என் மலர்tooltip icon

    இந்தியா

    • பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டமாக நடைபெறுகிறது.
    • 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற இருக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 101 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    மாநில தலைவர் ராஜேஷ் ராம் கடும்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இதில் 24 பேர் முதல் கட்ட தேர்தலிலும், மீதி 24 பேர் இரண்டாவது கட்ட தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

    • 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.
    • மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

    பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்த நிலையில், முதலில் 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. பின்னர், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 101 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், பீகார் முதற்கட்டத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
    • நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.

    நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டியளித்தார்.

    அப்போது நிருபர் ஒருவர், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த டிரம்ப், ஆமாம், நிச்சயமாக. அவர் (பிரதமர் மோடி) என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.

    ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று இன்று அவர் எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய நிறுத்தம். இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்க வேண்டும்..." என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இரு தலைவர்களுக்கும் இடையில் நேற்று எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை" என்று டிரம்ப் கூற்றை மறுத்துள்ளார்.

    முன்னதாக வெளியுறவு அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில், "இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.

    நிலையான எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்புத் தன்மை ஆகிய இரண்டும் தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை. எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன" என்று பொத்தாம்பொதுவாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்குச் சென்று தரிசித்தார்.

    ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கர்னூல் வந்தார். அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.

    அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீசைலம் சென்றார். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் சிறிது நேரம் தியானம் செய்தார்.

    அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்குச் சென்று தரிசித்தார்.

    இதனைத் தொடர்ந்து நன்னூர் அருகே 'சூப்பர் ஜிஎஸ்டி- சூப்பர் சேமிப்பு' என்ற பொதுக் கூட்டம் நடந்தது. ஆந்திர மாநில கவர்னர் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். முடிவற்ற திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    'சூப்பர் ஜி.எஸ்.டி சூப்பர் சேமிப்பு' என்ற கருப்பொருளில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 450 ஏக்கர் பரப்பளவில் நடந்த இந்த கூட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.
    • மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கிய நாள்.

    இன்று, சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். நேற்று சத்தீஸ்கரில் 27 பேர் ஆயுதங்களை கீழே போட்டனர். மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.

    மொத்தத்தில், கடந்த இரண்டு நாட்களில் 258 இடதுசாரி பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டனர்.

    இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, வன்முறையை கைவிடுவதற்கான அவர்களின் முடிவை நான் பாராட்டுகிறேன்.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சிகளால் நக்சலைட்டு அதன் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

    எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது: சரணடைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள், மேலும் துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளின் கோபத்தை சந்திப்பார்கள்.

    நக்சலைட் பாதையில் இன்னும் இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மைய நீரோட்டத்தில் சேருமாறு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.  

    • 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
    • இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் சந்திக்க உள்ளார்.

    குஜராத் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

    முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார்.

    புதிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.     

    • தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
    • மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் கதி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.

    இந்நிலையில் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    நீதிபதி விக்ரமநாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி இந்த தகவலை தெரிவித்தார்.

    "இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய ஒரு புதிய மத்தியஸ்தர் முன்வந்துள்ளார். இந்த விஷயத்தில் எந்த பாதகமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நல்ல செய்தி" என்று அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து விசாரணை ஜனவரி 2026 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

    அவரது மரண தண்டனையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    • சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தி இருவரும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தனர்.
    • "மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

    பெங்களூருவில் வசித்து வரும் பாஜக மாநிலங்களவை எம்.பியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி கர்நாடக சாதி வாரி கணக்கெடுப்பில் பங்கெடுக்க மறுத்துள்ளார்.

    தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு சாதி மாநிலத்தில் வாரி கணக்கெடுப்பு நடத்தி வரும் நிலையில் சுதா மூர்த்தி தனது தனிப்பட்ட விருப்பமாக தனது சாதி விவரத்தைத் தெரிவிக்க மறுத்துள்ளார். அதை கர்நாடக அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

    சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தி இருவரும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தனர்.

    தாங்கள் இருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாததால், இந்தக் குடும்பத்தின் சாதித் தகவல்களை வழங்குவது அரசுக்கு உதவாது என்று சுதா மூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மேலும், தகவல்களை வழங்காததற்கு அவர் தனிப்பட்ட காரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், சுதா மூர்த்தி இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அரசு என்ற முறையில், இதில் பங்கேற்க யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    சுதா மூர்த்தியின் நிலைப்பாட்டை மதிப்பதாகக் கூறிய அமைச்சர், ""மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

    துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இது குறித்துப் பதிலளிக்கையில், "இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இது தன்னார்வமாகச் செய்யப்பட வேண்டியது," என்று தெரிவித்தார்.

    செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கிய இந்தக் சாதிவாரி கணக்கெடுப்பு, அக்டோபர் 19-ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது.
    • உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

    விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.

    இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

    விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், "விமான விபத்து குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், சுயாதீன விமானப் போக்குவரத்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்" என்று கோரியுள்ளார்.

    மேலும், விமான விபத்து குறித்த புலனாய்வுப் பணியாகத்தின் (AAIB) முதற்கட்ட அறிக்கை "பாரபட்சமாகவும் குறைபாடுகளுடனும் உள்ளது என்றும் விமான விபத்துக்கு விமானி தான் காரணம் என்றும் கூறுகிறது. ஆகவே விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகத்தால் (AAIB) நடைபெற்று வரும் விசாரணையை முடித்து வைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பிரதமர் மோடி ஸ்ரீசைலம் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார்.
    • இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா மாநிலத்திற்கு வருகை தருகிறார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

    இதனையடுத்து, பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவில் மற்றும் கோவில்களில் பூஜை செய்து வழிபட்டார். அவருடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் பிரார்த்தனை செய்தேன். என் சக இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சாமி தரிசனம் செய்தது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலம், ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் நமது மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ததில் பாக்கியம் பெற்றேன். இந்த புனித கோயில் தனித்துவமானது, ஏனெனில் இது ஒரு ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே வளாகத்தில் ஒன்றாகக் காணப்படும் நாட்டின் ஒரே ஆலயமாகும், இது உண்மையிலேயே இந்தியாவில் தனித்துவமான ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.

    • கிருத்திகாவின் சகோதரியும் மருத்துவருமான நிகிதா எம். ரெட்டி மரணத்திற்கான காரணத்தைக் குறித்து ஆராய தொடங்கினார்.
    • கிருத்திகாவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் துயரத்துடன் காணப்பட்ட மகேந்திரா, அடிக்கடி மனைவியின் குடும்பத்தினரைச் சந்தித்து வந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர்    மகேந்திர ரெட்டி (31). இவருக்கும் தோல் நோய் நிபுணரான டாக்டர் கிருத்திகா ரெட்டி (28)க்கும் கடந்த வருடம் மே மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கிருத்திகா தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். கணவர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    முதலில் இது சாதாரண மரணம் என்று கருதப்பட்ட நிலையில், கிருத்திகாவின் சகோதரியும் மருத்துவருமான நிகிதா ரெட்டி மரணத்திற்கான காரணத்தைக் குறித்து ஆராய்ந்தபோதுதான் கொடூரக் கொலை வெளிச்சத்துக்கு வந்தது.

    கிருத்திகாவிற்கு நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்தது, திருமணத்திற்கு முன்பு இதை மனைவி வீட்டினர் தன்னிடம் மறைத்துவிட்டதாக மகேந்திரா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    மேலும் பெங்களூரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்க மகேந்திரா கிருத்திகாவின் குடும்பத்தினரிடம் பெரும் தொகையைக் கேட்டுள்ளார். ஆனால் கிருத்திகாவின் குடும்பத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில்தான் பல மாதங்கள் திட்டமிட்டு, மிகவும் சாமர்த்தியமாக மனைவியை மகேந்திரா கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

    கிருத்திகாவின் இரைப்பை குடல் பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மகேந்திரா அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன் வழங்கும் மயக்க மருந்தான Propofol என்ற அனஸ்தீசியாவை அதிக அளவில் வழங்கி உள்ளார். கிருத்திகா மயக்கமடைவதற்கு முந்திய நாள் இரவும் அவருக்கு ஹெவி டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கிருத்திகா உயிரிழந்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனை தேவையில்லை என்று கூறி, மனைவியின் உடலைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல மகேந்திரா வற்புறுத்தியுள்ளார்.

    ஆனால், கிருத்திகாவின் சகோதரி நிகிதாவின் வேண்டுகோளின் பேரில் போலிஸ் அசாதாரண மரணம் என வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து கிருத்திகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியான பரிசோதனை அறிக்கையில், அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று உறுதியானது.

    கிருத்திகாவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் துயரத்துடன் காணப்பட்ட மகேந்திரா, அடிக்கடி மனைவியின் குடும்பத்தினரைச் சந்தித்து வந்ததால் யாருக்கும் அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வெளியான பரிசோதனை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    டாக்டர் மகேந்திரா தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஒன்பது நாட்களுக்குப் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.    

    • மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வென்டிலேட்டர் மூலம் மாணவிகளை அவர்கள் படம் பிடித்தது சிசிடிவி கேமரா மூலம் உறுதியானது.
    • பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஆர்எஸ்எஸ் உடைய மாணவர் அணி ஆகும்.

    மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்கள் மூவர், கல்லூரி மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக படம் பிடித்த புகாரில் கைது செய்யப்பட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் அரசு கல்லூரியின் முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று புகார் அளித்த பான்புரா போலீசில் புகார் அளித்தார்.

    செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்ற இளைஞர் விழாவின் போது ஏபிவிபி தலைவர்கள் பெண் மாணவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

    மாணவிகள் இந்த சம்பவத்தைப் பற்றி புகார் அளித்ததை அடுத்து, கல்லூரி அதிகாரிகள் கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தனர். மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வென்டிலேட்டர் மூலம் மாணவிகளை அவர்கள் படம் பிடித்தது சிசிடிவி கேமரா மூலம் உறுதியானது.

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ABVP உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி மற்றும் கல்லூரி மாணவர் இணை தலைவர்கள் அஜய் கவுர் மற்றும் ஹிமான்ஷு பைராகி ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.

    அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பன்புரா போலீசார் தெரிவித்தனர்.

    ×