொகுதி உடன்பாடு, முதல்-அமைச்சர் வேட்பாளர் ஆகிய விவகாரங்களில் ஒருங்கிணைந்து முடிவு எடுக்க முடியாத நிலை இருப்பதால் இழுபறி நீடித்து வருகிறது.

    அதாவது என்.ஆர்.காங்கிரஸ் தங்களது கூட்டணியிலேயே நீடிக்கும் என்று நம்பிய பா.ஜ.க.வுக்கு ரங்கசாமி கூட்டணி பேச்சுவார்த்தையில் கண்ணாமூச்சி காட்டி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க. கூட்டணியை விரும்பாததாலும் பிற கட்சிகளில் இருந்து என்.ஆர்.காங்கிரசில் சேர்ந்துள்ளவர்களின் ஆலோசனை காரணமாகவும் பா.ஜ.க. கூட்டணியில் தொடருவது குறித்து ரங்கசாமி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் ரங்கசாமியை வழிக்கு கொண்டுவர பா.ஜ.க. தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கூட்டணி பேச்சின்போது பிடி கொடுக்காமல் பார்க்கலாம், நேரம் கொடுங்கள் என்று கூறி தாமதம் செய்து வருகிறார்.

    கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருந்தால் மட்டுமே வெற்றியை உறுதி செய்ய முடியும் என்று கருதுவதால் பா.ஜ.க.வும் விட்டுக் கொடுத்து வருகிறது. ஆனால் உறுதியான பதில் அளிக்காமல் ரங்கசாமி போக்கு காட்டி வருகிறார்.

    அவ்வப்போது வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சேலம், கோவை என்று சுற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று ரங்கசாமி திருச்செந்தூருக்கு சென்று விட்டார்.

    ரங்கசாமியின் பிடி கொடுக்காத நடவடிக்கை பா.ஜ.க. மேலிட தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா, ர‌‌ஷியா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகை விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு இட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில் ஆளுமையிலும், மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கும் முன்னணி பெண் தலைவர்களை தேர்ந்தெடுத்து வருகிற 7-ந்தேதி சிகாகோ இலியானாஸ் நகரில் நடைபெறும் 9-வது ஆண்டு மகளிர் தின விழாவில் அமெரிக்க எம்.பி. டேனி கே.டேவிஸ் காணொலி காட்சி மூலம் விருதுகளை வழங்குகிறார்.

    இவ்விழாவில் இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா, ர‌‌ஷியா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனாவுக்கு பின் வருங்கால உலக சீரமைப்பில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த வருடம் விருது வழங்கப்பட இருக்கின்றது. முதல் விருது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்-க்கும், 2-வது விருது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் வழங்க உள்ளனர்.

    மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 20 பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பெண்ணிடம் நகைகளை திருடிய 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கீதா (வயது 40). இவரது தம்பி திருமணத்திற்காக சம்பவத்தன்று நெய்வேலியில் இருந்து புதுவையை அடுத்த பொம்மையார்பாளையத்திற்கு வந்தார். திருமணம் முடிந்த பின்னர் அவர் நெய்வேலி புறப்பட்டார்.

    இதற்காக பொம்மையார்பாளையத்தில் இருந்த தனியார் பஸ்சில் ஏறி புதுச்சேரிக்கு வந்தார். அப்போது அவர் தனது 19½ பவுன் நகைகளை ஒரு சிறிய மணிபர்சில் வைத்து கைப்பையில் வைத்திருந்தார்.

    பஸ்சில் ஏறிய உடன் அருகில் இருந்த 3 பெண்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். மேலும் அவரது கையில் இருந்த கைப்பையையும் வாங்கி வைத்துக்கொண்டனர்.

    புதுவை புதிய பஸ்நிலையத்திற்கு பஸ் வந்த உடன் கீதா, தனது கைப்பையை அந்த பெண்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அந்த பெண்கள் 3 பேரும் அவரை இடித்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கி அவசர அவசரமாக சென்றனர்.

    இதனால் ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்த கீதா தனது கைப்பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்து 19½ பவுன் நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பஸ்நிலையம் முழுவதும் அந்த பெண்களை தேடினார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து கீதா உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி 3 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் பஸ்நிலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    சங்கராபரணி ஆற்றில் மினி வேனில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று இரவு வில்லியனூர் மெயின் ரோடு குண்டு சாலை சந்திப்பில் ரோந்து பணிமேற்கொண்டனர். அங்குள்ள மூகாம்பிகை நகர் அருகில் ரோந்து சென்ற போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக சென்ற மினிவேனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த மினிவேனில் ஆற்றுமணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து மினிவேனை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வில்லியனூர் உத்திர வாகினிபேட் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது35) என்பதும் இவருக்கு சொந்தமான மினிவேனில் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஜனார்த்தனனை கைது செய்த போலீசார் மணல் ஏற்றி வந்த மினி வேனை பறிமுதல் செய்தனர்.

    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் தயவின்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

    தேர்தலுக்கு பின் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட்டது. இடைத்தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தலில் ஓரணியாக தேர்தலை சந்தித்தனர்.

    இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அமைக்க கட்சித்தலைமை வியூகம் அமைத்து வருகிறது.

    காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ.க்கள், வி.ஐ.பி.க்கள், வேட்பாளர் பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். பல்வேறு கட்சியிலிருந்தும் விலகி பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர்.

    இதனால் பா.ஜனதா கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. மேலும் காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நமச்சி வாயத்துக்கு பா.ஜனதாவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனாலும், கூட்டணியில் பெரிய கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விடுமோ? என ரங்கசாமி கருதுகிறார்.

    முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துப்படுவோமா? என்ற சந்தேகமும் ரங்கசாமியிடம் இருந்தது. பா.ஜனதா மேலிடம், முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க சம்மதமும் தெரிவித்தது. ஆனாலும் ரங்கசாமி, தன்னை பகிரங்கமாக முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரி வருகிறார். அப்படி அறிவித்தால் தொகுதிகளில் சிலவற்றை பா.ஜனதாவுக்கு விட்டுக் கொடுக்கலாம் என்பது அவரின் எண்ணமாக உள்ளது.

    இந்நிலையில் பா.ஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது ரங்கசாமியின் கோரிக்கைகளை கட்சி மேலிடம் பரிசீலித்து வருவதாகவும், அதுவரை பொறுத்திருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூட்டணி முடிவை அறிவிக்காமல் காலதாமதம் செய்வது ஏன்? என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது.

    வழக்கமாகவே ரங்கசாமி வெளிப்படையாக எதனையும் அறிவிக்க மாட்டார். தேர்தல் காலங்களில் வேட்பு மனுதாக்கலின் இறுதிநாள் வரை கூட்டணி, வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை மர்மமாக வைத்திருப்பார்.

    ஆனால், இம்முறை தேர்தல் அறிவிப்பு வெளியானதால் உடனடியாக கூட்டணியை அறிவிக்க பா.ஜனதா விரும்புகிறது. இதற்கிடையே புதுவை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. அந்த கூட்டணியை விட்டு வெளியேற விரும்புகிறது. கட்சி தலைமையிடமும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சமீபகாலமாக காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தி.மு.க. பங்கேற்கவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி உடையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி ஒரு சூழல் உருவாகும்பட்சத்தில் தி.மு.க.வும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணி அமைத்து புதுவை சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிடுகின்றனர்.

    இதற்காக புதுவை தி.மு.க. தரப்பில் ரங்கசாமியை தொடர்ந்து தொடர்புகொண்டு திரைமறைவிலேயே பேசி வருகின்றனர்.

    இதுதான் ரங்கசாமி பா.ஜனதா கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுக்காமல் காலதாமதம் செய்வதற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.

    ஆனாலும், என்.ஆர்.காங்கிரசில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க எவ்வளவு பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ? அதே அளவு கூட்டணி அமைக்க ஆதரவும் தெரிவிக்கின்றனர்.

    ஏனெனில் வரும் காலத்தில் தனி கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால்கூட மத்தியில் பா.ஜனதா ஆட்சி இன்னும் 3½ ஆண்டுகள் நீடிக்கும். யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் தயவின்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதாவோடு இணக்கமாக செயல்பட்டு வந்துள்ளோம். காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதிலும் பா.ஜனதாவுக்கு துணையாக இருந்துள்ளோம். நட்போடு இருந்துவிட்டு திடீரென எதிரியாவது தீராத பகையை உருவாக்கும் என்றும் ரங்கசாமியிடம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக 71 வாக்கு சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா கூறினார்.
    காரைக்கால்:

    தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றோம்.

    அதன் ஒரு கட்டமாக காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களிடையே வினியோகம் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைத்து மக்களிடையே வினியோகம் செய்யும் நடைமுறையினை தொடங்கி வைத்துள்ளோம்.

    மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் சேர்த்து 9 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக 15 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு குழுக்களாக பிரிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசு மற்றும் தனியார் கட்டிட சுவர்களில் அனுமதியின்றி விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கொரோனாவை கருத்தில் கொண்டு, புதிதாக 71 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தி மொத்தம் 234 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தேர்வுகள் தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    கொரோனாவுக்கு பிறகு புதுவையில் பள்ளிகள் நேற்று முதல் முழுநேரமாக இயங்க தொடங்கின. இந்தநிலையில் கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்தார். நேற்று நீடராஜப்பையர் வீதியில் உள்ள சவரிராயலு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார்.

    அப்போது கவர்னரை சந்தித்த ஊழியர்கள் தங்களது சம்பளம் மிக குறைவாக உள்ளது. கடந்த 4 மாதமாக சம்பளமே வழங்கவில்லை. சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். அதன்பின் பள்ளி குழந்தைகள் நடத்திய பொம்மைகள் நாடகத்தை அவர் ரசித்துப் பார்த்தார்.

    தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பல மாதங்களுக்கு பிறகு மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அரை நாட்கள் பள்ளி இருந்தாலும் அவர்களுக்கு தேவையான சத்துணவு வழங்கப்பட வேண்டும். இப்போது காலையில் பால் வழங்குகிறோம்.

    காலை உணவு மாற்றி வழங்கும் திட்டமும் உள்ளது. மாணவர்களின் எலும்பு, மூளை வளர்ச்சிக்கு பால் மிகவும் உதவும்.

    முழுநேரமும் பள்ளிகள் இயங்குவது, தேர்வுகள் நடத்துவது தொடர்பாக இருவிதமான கருத்துகள் உள்ளன. சிலர் முழுநேர பள்ளி வேண்டாம் என்கின்றனர். புதுவையில் தொற்று குறைந்துள்ளது எனவே முழுநேர வகுப்பு தேவை என்று சிலர் கூறுகின்றனர்.

    அதேபோல்தான் தேர்வு வி‌‌ஷயத்திலும் கருத்துகள் உள்ளன. கட்டாய தேர்வுகள் என்று நாங்கள் சொல்லவில்லை. தேர்வுகள் தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் லப்போர்த் வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு செயலாளர் சுந்தரசேன், ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அதன்படி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதன் அடுத்த கட்டமாக 60 வயதை கடந்த அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்த அனைவருக்கும் கடந்த 1-ந் தேதி முதல் 2-ம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் 2-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு மருத்து வமனையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன்பின் அவர்கள் அரை மணி நேரம் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தனர்.

    அப்போது புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். அதேபோல் புதுவை காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

    சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் 25 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பலர் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    புதுவையில் நாளை (இன்று வியாழக்கிழமை) முதல் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு சாக்கில் கட்டி பணத்தை கொடுக்கிறார்கள். அதனால் தான் எம்.எல்.ஏ.க்கள் ஓடினர் என்று வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    கியாஸ் விலை ஆயிரமாகி விட்டது. தேர்தல் வருவதற்குள் ஆயிரத்து 500 ஆகிவிடும். அம்பானி, அதானிக்கு கொடுக்க பணம் போதவில்லை. புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு சாக்கில் கட்டி பணத்தை கொடுக்கிறார்கள். அதனால் தான் எம்.எல்.ஏ.க்கள் ஓடினர்.

    தனி விமானத்தில் பணம் வருகிறது. கியாஸ் விலையை உயர்த்திய காசுதான் அது. பணம் வாங்கிக்கொண்டு ஓடுகிறீர்களே, உங்களுக்கு வெட்கம் இல்லையா?

    பிரதமர் மோடி புதுவைக்கு வரும் போது மாநிலத்துக்கான கடன் தொகையை வழங்குவார், இலவச அரிசி வழங்கப்படும் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.ஆனால், பிரதமர் வந்து சென்றும் எதுவும் சொல்லியபடி நடக்க வில்லை.

    புதுவைக்கு எதிரான கவர்னரை விரட்டி இருக்கிறோம். இன்னொருவரும் அதே போல் வந்துள்ளார்.

    புதுவை சட்டப் பேரவையில் அமைச்சரவை அரங்கில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி உள்ளார். கவர்னர் மாளிகையில் இடம் இருக்கும் போது, பேரவை அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தி ஜனநாயகத்தை அவர் நசுக்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரசில் உள்ள எட்டப்பன்கள் சதியால் ஆட்சி கவிழ்ந்தது என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை மகிளா காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், கியாஸ், டீசல் விலை உயர்வை கண்டித்து அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவைக்கு வந்த பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் 5 ஆண்டாக ஊழல் மலிந்து விட்டது. திட்டங்களை நிறைவேற்றவில்லை. பொய்யை தவிர வேறு எதையும் நாராயணசாமி கூறுவதில்லை. மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று கூறி உள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு எப்படி நடந்தது? என மக்களுக்கு தெரியும். 5 ஆண்டாக மத்திய அரசு புதுவையை புறக்கணித்தது. கிரண்பேடியை நியமித்து திட்டங்களை புறக்கணித்தனர். எதிர்க்கட்சிகள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி செய்தனர். நம் கட்சியை சேர்ந்த எட்டப்பன்கள் சதியினால் ஆட்சி கவிழ்ந்தது.

    இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை விமானத்தில் கொண்டு வந்து எம்.எல்.ஏ.க்களின் வீட்டில் பெட்டிகளை இறக்கி, சாக்கு மூட்டையில் பணத்தை கொடுத்து ஆட்சி மாற்றம் செய்ய வேலை செய்தனர். பல பேர் விலைக்கு போனார்கள். பலரை பொய் வழக்கு போடுவதாக மிரட்டி ஆட்சியை கவிழ்த்தனர்.

    பா.ஜனதாவில் இருந்தவர்கள் மோடி வரும்போது மில்லை திறப்பார், கடன்களை தள்ளுபடி செய்வார் என கூறினார்கள். நாங்களும் மோடி இதனை செய்வார் என எதிர்பார்த்தோம். மோடி வாயால் வடை சுட்டுவிட்டு போய்விட்டார். 7 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தோம். அதற்கு மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

    4 ஆண்டு முன்பு கொண்டுவந்த ஜிப்மர் கிளைக்கு தற்போது அடிக்கல் நாட்டுகிறார். சாகர்மாலா திட்டம் 3 ஆண்டு முந்தைய திட்டம். புதுவைக்கு ரூ.4 ஆயிரம் கோடி கொடுத்தோம் என மோடி பொய் கூறியுள்ளார். நெடுஞ்சாலையில் 185 கி.மீ. தமிழகத்தில் உள்ளது. 26 கி.மீ.தான் புதுவையில் உள்ளது.

    தமிழகத்தில் அடிக்கல் நாட்டாமல், புதுவையில் பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது போல், மக்களை ஏமாற்ற அடிக்கல் நாட்டியுள்ளார்.

    மோடி பாதி பொய்யர், அமித்ஷா முழு பொய்யர். நரேந்திர மோடி ரூ.15 ஆயிரம் கோடி ரெயிலில் அனுப்பினாராம். அதில் பாதியை நான் எடுத்துவிட்டு சோனியாவுக்கும், ராகுலுக்கும் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். அரசு பணம் நாராயணசாமி கைக்கு வருமா? இவர்கள் பொய்யர்கள், புரட்டர்கள். 15 பைசா கூட புதுவை வளர்ச்சிக்கு தரவில்லை.

    41 சதவீத மானியத்தை நிறுத்தி 26 சதவீதம்தான் அளித்தனர். இதுபோல் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை. நம் கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள் என மக்கள் பேசுகின்றனர். ரூ.15 ஆயிரம் கோடி கையாடல் செய்திருந்தால் ஆதாரத்தை சொல்லட்டும்.

    இதை நிரூபிக்காவிட்டால் அமித்ஷா பதவி விலக தயாரா? நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். இதற்கு பதில் வராவிட்டால் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அமித்ஷா மீது காரைக்கால் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு போடுவேன். இருப்பது ஒரு உயிர், அது புதுவை மக்களுக்காக போகட்டுமே.

    புதுவையின் தனித்தன்மையை காக்க நாங்கள் தயாராக உள்ளோம். மோடி, அமித்ஷாவை நம்பி சென்றவர்கள் நடுரோட்டில் நிற்க போகிறார்கள். காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்க்கையில் மேலே வந்ததே கிடையாது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் விலை உயர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அனைத்து பொருட்களின் விலை உயரும். புதுவையை பொறுத்தவரை மதச்சார்பற்ற காங்கிரஸ்-தி.மு.க .கூட்டணி பக்கம்தான் மக்கள் இருப்பார்கள்.

    பா.ஜனதாவை மக்கள் ஆதரித்தால் புதுவையை குட்டிச்சுவராக்கிவிடுவர். ஒன்று தமிழகத்தோடு இணைப்பார்கள். இல்லாவிட்டால் சட்டமன்றத்தை கலைத்து விடுவார்கள். கவர்னருக்கு ஒரு பெரிய மாளிகை உள்ளது. ஆனால், அங்கு கூட்டம் நடத்தாமல் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு கூட்டம் நடத்துகின்றனர்.

    இப்பவே இப்படி, இனி மேல் இப்படி நடந்தால் புதுவையை கூறுபோட்டு விற்று விடுவார்கள். பா.ஜனதாவை ஓட ஓட விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் தலித், மீனவர்கள், வியாபாரிகள், கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினர் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும்.

    கவர்னர் தமிழிசை பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளார். தேர்வுகள் நடத்துவோம் என கூறியுள்ளார். பல்கலைக்கழகத்திலேயே தேர்வுகளை ஆன்லைனில் வைக்கின்றனர். பெற்றோர்கள், மாணவர்களுக்கு பெரும் துரோகத்தை கவர்னர் இழைத்துள்ளார். கவர்னர் தனது உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    புதுச்சேரியில் தனித்துப்போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸிலிருந்து விலகி ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியதாவது:

    * சட்டசபை தேர்தலில் எங்களது நிலைப்பாடு பற்றி எங்கள் கட்சியினருடன் பேசி வருகிறோம்.

    * புதுச்சேரியில் தனித்துப்போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸிலிருந்து விலகி ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

    காங்கிரஸிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்களில் லட்சுமி நாராயணனும் ஒருவர்.

    4 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
    ×