search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் கட்சிக்கு ரஜினி ஆதரவு இல்லை- பா.ஜனதாவுக்கு மறைமுக ஆதரவு
    X

    கமல்ஹாசன் கட்சிக்கு ரஜினி ஆதரவு இல்லை- பா.ஜனதாவுக்கு மறைமுக ஆதரவு

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து பேசியது அது பா.ஜனதாவுக்கு மறைமுக ஆதரவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. #KamalHaasan #bjp #rajinikanth

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அறிவித்தார்.

    புதிய கட்சி ஆரம்பிக்கும் போது, அதில் 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை, “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார்.

    ஆனால் ரஜினி எதிர் பார்த்தது போல உறுப்பினர்கள் சேர்க்கை திருப்திகரமான அளவுக்கு அமைய வில்லை. இதனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தாமதம் ஆனபடி உள்ளது.

    இதற்கிடையே ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு அவர் நடிப்பில் காலா, 2-0, பேட்ட ஆகிய 3 படங்கள் வெளியானது. அந்த மூன்று படங்களும் சுமாராக ஓடிய நிலையில் அடுத்து “தர்பார்” என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். எனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் மேலும் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    தமிழக சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்று கூறி வரும் ரஜினி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து இருக்கிறார். அதோடு பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருக்கிறார்.

    இதற்கிடையே ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய கேள்வி எழுந்தபோது, பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வர வேற்று இருக்கிறார்.

    இது தொடர்பாக ரஜினி கூறுகையில், “நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறி வருகிறேன். நதிகளை இணைப்பது என்பது மிகப்பெரிய திட்டமாகும். எனவே இந்த திட்டத்துக்கு, “பகீரத யோஜனா” என பெயர் சூட்டும்படி ஒருமுறை வாஜ்பாயை சந்திக்கும்போது கூறினேன்.

    இப்போது பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்க புதிய ஆணையம் அமைப்போம் என்று கூறியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தால் முதலில் நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். இதனால் வறுமை பாதியாக குறைந்து விடும்” என்றார்.

    ரஜினியின் இந்த கருத்து மூலம் அவர் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து இருப்பதாக கருத்தப்படுகிறது.

    ரஜினி நேற்று பேட்டி அளித்த போது, “கமல்ஹாசன் உங்களிடம் ஆதரவு கேட்டாரே... உங்கள் முடிவு என்ன?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினி, “எனது முடிவை நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார்.

    இதையடுத்து, “உங்கள் ஆதரவை கமல்ஹாசன் கட்சியினர் எதிர்பார்க்கிறார்களே...?” என்று நிருபர்கள் விடாமல் ரஜினியிடம் கருத்து கேட்டனர். அதற்கு ரஜினி, “இதுபற்றி பேசி வி‌ஷயத்தை பெரிதாக்கி எங்கள் நட்பைக் கெடுத்து விடாதீர்கள்” என்று கூறியபடி புறப்பட்டு சென்று விட்டார்.


    ரஜினியின் இந்த பதில் மூலம், அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் 19 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ள நடிகர் கமல்ஹாசன் தனக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தார். இதுபற்றி சமீபத்தில் கமல்ஹாசன் கூறுகையில், “ரஜினி எங்களை ஆதரிப்பதாக கூறினார். இதுபற்றி அவர் தான் அறிவிப்பு வெளியிட வேண்டும். நாங்கள் தொடர்ந்து அவரிடம் இது பற்றி கேட்க முடியாது” என்று கூறியிருந்தார்.

    ஆனால் ரஜினியோ நேற்று திட்டவட்டமாக கமல் ஹாசனின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இது கமல்ஹாசனுக்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து வரவேற்றதற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகை குஷ்பு மற்றும் இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #KamalHaasan #bjp #rajinikanth

    Next Story
    ×