search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    ரங்கசாமியுடன் ‘வீடியோ’ காலில் பேசி கூட்டணியை உறுதிபடுத்திய அமித்ஷா

    மத்திய மந்திரி அமித்ஷா ரங்கசாமியிடம் நேரடியாக வீடியோ காலில் பேசியதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ஜனதா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

    ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என்ற பயம் என்.ஆர்.காங்கிரசுக்கு இருந்தது.

    அதுமட்டுமல்லாமல் காரைக்காலில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, ‘‘புதுச்சேரியில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமையும்’’ என்று கூறினார்.

    புதுவையை பொறுத்தவரையில் பா.ஜனதாவைவிட என்.ஆர்.காங்கிரஸ்தான் செல்வாக்குடன் உள்ளது. அதன் தலைவர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடந்து வந்தன.

    இந்தநிலையில் அமித்ஷா, பாரதிய ஜனதா தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கூறியதால், என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது. எனவே என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு தயாரானது.

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. ரங்கசாமி மவுனம் சாதித்து வந்தார்.

    எனவே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அமையாது என்றே பேச்சு அடிபட்டது.

    இந்தநிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று திடீரென ரங்கசாமியிடம் நேரடியாக வீடியோ காலில் பேசினார். அப்போது முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை ஏற்பதாகவும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 30 இடங்களில் 16 இடங்கள் வழங்குவதாகவும் அமித்ஷா உறுதி அளித்தார்.

    இதை ரங்கசாமி ஏற்றுக்கொண்டார். இதனால் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது.

    என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகள் போக மீதமுள்ள 14 தொகுதிகளை பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. ஆகியவை பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

    இதுசம்பந்தமாக நேற்று பா.ஜனதா மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் ஆகியோருடன் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பக்தவச்சலம், ஜெயபாலன், டி.பி.ஆர். செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இதைதொடர்ந்து இந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பா.ஜனதா 9 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும் போட்டியிடுவது என முடிவு செய்ததாக தெரிகிறது. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து கொள்ளலாம்.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு தலா ஒரு நியமன எம்.எல்.ஏ.வை ஒதுக்கீடு செய்வது என்றும் முடிவு எடுத்துள்ளனர்.

    இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவிக்கிறார்.

    இதேபோல காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இன்று இரு கட்சிகளையும் சேர்ந்த புதுவை தலைவர்கள் சென்னை வந்துள்ளனர்.

    அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அப்போது இறுதி முடிவு எட்டப்படும். கடந்த தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த தடவை அதிக இடங்கள் கேட்பது மட்டுமல்லாமல், முதல்-அமைச்சர் பதவியையும் கேட்கிறது. எனவே தான் அங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×