search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களோடு பஸ்சில் பயணம் செய்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.
    X
    பொதுமக்களோடு பஸ்சில் பயணம் செய்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.

    பொது மக்களோடு பஸ்சில் பயணித்த புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    பஸ்சில் பயணம் செய்யும்போது பல குறைபாடுகள் இருப்பதாக வாட்ஸ்அப்பிலும், நேரிலும் புகார் வந்ததால் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மக்களோடு மக்களாக பஸ்சில் பயணம் செய்ததாக கவர்னர் தமிழிசை கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக தமிழிசை பொறுப்பேற்ற பிறகு மக்கள் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார்.

    கடலூர் சாலையில் பஸ்சில் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய இடர்பாடுகள், குறைகளை பொதுமக்கள் கவர்னரிடம் புகாராக தெரிவித்திருந்தனர். இதனை நேரில் ஆய்வு செய்ய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முடிவு செய்தார்.

    இதற்காக இன்று காலை 10.40 மணியளவில் கவர்னர் மாளிகையிலிருந்து அந்தோணியார் பள்ளி அருகில் உள்ள கடலூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அங்கு பாகூர் செல்வதற்கு வந்த தனியார் பஸ்சில் ஏறி டிரைவருக்கு எதிரில் இருந்த சீட்டில் அமர்ந்தார். அவருடன் ஆலோசகர் சந்திரமவுலி, பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் உடன் சென்றனர்.

    அப்போது பஸ்சில் இருந்த மக்கள் தாமாக முன்வந்து குறைகளை தெரிவித்தனர். ஒரு மூதாட்டி தனக்கு பென்‌ஷன் வரவில்லை என தெரிவித்தார்.

    மேலும் சிலரும் குறைகளை தெரிவித்தனர். அவர்களை கவர்னர் மாளிகைக்கு வந்து என்னை நேரில் பாருங்கள். உங்கள் குறைகளை தீர்த்து வைக்கிறேன் என தெரிவித்து, அவர்களின் குறைகளை குறித்துக்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பஸ்சில் அபிஷேகப் பாக்கத்தை சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில் சுடுகாட்டுக்கு சாலை வச தியில்லை, பிற இடங்களில் உள்ள குப்பைகளை கொட்டு வதாக தெரிவித்தனர். அந்த பஸ்சில் தவளக்குப்பம் சந்திப்பில் கவர்னர் இறங்கினார். அங்கிருந்து அபிஷேகபாக்கம் செல்லும் பஸ்சில் கவர்னர் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அபிஷேகபாக்கம் பஸ்நிறுத்தத்தில் இறங்கிய கவர்னர், அங்கிருந்து செல்ல பஸ் இல்லாததால் காரில் ஏறி பொதுமக்கள் கூறிய சுடுகாட்டுக்கு சென்று பார்வையிட்டார்.

    சாலை வசதியில்லாதது, குப்பைகள் கொட்டும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் காரில் ஏறி அபிஷேகப்பாக்கம் பஸ்நிறுத்தம் வந்தார். அங்கு மீண்டும் பஸ்சில் ஏறி பயணிகளோடு பயணியாக மரப்பாலம் சந்திப்பில் வந்து இறங்கினார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சாலையில் பயணம் செய்யும்போது பல குறைபாடுகள் இருப்பதாக வாட்ஸ்அப்பிலும், நேரிலும் பலர் புகார் கூறினர். உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மக்களோடு மக்களாக பஸ்சில் செல்ல முடிவெடுத்து இன்று பயணம் செய்தேன். பஸ்சில் இருந்த மக்களும் புகார் கூறினர். நேரிலும் சென்று பார்வையிட்டோம்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் புதிதாக திட்டங்களை அறிவிக்க முடியாது. நடைமுறையில் உள்ள திட்டங்களில் குறைகளை களைய நடவடிக்கை எடுப்போம்.

    மக்களோடு மக்களாக பயணித்தது மகிழ்ச்சியளிக்கிறது. மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×