என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீதி வீதியாக ஆதரவு திரட்டி வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீதி வீதியாக ஆதரவு திரட்டி வருகிறார்.

    45-வது வட்டத்தில் நடந்து சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கலைஞர் விட்டு சென்ற பணிகளை கடமை தவறாமல் நிறைவேற்ற தயாராக இருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

    பெரம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்து அதனை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என ஆர்.டி.சேகர் உறுதியளித்தார்.

    வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் சுதர்சனம், பொறுப்பாளர்கள் வைத்திய லிங்கம், பாலவாக்கம் சோமு, முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், பகுதி செயலாளர் ஜெயராமன், வட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர். #LokSabhaElections2019

    ராணுவத்துக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று மோடி பேசியது குறித்து தேர்தல் கமி‌ஷனிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புகார் அளித்து உள்ளது. #LoksabhaElections2019 #PMModi #ElectionCommission
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி மராட்டிய மாநிலம் லத்தூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.

    ராணுவத்துக்கு ஆதரவாக அப்போது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் முறையாக ஓட்டு அளிப்பவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    பயங்கரவாதிகளுக்கு எதிராக பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு உங்கள் முதல் வாக்கை அளிப்பீர்களா? புல்வாமா தாக்குதலில் பலியான நமது படை வீரர்களுக்கு முதல் வாக்கை சமர்ப்பணம் செய்வீர்களா? என்று கேட்டுக் கொண்டார்.

    மோடியின் இந்த பேச்சு குறித்து தேர்தல் கமி‌ஷனிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புகார் அளித்து உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் மோடி பேசியுள்ளார் என்று புகாரில் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மராட்டிய மாநில தலைமை தேர்தல் அதிகாரியை தேர்தல் கமி‌ஷன் கேட்டுக் கொண்டுள்ளது. #LoksabhaElections2019 #PMModi #ElectionCommission
    பூந்தமல்லி ஓன்றியம் காட்டுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி ஓன்றியம் காட்டுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பூந்தமல்லி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் க.வைதியநாதன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சி.ஒய்.ஜாவித் அகமத், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கே.எஸ்.ரவிசந்திரன், வயலை நடராஜன் ஊராட்சி கழக செயலாளர் கே.ஜி.டி.கெளதமன், மணவாளன், கோவிந்தராஜ் , சிகாமணி, சுதாகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    பாராளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சிக்கு 106 முதல் 118 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #YSRC #JaganmohanReddy
    விஜயவாடா:

    ஆந்திர மாநிலத்திற்கு நாளை நடக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. டைம்ஸ் நவ் நடத் திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி 43.7 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    அதுபோல சி.என்.என். நியூஸ் தொலைக்காட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டெல்லியைச் சேர்ந்த வி.டி.பி. அசோசியட்ஸ் என்ற நிறுவனமும் 2 தினங்களுக்கு முன்பு ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில், “ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சிக்கு 106 முதல் 118 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சிக்கு 54 முதல் 68 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் தெலுங்கு டி.வி. சானல் ஒன்று வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #YSRC #JaganmohanReddy
    மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என முதலில் தீர்ப்பு வழங்கிவிட்டு, பின்னர் விசாரணையை நடத்துவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #Chidambaram #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள், வாக்காளர்களை வசப்படுத்த தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அவ்வகையில் நேற்று கோவையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்  மோடி, முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரத்தை கடுமையாக சாடினார்.

    மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி (ப.சிதம்பரம்), தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் தங்கள் சொந்த இருப்புக்காக ஜாமீன் பெறுவது முக்கியம் என்றும் மோடி விமர்சித்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியிருந்தார்.



    இதற்கு ப.சிதம்பரம் இன்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளி என முதலில் தீர்ப்பு வரும். அதன்பிறகுதான் விசாரணை நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

    “மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்ட நபர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்காத வரை அவர் குற்றவாளிதான். மோடிக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவரது நண்பர் அருண் ஜெட்லியிடம் ஆலோசிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு சட்டம் தொடர்பாக சில அடிப்படை பாடங்களை சட்டத்துறை செயலாளர் கற்றுக்கொடுக்க வேண்டும். ஜாமீன் என்பது சட்ட விதிகளின் படி வழங்கப்படுவது, சிறை என்பது விதிவிலக்காக வழங்கப்படுவது, என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Chidambaram #PMModi
    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரேமலதாவின் சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. #LoksabhaElections2019 #PremalathaVijayakanth
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்னும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

    அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்கிறார். ஆனால் அவர் பிரசாரத்தின்போது சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார்.


    கோவையில் பிரேமலதா பிரசாரத்தில் பேசும்போது, புல்வாமா தாக்குதலை நடத்திய தைரியமிக்க பிரதமர் மோடி என்றார். பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி நடத்தினார் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாகிஸ்தானில் உள்ள பாலாகோட்டில் இந்திய விமானப்படை புகுந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. அதை அவர் சுட்டிகாட்டி பேசும்போது பாலாகோட் என்று சொல்வதற்கு பதில் புல்வாமா என்று கூறிவிட்டார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் அருகில் இருந்தபோதே ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என்று கூறினார்.

    பின்னர் பொள்ளாச்சி பகுதியில் பேசியபோது, பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா பேசும்போது, எம்.ஜி.ஆர் பாடல்களை மட்டுமே விஜயகாந்த் பாடுவார் என்றும் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்ற பாடலை விஜயகாந்த் விரும்பி பாடுவார் என்றார். ஆனால் அந்த பாடல் சிவாஜிகணேசன் நடித்த ‘பச்சைவிளக்கு’ படத்தில் இடம் பெற்றதாகும்.

    இதைகேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் திகைப்படைத்தனர். பிரேமலதாவின் இந்த பிரசார சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அ.தி.மு.க- தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது நிருபர்களுக்கு பிரேமலதா பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களை ஒருமையில் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #LoksabhaElections2019 #PremalathaVijayakanth
    பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து பேசியது அது பா.ஜனதாவுக்கு மறைமுக ஆதரவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. #KamalHaasan #bjp #rajinikanth

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அறிவித்தார்.

    புதிய கட்சி ஆரம்பிக்கும் போது, அதில் 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை, “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார்.

    ஆனால் ரஜினி எதிர் பார்த்தது போல உறுப்பினர்கள் சேர்க்கை திருப்திகரமான அளவுக்கு அமைய வில்லை. இதனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தாமதம் ஆனபடி உள்ளது.

    இதற்கிடையே ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு அவர் நடிப்பில் காலா, 2-0, பேட்ட ஆகிய 3 படங்கள் வெளியானது. அந்த மூன்று படங்களும் சுமாராக ஓடிய நிலையில் அடுத்து “தர்பார்” என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். எனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் மேலும் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    தமிழக சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்று கூறி வரும் ரஜினி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து இருக்கிறார். அதோடு பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருக்கிறார்.

    இதற்கிடையே ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய கேள்வி எழுந்தபோது, பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வர வேற்று இருக்கிறார்.

    இது தொடர்பாக ரஜினி கூறுகையில், “நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறி வருகிறேன். நதிகளை இணைப்பது என்பது மிகப்பெரிய திட்டமாகும். எனவே இந்த திட்டத்துக்கு, “பகீரத யோஜனா” என பெயர் சூட்டும்படி ஒருமுறை வாஜ்பாயை சந்திக்கும்போது கூறினேன்.

    இப்போது பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்க புதிய ஆணையம் அமைப்போம் என்று கூறியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தால் முதலில் நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். இதனால் வறுமை பாதியாக குறைந்து விடும்” என்றார்.

    ரஜினியின் இந்த கருத்து மூலம் அவர் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து இருப்பதாக கருத்தப்படுகிறது.

    ரஜினி நேற்று பேட்டி அளித்த போது, “கமல்ஹாசன் உங்களிடம் ஆதரவு கேட்டாரே... உங்கள் முடிவு என்ன?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினி, “எனது முடிவை நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார்.

    இதையடுத்து, “உங்கள் ஆதரவை கமல்ஹாசன் கட்சியினர் எதிர்பார்க்கிறார்களே...?” என்று நிருபர்கள் விடாமல் ரஜினியிடம் கருத்து கேட்டனர். அதற்கு ரஜினி, “இதுபற்றி பேசி வி‌ஷயத்தை பெரிதாக்கி எங்கள் நட்பைக் கெடுத்து விடாதீர்கள்” என்று கூறியபடி புறப்பட்டு சென்று விட்டார்.


    ரஜினியின் இந்த பதில் மூலம், அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் 19 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ள நடிகர் கமல்ஹாசன் தனக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தார். இதுபற்றி சமீபத்தில் கமல்ஹாசன் கூறுகையில், “ரஜினி எங்களை ஆதரிப்பதாக கூறினார். இதுபற்றி அவர் தான் அறிவிப்பு வெளியிட வேண்டும். நாங்கள் தொடர்ந்து அவரிடம் இது பற்றி கேட்க முடியாது” என்று கூறியிருந்தார்.

    ஆனால் ரஜினியோ நேற்று திட்டவட்டமாக கமல் ஹாசனின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இது கமல்ஹாசனுக்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து வரவேற்றதற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகை குஷ்பு மற்றும் இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #KamalHaasan #bjp #rajinikanth

    வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். #DMK #LokSabhaElections2019

    சென்னை:

    வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்து உங்களுக்கே எங்களின் ஆதரவு என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

    கொளத்தூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று வீதி வீதியாக வேட்பாளர் கலாநிதி பிரசாரம் செய்தார். வாக்காளர்களிடம் பிரசாரம் செய்கையில் இந்த தொகுதி கழக தலைவர் ஸ்டாலினின் தொகுதி. இந்த தொகுதியில் தளபதி, மக்களின் தேவைகளை தேடி வந்து செய்து வருகிறார். தமிழகத்தில் தளபதி தலைமையில் ஆட்சி மலர வேண்டும். மத்தியில் நிலையான நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும். எனவே அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #LokSabhaElections2019

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் நலனை மட்டுமே சிந்திக்கும் கட்சி திமுக தான். எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் நிறை வேற்றி உள்ளோம். அம்பத் தூர் பகுதியில் புதிய ரெயில் முனையம் அமைக்கபடும். அதனால்தொழில் வளம் பெரு கும்.மத்தியில் நிலையான ஆரோக் கியமான ஆட்சி அமைய உதயசூரியனுக்கு வாக்களியுங் கள் என பேசினார். வேட்பாளர் டி.ஆர்.பாலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிறு வர்கள் கலைஞர், பெரியார் உள்ளிட்ட. தலைவர்கள் வேடம் அணிந்து வரவேற்ற னர். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு எம்.எல்.ஏ., தி.மு.க. வடக்கு பகுதி செயலா ளர் ஜோசப் சாமு வேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். #PMK #PongalurManikandan
    கோவை:

    பா.ம.க.வின் மாநில துணை தலைவராக இருந்தவர் பொங்கலூர் மணிகண்டன். இவர் இன்று பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கோவையில் நிருபர்களிடம் கூறும் போது, அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. மக்களுக்கு இந்த கூட்டணி பிடிக்கவில்லை. அதனால் பா.ம.க.வில் இருந்து விலகுகிறேன். காடு வெட்டி குரு பா.ம.க.விற்காக பாடுபட்டார். ஆனால் அவரது கடனை அடைக்க அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.


    8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. அமைச்சர் மேல்முறையீடு செய்வேன் என்கிறார். ஆனால் இது குறித்து அன்புமணி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. பா.ம.க.வை விட திராவிட கட்சிகளே மேல். பா.ம.க.வில் இருந்து பலர் விலக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #PongalurManikandan
    நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ஈரா. மகேந்திரன் ஆலந்தூர், ஆதம்பாக்கம் -பரங்கிமலை கண்டோன்மென்ட். உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். #NaamThamizharKatchi #LokSabhaElections2019

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ஈரா. மகேந்திரன் ஆலந்தூர், ஆதம்பாக்கம் -பரங்கிமலை கண்டோன்மென்ட். உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    ஆலந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுவதாக அப்பகுதி மக்கள் மகேந்திரனிடம் தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள், நீங்களும் மற்ற வேட்பாளர்களை போல இருக்காமல் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு பதில் அளித்த மகேந்திரன் நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன் என்று உறுதி அளித்தார். ஆலந்தூர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தனியார் நிறுவனங்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

    இந்த நிறுவனங்கள் குடிநீரை விற்பனை செய்வதால் மக்களின் அடிப்படை பிரச்சினையான தண்ணீருக்காக மக்கள் தவிக்கும் நிலையே உள்ளது. இந்த நிலைமாற நட வடிக்கை எடுப்பேன் என்றார். #NaamThamizharKatchi #LokSabhaElections2019

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை என்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். #DMK #LokSabhaElections2019

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் ஆயிரம்விளக்கு தொகுதியில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே பிரசாரத்தை தொடங்கி கோபாலபுரம் கலைஞர் இல்லம் வரை வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    ஆயிரம்விளக்கு தொகுதியிலும் தி.மு.க. எம்.எல்ஏ.தான் உள்ளார். என்னையும் எம்.பி.யாக தேர்வு செய்தால் இந்த தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் மேலும் அதிகம் கிடைக்கும். இது தொகுதி மக்களுக்கு கிடைக்கும் இரட்டிப்பு யோகமாகும்.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பா.ஜனதா தொடர்ந்து செயல்படுகிறது.

    எனவே மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்துக்கு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., கு.க. செல்வம் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் திருவல்லிக்கேணி வி.பி.மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நடந்து சென்று வாக்கு கேட்டனர். பிரசாரத்தின் போது தயாநிதி மாறனுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019 #DMK

    ×