search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    புதுவை அரசியலில் திடீர் திருப்பம்: என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி உறுதி

    புதுவையில் பாரதிய ஜனதா, அதிமுக கூட்டணியில் தொடர ரங்கசாமி முடிவு செய்துள்ளதையடுத்து, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுடன் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை அரசியலில் திடீர் திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது.

    புதுவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளில் இந்த கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தன. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியிலும் இணைந்து செயல்பட்டன.

    இந்தநிலையில் திடீரென கூட்டணியில் இருந்து பிரிந்து தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்ததுடன் ரங்கசாமியுடன் கூட்டணி குறித்து பேச முயன்றது. ஆனால் ரங்கசாமி பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பெரும்பாலானோர் பா.ஜ.க. கூட்டணியை விரும்பாததே ரங்கசாமியின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

    பா.ஜ.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிப்பதை கூட உறுதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷாவே நேரடியாக ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

    அப்போது மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசுக்கு 17 தொகுதிகளை விட்டுக் கொடுப்பதாகவும், முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க சம்மதிப்பதாகவும் அமித்ஷா உறுதி அளித்ததாக தெரிகிறது. இதை ரங்கசாமி ஏற்றுக் கொண்ட நிலையில் மீதமுள்ள 13 தொகுதியை பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பிரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் அமித்‌ஷா பேசியதையடுத்து ரங்கசாமியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, இன்னும் 3 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியே நீடிக்கும். எனவே சட்டமன்ற தேர்தலில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றாலும் அவர்கள் தயவு இன்றி யூனியன் பிரதேசமான புதுவையில் எதையும் சாதிக்க முடியாது என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் தொடர ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால் இதுதொடர்பாக ரங்கசாமி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக முறைப்படி பா.ஜ.க. மேலிடம் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

    இதனிடையே நேற்று என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து கேட்டனர். அவர்களில் ஒரு சிலரிடம் பா.ஜ.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்து தேர்தலை சந்திக்க முடிவு செய்து இருப்பதாக ரங்கசாமி தெரிவித்ததாக என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு போக்கு காட்டி வந்த ரங்கசாமி தற்போது கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதால் இதுநாள்வரை நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, தொகுதி உடன்பாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

    புதுவையில் பாரதிய ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியில் தொடர ரங்கசாமி முடிவு செய்துள்ளதையடுத்து, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுடன் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் நிர்மல்குமார் சுரானா நிருபர்களிடம் கூறுகையில்,

    எங்களது கூட்டணியில் ரங்கசாமி தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்த கூட்டணி வருகிற தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெறும். ரங்கசாமியின் தலைமையை ஏற்க தயாராக உள்ளோம். தொகுதி பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.


    Next Story
    ×