என் மலர்tooltip icon

    இந்தியா

    • பிரதமர் மோடி ஸ்ரீசைலம் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார்.
    • இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா மாநிலத்திற்கு வருகை தருகிறார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

    இதனையடுத்து, பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவில் மற்றும் கோவில்களில் பூஜை செய்து வழிபட்டார். அவருடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் பிரார்த்தனை செய்தேன். என் சக இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சாமி தரிசனம் செய்தது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலம், ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் நமது மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ததில் பாக்கியம் பெற்றேன். இந்த புனித கோயில் தனித்துவமானது, ஏனெனில் இது ஒரு ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே வளாகத்தில் ஒன்றாகக் காணப்படும் நாட்டின் ஒரே ஆலயமாகும், இது உண்மையிலேயே இந்தியாவில் தனித்துவமான ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.

    • கிருத்திகாவின் சகோதரியும் மருத்துவருமான நிகிதா எம். ரெட்டி மரணத்திற்கான காரணத்தைக் குறித்து ஆராய தொடங்கினார்.
    • கிருத்திகாவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் துயரத்துடன் காணப்பட்ட மகேந்திரா, அடிக்கடி மனைவியின் குடும்பத்தினரைச் சந்தித்து வந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர்    மகேந்திர ரெட்டி (31). இவருக்கும் தோல் நோய் நிபுணரான டாக்டர் கிருத்திகா ரெட்டி (28)க்கும் கடந்த வருடம் மே மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கிருத்திகா தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். கணவர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    முதலில் இது சாதாரண மரணம் என்று கருதப்பட்ட நிலையில், கிருத்திகாவின் சகோதரியும் மருத்துவருமான நிகிதா ரெட்டி மரணத்திற்கான காரணத்தைக் குறித்து ஆராய்ந்தபோதுதான் கொடூரக் கொலை வெளிச்சத்துக்கு வந்தது.

    கிருத்திகாவிற்கு நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்தது, திருமணத்திற்கு முன்பு இதை மனைவி வீட்டினர் தன்னிடம் மறைத்துவிட்டதாக மகேந்திரா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    மேலும் பெங்களூரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்க மகேந்திரா கிருத்திகாவின் குடும்பத்தினரிடம் பெரும் தொகையைக் கேட்டுள்ளார். ஆனால் கிருத்திகாவின் குடும்பத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில்தான் பல மாதங்கள் திட்டமிட்டு, மிகவும் சாமர்த்தியமாக மனைவியை மகேந்திரா கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

    கிருத்திகாவின் இரைப்பை குடல் பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மகேந்திரா அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன் வழங்கும் மயக்க மருந்தான Propofol என்ற அனஸ்தீசியாவை அதிக அளவில் வழங்கி உள்ளார். கிருத்திகா மயக்கமடைவதற்கு முந்திய நாள் இரவும் அவருக்கு ஹெவி டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கிருத்திகா உயிரிழந்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனை தேவையில்லை என்று கூறி, மனைவியின் உடலைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல மகேந்திரா வற்புறுத்தியுள்ளார்.

    ஆனால், கிருத்திகாவின் சகோதரி நிகிதாவின் வேண்டுகோளின் பேரில் போலிஸ் அசாதாரண மரணம் என வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து கிருத்திகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியான பரிசோதனை அறிக்கையில், அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று உறுதியானது.

    கிருத்திகாவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் துயரத்துடன் காணப்பட்ட மகேந்திரா, அடிக்கடி மனைவியின் குடும்பத்தினரைச் சந்தித்து வந்ததால் யாருக்கும் அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வெளியான பரிசோதனை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    டாக்டர் மகேந்திரா தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஒன்பது நாட்களுக்குப் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.    

    • மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வென்டிலேட்டர் மூலம் மாணவிகளை அவர்கள் படம் பிடித்தது சிசிடிவி கேமரா மூலம் உறுதியானது.
    • பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஆர்எஸ்எஸ் உடைய மாணவர் அணி ஆகும்.

    மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்கள் மூவர், கல்லூரி மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக படம் பிடித்த புகாரில் கைது செய்யப்பட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் அரசு கல்லூரியின் முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று புகார் அளித்த பான்புரா போலீசில் புகார் அளித்தார்.

    செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்ற இளைஞர் விழாவின் போது ஏபிவிபி தலைவர்கள் பெண் மாணவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

    மாணவிகள் இந்த சம்பவத்தைப் பற்றி புகார் அளித்ததை அடுத்து, கல்லூரி அதிகாரிகள் கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தனர். மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வென்டிலேட்டர் மூலம் மாணவிகளை அவர்கள் படம் பிடித்தது சிசிடிவி கேமரா மூலம் உறுதியானது.

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ABVP உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி மற்றும் கல்லூரி மாணவர் இணை தலைவர்கள் அஜய் கவுர் மற்றும் ஹிமான்ஷு பைராகி ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.

    அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பன்புரா போலீசார் தெரிவித்தனர்.

    • கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
    • சட்டசபையில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வழக்கமான நடைமுறையின்படி, ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது விளக்கத்திற்காக திருப்பி அனுப்பவோ வேண்டும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டசபையில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

    கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு பல்கலை. மசோதா வழக்கையும் சேர்த்து விசாரிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஹரிஷ்குமார் முறையீடு செய்தார். 2 வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி உறுதி அளித்தார்.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்களும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    • காலணி வீசிய வழக்கறிஞரின் துணிச்சலை பாராட்டுவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் பாஸ்கர் ராவ் பாராட்டினார்.
    • வீரத்தின் அடையாளம் இது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த வாரம் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் வைத்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அவர் வீசிய காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

    அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவரின் உரிமம் பார் கவுன்சிலால் ரத்து செய்யப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    ஆனால், கடவுள் தான் தன்னை காலணி வீச வைத்தார் என அதன்பின்பும் ராகேஷ் பேட்டி கொடுத்தார். மேலும் அவர் செய்தது சரியே என சிலர் ஆதரவாக பேசினர். காலணி வீசிய வழக்கறிஞரின் துணிச்சலை பாராட்டுவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் பாஸ்கர் ராவ் பேசியிருந்தார்.

    இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஒப்புதல் அளித்துள்ளார்.

    மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பாக பேசிய மத்திய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி எறிந்த சம்பவத்தை சிலர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வீரத்தின் அடையாளம் இது என பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதை இப்படியே தொடர விடக்கூடாது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.
    • தற்போதைய (டிரம்ப்) நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்சவால் வெளியிட்ட அறிக்கையில், 

    "இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.

    நிலையான எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்புத் தன்மை ஆகிய இரண்டும் தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை.

    எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.

    அமெரிக்காவுடனும், பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம்.

    இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறி வருகிறது. தற்போதைய (டிரம்ப்) நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    முன்னதாக சர்வதேச தடைகள் இருந்தபோதிலும் ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் டிரம்ப்புக்கு தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.
    • இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்தார்.

    பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கண்டு அஞ்சுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் இதற்கு ஆதரமாக 5 விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    அதில், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்தது, பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் டிரம்ப்புக்கு தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருப்பது,

    நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்தானது, எகிப்தில் காசா அமைதி மாநாட்டுக்கு(ஷர்ம் எல்-ஷேக் மாநாடு) அழைக்கப்பட்ட போதிலும் அங்கு செல்வதை தவிர்த்தது,

    ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்ப்பின் கருத்துக்களுக்கு முரண்படாமல் இருப்பது" ஆகியவை பிரதமர் மோடி டிரம்ப்பை கண்டு பயப்படுவதை காட்டுகிறது என்று ராகுல் தெரிவித்துள்ளார். 

    நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா விரைவில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
    • சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.

    கோவிலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

    ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார், பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.

    பின்னர் மறுநாள் (22-ந் தேதி) வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    முன்னதாக 18-ந் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்திகள் நடப்பு மண்டல சீசன் தொடக்கம் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கி இருந்து பூஜை மற்றும் திருப்பணிகளை நிறைவேற்றுவார்கள்.

    • பதவியேற்றபின் முதல் முறையாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா இந்தியாவிற்கு வருகிறார்.
    • இந்தியா, இலங்கை இடையே உள்ள பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்.

    புதுடெல்லி:

    இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா 3 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

    இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தரும் ஹரிணி அமரசூர்யா இங்கு பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து இருநாட்டு நலன்கள் சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

    இலங்கை பிரதமரின் வருகை, இந்தியா-இலங்கை இடையே உள்ள ஆழமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும். இந்தியாவின் 'மகாசாகர் தொலைநோக்குப் பார்வை' மற்றும் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' ஆகிய கொள்கைகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இலங்கை பிரதமராக பதவியேற்றபின் இந்தியாவிற்கு அவர் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    • பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வாய்ப்பு.
    • தற்போது வரை 83 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    நேற்று 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் இடம் பிடித்துள்ளார். இவர் பாட்னாவில் நேற்று முறையாக பாஜக-வில், மாநில தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் இணைந்தார். இந்த உடனேயே அலிநகர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுதியில் மிஷ்ரிலால் யாதவ் எம்.எல்.ஏ.-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மைதிலி தாகூரை தவிர்த்து, முன்னாள் ஐபிஎல் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு புக்சர் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது. பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து வெளியேறி சமீபத்தில்தான் பாஜக-வில் இணைந்தார்.

    முசாபர்பூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்குப் பதிலாக ரஞ்சன் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். ஹயாகத்தில் ராம் சந்திர பிசாத் நிறுத்தப்பட்டுள்ளார். கோபால்கஞ்ச் தொகுதியில் சுபாஷ் கிங்கிற்கு வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது.

    • நல்ல கட்டமைப்பு இல்லை என்றால் சொத்து வரி வசூலிக்கக்கூடாது.
    • தார்ச்சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக துணை முதல்வர் தகவல்.

    பெங்களூருவில் வசித்து வரும் மக்கள், மோசமான கட்டமைப்புகள் மூலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தங்கள் ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெங்களூருவில் ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இங்கு வேலைப் பார்ப்பவர்கள் நிறுவனத்திற்கு வந்து செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். இதனால் நிறுவனத்தை பெங்களூருவில் இருந்து மாற்றப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இந்த நிலையில்தான் பெங்களூருவில் கட்டமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளன. இதனால் சொத்து வரி கட்டமாட்டோம் வரி செலுத்துவோர் என பெங்களூருவில் வாழும் மக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதற்கு கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார் பதில் அளிக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "பெங்களூரு நகரில் சீரான போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் தார்ச்சாலை போடும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. குண்டு குழிகளை சரிசெய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

    வருமான வரி செலுத்துவோர் அடங்கிய தனிநபர் வரி செலுத்துவோர் மன்றம், முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், நல்ல பொது உள்கட்டமைப்பு வழங்கப்படாவிட்டால், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சொத்து வரி வசூலிப்பதைத் தவிர்க்கவும்" என அதில் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது.

    இந்த நிலையில்தான் டி.கே. சிவக்குமார் பதில் அளித்துள்ளார். இவர்தான் பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார்.

    • 219 கடத்தல்காரர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர்.
    • 10 கிலோவுக்கும் அதிகமான உயர் ரக வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சமீப காலமாக அடிக்கடி எல்லை தாண்டி வரும் டிரோன்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானையொட்டி உள்ள மாநிலங்களின் 553 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

    எல்லைப்பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடத்தல் காரர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தரை மற்றும் வான்வழி மூலம் நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கைகளால் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்த 200 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிரோன்கள் மூலம் அனுப்பப்பட்ட போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக எல்லைப்பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் 16 பாகிஸ்தானியர்கள் உள்பட 219 கடத்தல்காரர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர்.

    பாகிஸ்தானில் இருந்து வந்த 200 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 287 கிலோ ஹெராயின், 13 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள்,174 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோவுக்கும் அதிகமான உயர் ரக வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபட்ட 203 இந்திய கடத்தல் காரர்கள் மற்றும் 16 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதன் மூலம் பாகிஸ்தான் ஊடுருவல் காரர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு (2024) 294 டிரோன்கள் மற்றும் 294 கிலோ போதைப்பொருட்கள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 30 பாகிஸ்தானியர்கள் உள்பட 191 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு கடத்தல் காரர்களின் கைது எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    ×