என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முத்தியால் பேட்டையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது சகோதரர் மணிகண்டன் (வயது 30). இவர்களது தாய்- தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.

    இதையடுத்து மணிகண்டன் தனது அண்ணன் முருகன் பராமரிப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே மணிகண்டனுக்கு ஆஸ்துமா நோய் இருந்து வந்தது. இதனால் அவரால் வேலைக்கு எதுவும் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை முருகன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி பிரபாவதி அருகில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார்.

    அப்போது மணிகண்டனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    மதியம் மணிகண்டன் மனைவி பிரபாவதி சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்து செல்ல வீட்டுக்கு வந்தார். அப்போது மணிகண்டன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிகண்டனை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மாணவர்கள், பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமத்தில் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது.

    இதனை தொடர்ந்து அந்த பள்ளிக்கு வருகிற 15-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆசிரியையுடன் பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அவர் வகுப்பு எடுத்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புதுவை மரப்பாலம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் அந்த ஆசிரியரிடம் படித்த மாணவர் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    புதுவையில் அடுத்தடுத்து 2 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என்று யோசனையில் உள்ளனர்.
    புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    புதுச்சேரி:

    சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இதனிடையே, இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக – அதிமுக கூட்டணியில், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளிலும், பாஜக – அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத நிலையில், தமிழகத்தில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், புதுச்சேரி மாணவர்களின் நிலை குறித்து கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    இந்நிலையில், புதுச்சேரிக்கு உட்பட்ட அனைத்து பிராந்தியங்களிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.  

    புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். மாகே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் நிலை குறித்து கேரளா மற்றும் ஆந்திர பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்களின்படி அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் கூறி உள்ளார்.

    ‘மேலும் பள்ளிகள் வாரத்தில் 5 நாட்கள் செயல்படும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மார்ச் 31ம் தேதி வரை செயல்படும். கோடை விடுமுறை ஏப்ரல் 1ம்தேதி தொடங்குகிறது. எனினும், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள், அந்தந்த மாநில பள்ளிக்கல்வி வாரியத்தின் தேர்வு அட்டவணைப்படி நடத்தப்படும்’ என்றும் ஆளுநர் கூறி உள்ளார்.

    பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை, புதுச்சேரி மாநிலத்தில் தமிழகத்தை பின்பற்றியே பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், பெரும்பாலும், தமிழகத்தைப் பின்பற்றியே முடிவுகளை எடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுவையில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

    புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. மற்றொரு அணியாகவும் களமிறங்க உள்ளது.

    இக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 இடங்களும், அ.தி.மு.க.- பா.ஜனதாவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதால் அக்கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.

    அதிக தொகுதிகளை கேட்கவேண்டும் என அக்கட்சி தலைமையை வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டிலும் இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. 15 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

    இதுதொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது. புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், நாஜிம் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவான தொகுதிகளை ஒதுக்கியதால் தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது. அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புதுவையில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தெரிவித்துள்ளார்.

    கட்சி தலைமை ஒப்புதலை பெற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாகூரில் வி.பி.பி.வேலு, காலாப்பட்டில் ஹரிகரன், உப்பளத்தில் சசிக்குமார், திருநாள்ளாறில் ஜிந்தா என்கிற குரு, நெடுங்காடு கோட்டூச்சேரியில் ராம்டீ ஞானசேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    கன்னியக்கோவில் அருகே வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    கன்னியக்கோவில் அடுத்த சுள்ளியாங்குப்பம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 58), கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கமுடைய இவர் கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது மனைவி சுந்தரி கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியில் இருந்த பாஸ்கரன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒருஅறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ், பா.ஜனதா, அதிமுக ஆகியவை ஒன்றிணைந்து புதுச்சேரி தேர்தலை சந்திக்கின்றன.
    தமிழக சட்டசபை தேர்தலுடன் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்திலும் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற 12-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

    கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதிகளை கேட்டு வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் இடம்பிடிப்பது இன்று உறுதியானது. அப்போது ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் கொடுப்பதும், மற்ற தொதிகளை கூட்டணி கட்சிகள் பிரித்துக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டது.

    பா.ம.க.வுடன் பா.ஜனதாவும், அதிமுக-வும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக பா.ம.க. அறிவித்துள்ளது.

    கூட்டணியில் ஐந்து தொகுதிகள் கேட்ட நிலையில், தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாததால் பாமக இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
    புதுவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது55). இவரது மகன் ஆசீப்கான்(33). இவர் எம்.ஜி.ரோட்டில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

    அக்பர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் காந்திவீதி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 4 பேர் அவரை வழிமறித்தனர்.

    இதில் ஒருவர் திடீரென அக்பரின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதனை அக்பர் தட்டிக் கேட்டார்.

    உடனே அந்த 4 பேர் கொண்ட கும்பல் அக்பரிடம் எதற்காக எங்கள் மீது மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்தாய் என கேட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கல்லாலும், கையாலும் அக்பரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சத்தம் போட்டார். உடனே அந்த 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் அக்பரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவரது மகன் ஆசீப்கான் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அக்பரை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பல் வாணரப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

    வானூரில் பணத் தகராறில் லாரியை கடத்தி சென்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சேதராப்பட்டு:

    வானூர் அருகே கனக்கபட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது40).இவர் சொந்தமாக 2 லாரிகள் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது லாரியை கலித்திரம்பட்டை சேர்ந்த சீனு என்ற மணி கண்டன் (32) திருச்சிற்றம் பலத்திலிருந்து கிராவல் ஏற்றிக்கொண்டு கனக செட்டிகுளம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இடையஞ்சாவடி அருகே லாரி வந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் லாரியை வழிமறித்து லாரியை கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து லாரியின் உரிமையாளர் ராஜவேலு ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த கணேசனுக்கும், ராஜவேலுவுக்கும் பண தகராறு இருந்துள்ளது. இதன்காரணமாகவே அவர்கள் லாரியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கணேசனையும் லாரியை கடத்தி சென்ற அவரது ஆதரவாளர்களான புதுவை பூமியான்பேட்டை சேர்ந்த ராஜா (38),மூலக்குளத்தை சேர்ந்த தமிழ்வாணன் (29),உப்பளத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(26), உருளையன் பேட்டையை சேர்ந்த சதீஷ் குமார் (27)ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வானூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

    புதுவையில் நேற்று ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 17, காரைக்காலில் 6, மாகியில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது 72, காரைக்காலில் 11, மாகியில் 3 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 12, காரைக்காலில் 5, மாகியில் 2 பேர் என 19 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 39 ஆயிரத்து 908 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 86 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவ மனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 60 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    புதுவையில் 25, காரைக்காலில் 36, ஏனாமில் ஒருவர், மாகியில் 30 பேர் என 92 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 178 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 670 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பஸ்சில் பயணம் செய்யும்போது பல குறைபாடுகள் இருப்பதாக வாட்ஸ்அப்பிலும், நேரிலும் புகார் வந்ததால் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மக்களோடு மக்களாக பஸ்சில் பயணம் செய்ததாக கவர்னர் தமிழிசை கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக தமிழிசை பொறுப்பேற்ற பிறகு மக்கள் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார்.

    கடலூர் சாலையில் பஸ்சில் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய இடர்பாடுகள், குறைகளை பொதுமக்கள் கவர்னரிடம் புகாராக தெரிவித்திருந்தனர். இதனை நேரில் ஆய்வு செய்ய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முடிவு செய்தார்.

    இதற்காக இன்று காலை 10.40 மணியளவில் கவர்னர் மாளிகையிலிருந்து அந்தோணியார் பள்ளி அருகில் உள்ள கடலூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அங்கு பாகூர் செல்வதற்கு வந்த தனியார் பஸ்சில் ஏறி டிரைவருக்கு எதிரில் இருந்த சீட்டில் அமர்ந்தார். அவருடன் ஆலோசகர் சந்திரமவுலி, பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் உடன் சென்றனர்.

    அப்போது பஸ்சில் இருந்த மக்கள் தாமாக முன்வந்து குறைகளை தெரிவித்தனர். ஒரு மூதாட்டி தனக்கு பென்‌ஷன் வரவில்லை என தெரிவித்தார்.

    மேலும் சிலரும் குறைகளை தெரிவித்தனர். அவர்களை கவர்னர் மாளிகைக்கு வந்து என்னை நேரில் பாருங்கள். உங்கள் குறைகளை தீர்த்து வைக்கிறேன் என தெரிவித்து, அவர்களின் குறைகளை குறித்துக்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பஸ்சில் அபிஷேகப் பாக்கத்தை சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில் சுடுகாட்டுக்கு சாலை வச தியில்லை, பிற இடங்களில் உள்ள குப்பைகளை கொட்டு வதாக தெரிவித்தனர். அந்த பஸ்சில் தவளக்குப்பம் சந்திப்பில் கவர்னர் இறங்கினார். அங்கிருந்து அபிஷேகபாக்கம் செல்லும் பஸ்சில் கவர்னர் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அபிஷேகபாக்கம் பஸ்நிறுத்தத்தில் இறங்கிய கவர்னர், அங்கிருந்து செல்ல பஸ் இல்லாததால் காரில் ஏறி பொதுமக்கள் கூறிய சுடுகாட்டுக்கு சென்று பார்வையிட்டார்.

    சாலை வசதியில்லாதது, குப்பைகள் கொட்டும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் காரில் ஏறி அபிஷேகப்பாக்கம் பஸ்நிறுத்தம் வந்தார். அங்கு மீண்டும் பஸ்சில் ஏறி பயணிகளோடு பயணியாக மரப்பாலம் சந்திப்பில் வந்து இறங்கினார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சாலையில் பயணம் செய்யும்போது பல குறைபாடுகள் இருப்பதாக வாட்ஸ்அப்பிலும், நேரிலும் பலர் புகார் கூறினர். உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மக்களோடு மக்களாக பஸ்சில் செல்ல முடிவெடுத்து இன்று பயணம் செய்தேன். பஸ்சில் இருந்த மக்களும் புகார் கூறினர். நேரிலும் சென்று பார்வையிட்டோம்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் புதிதாக திட்டங்களை அறிவிக்க முடியாது. நடைமுறையில் உள்ள திட்டங்களில் குறைகளை களைய நடவடிக்கை எடுப்போம்.

    மக்களோடு மக்களாக பயணித்தது மகிழ்ச்சியளிக்கிறது. மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மத்திய மந்திரி அமித்ஷா ரங்கசாமியிடம் நேரடியாக வீடியோ காலில் பேசியதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ஜனதா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

    ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என்ற பயம் என்.ஆர்.காங்கிரசுக்கு இருந்தது.

    அதுமட்டுமல்லாமல் காரைக்காலில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, ‘‘புதுச்சேரியில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமையும்’’ என்று கூறினார்.

    புதுவையை பொறுத்தவரையில் பா.ஜனதாவைவிட என்.ஆர்.காங்கிரஸ்தான் செல்வாக்குடன் உள்ளது. அதன் தலைவர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடந்து வந்தன.

    இந்தநிலையில் அமித்ஷா, பாரதிய ஜனதா தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கூறியதால், என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது. எனவே என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு தயாரானது.

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. ரங்கசாமி மவுனம் சாதித்து வந்தார்.

    எனவே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அமையாது என்றே பேச்சு அடிபட்டது.

    இந்தநிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று திடீரென ரங்கசாமியிடம் நேரடியாக வீடியோ காலில் பேசினார். அப்போது முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை ஏற்பதாகவும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 30 இடங்களில் 16 இடங்கள் வழங்குவதாகவும் அமித்ஷா உறுதி அளித்தார்.

    இதை ரங்கசாமி ஏற்றுக்கொண்டார். இதனால் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது.

    என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகள் போக மீதமுள்ள 14 தொகுதிகளை பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. ஆகியவை பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

    இதுசம்பந்தமாக நேற்று பா.ஜனதா மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் ஆகியோருடன் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பக்தவச்சலம், ஜெயபாலன், டி.பி.ஆர். செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இதைதொடர்ந்து இந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பா.ஜனதா 9 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும் போட்டியிடுவது என முடிவு செய்ததாக தெரிகிறது. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து கொள்ளலாம்.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு தலா ஒரு நியமன எம்.எல்.ஏ.வை ஒதுக்கீடு செய்வது என்றும் முடிவு எடுத்துள்ளனர்.

    இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவிக்கிறார்.

    இதேபோல காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இன்று இரு கட்சிகளையும் சேர்ந்த புதுவை தலைவர்கள் சென்னை வந்துள்ளனர்.

    அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அப்போது இறுதி முடிவு எட்டப்படும். கடந்த தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த தடவை அதிக இடங்கள் கேட்பது மட்டுமல்லாமல், முதல்-அமைச்சர் பதவியையும் கேட்கிறது. எனவே தான் அங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×