என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மக்களவைத் தேர்தல் தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் தவறாது வாக்களிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #LokSabhaElections2019 #Modi #IndiaElections2019
    புதுடெல்லி:

    17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Modi #IndiaElections2019
    ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். #LokSabhaElections2019 #ChandrababuNaidu
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

    அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிடும்.

    ஆந்திராவில் வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அமரவாதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சந்திரபாபு நாயுடு வாக்களித்தார்.



    இதேப்போல் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் விஜயவாடா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கேசினேனி ஸ்ரீனிவாஸ் தனது குடும்பத்தினருடன் சென்று குண்டெல்லா பகுதியில் வாக்களித்தார். ஆந்திராவில் ஆளும்  தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி  வருவது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #ChandrababuNaidu
    வாக்குப்பதிவு எந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பதித்துள்ளனர் என்று சீமான் குற்றம் சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #Seeman
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபா‌ஷினியை ஆதரித்து மயிலாடுதுறையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். மீத்தேன் திட்டத்தை தடுப்போம் என்கின்றனர்.

    இத்திட்டம் கொண்டு வரப்பட்டது யாருடைய ஆட்சி காலத்தில்? கச்சத்தீவை மீட்போம் என்கின்றனர். கச்சத்தீவு பறிபோனது யாருடைய ஆட்சி காலத்தில்? கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என்கின்றனர். அது யாருடைய ஆட்சி காலத்தில் மத்திய பட்டியலுக்கு சென்றது? விவசாயக்கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்வோம் என்கின்றனர். விவசாயிகளையும், மாணவர்களையும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளியது யார்? என்பதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நரேந்திரமோடி ஆறுதலாக ஒரு ‘ட்வீட்‘ கூட போடவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் செய்யாத எதனை, அடுத்த 5 ஆண்டுகளில் நரேந்திரமோடி செய்யப்போகிறார்?.



    வாக்குப்பதிவு எந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பதித்துள்ளனர். இதனால் நாங்கள் பொதுமக்களிடம் வாக்கு கேட்கும்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த சின்னம் மங்கலாக தெரிகிறதோ அந்த சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம். மக்கள் இந்த தேர்தலை மாற்றத்துக்கான தேர்தலாக பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Seeman
    தமிழகத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து மே 19-ந் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.



    இந்த தேர்தல்களின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட சில வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.

    அதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியில் இருந்து மே 19-ந் தேதி மாலை 6.30 மணி வரை, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது போன்றவை தடை செய்யப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு இடைப்பட்ட 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். #LokSabhaElections2019 #RahulGandhi
    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அவர் வருகிற 13-ந்தேதி காலை ராமநாதபுரத்திலும், அன்றையதினம் மாலை தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை தர உள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 ஊர்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வருகிறார்.



    இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி(நாளை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி, மதியம் 1 மணிக்கு சேலம், மதியம் 3 மணிக்கு தேனி, மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியான மாதம் ரூ.6 ஆயிரம் வருமான உறுதி திட்டம் ‘கஜா’ புயலை விட வேகமாக பரவி இருக்கிறது.

    நான் நடிகர் ரஜினிகாந்த் ரசிகன். நான் தேர்தலில் அவருடைய ‘அண்ணாமலை’ சைக்கிளை வைத்து வெற்றி பெற்றிருக்கிறேன். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு அறிவிப்பை ரஜினிகாந்த் வரவேற்றிருப்பது, அவர் ஒரு சார்பாக இருக்கிறாரோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் நதிநீர் இணைப்புத்திட்டம் சாத்தியமில்லை. எதையாவது கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் வாக்குகளை பெற முடியாதா? என்று பா.ஜ.க. எண்ணுகிறது. இதில் ரஜினிகாந்த் பலிகடா ஆகிறார் என்பது தான் வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘தேசம் காக்கும் கை’ என்ற தலைப்பில் காங்கிரஸ் பிரசார பாடலை கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். இதனை கவிஞர் ஜோதி ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜி.கே.தாஸ், தணிக்காச்சலம், செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, எஸ்.சி.பிரிவு மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #RahulGandhi

    17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #LokSabhaElections2019
    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.



    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. ஒரு சில இடங்களில் 4 அல்லது 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. #LokSabhaElections2019 #VotingBegins

    அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாமல் போனதுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Edappadipalanisamy
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

    கொங்கு மண்டல விவசாயிகளின் மனதையும் உள்ளத்தையும் குளிர வைக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள்-மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தோம். தேர்தலை காரணம் காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தடை ஏற்படுத்தியதால் அதை கொடுக்க முடியவில்லை. இப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக இருப்பவர்தான் ஸ்டாலின்.

    எனினும் அந்த தடையை உடைத்தெறிந்து தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இங்கே தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் இன்னொன்றையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் முடிந்ததும் தனியார் சேனல் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஆட்சி மீது குறை கூறி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை பிடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். அது ஒருபோதும் நடக்கப்போவது இல்லை.

    திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே 6 மணி நேரம் மின்வெட்டு, 7 மணி நேர மின்வெட்டு, 8 மணி நேரம் மின்வெட்டாக இருந்த நிலையை மாற்றி, நெசவாளர்கள் பயன் பெறுகின்ற வகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரத்தை வழங்குகிற அரசு அம்மாவுடைய அரசு என்பதை நான் இந்த நேரத்திலே அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து ரூ.28,000 கோடி ரூபாயை கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை இன்றைக்கு கல்வித்துறையிலே நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

    பள்ளிப்படிப்பை முடித்த பின்னாலே மாணவர்கள் தொழில் கல்வி பயில வேண்டும் என்று சொன்னால் ஈரோடு மாவட்டத்திலேயே அரசு பாலிடெக்னிக் கல்லூரி கிடையாது. அம்மா அரசுதான் இந்த பெருந்துறை தொகுதிக்கு ரூ.52 கோடி ரூபாய் செலவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்தது. உங்கள் பெருந்துறையில் தான் மேலும் நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஏழை எளிய மாணவர்கள் கட்டணமில்லாத கல்வியை கற்று வருகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Edappadipalanisamy
    ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். Loksabhaelections2019 #BJP #PMModi
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகே பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பா. ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது:-

    வருகிற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வரும் பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    10.45 மணிக்கு பிரதமர் பிரசார மேடைக்கு வருகை தருகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

    ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
    காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நிச்சயமாக விலைவாசி குறையும் என்று கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம் செய்தார். #Loksabhaelections2019 #SenthilBalaji
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி கரூர் பெரியார்நகர், ஆண்டாங்ககோவில் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் பெட்ரோல், டீசல் விலை 2 மடங்காக உயரும். மோடியும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சியாக நாட்டை மாற்றி விடுவார்கள். ஆனால் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலையினை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவந்து கட்டுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தந்துள்ளார். நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விலைவாசி குறையும்.

    இந்த தொகுதியில் 2 முறை தொடர்ச்சியாக எம்.பி.யாக இருக்கும் மு.தம்பித்துரை தொகுதி மக்களின் பிரச்சனைக்காக ஒருபோதும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. நரேந்திர மோடியின் ஆட்சி மோசம் என விமர்சித்த மு.தம்பித்துரை மீண்டும் அவருக்கு வாக்குகேட்கிறார். இதனை சிந்தித்து பாருங்கள். இந்த தேர்தல் முடிந்தால் அடுத்த தேர்தலுக்குதான் உங்களை சந்திக்க வருவார். ஆகவே பாராளுமன்றத்தில் நமது குரலாக ஒலிக்க ஜோதி மணிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

    பிரசாரத்தின் போது மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட காங். தலைவர் சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் பலர் உடனிருந்தனர். #Loksabhaelections2019 #SenthilBalaji
    ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்த அமேதி எங்கள் தந்தையின் புண்ணியபூமி, எங்களது புனிதஸ்தலம் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். #Amethi #karmabhoomi #RajivGandhi #sacredland #Priyanka
    லக்னோ:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதே தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அமேதி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.


    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில செயலாளர் பிரியங்கா காந்தி இந்த தொகுதிக்கும் தங்களது குடும்பத்துக்கும் இடையில் உள்ள நெருக்கமான பந்தம் தொடர்பாக குறிப்பிட்டார்.

    ’சில உறவுகள் இதயத்தோடு நெருக்கமாக உள்ளவையாகும். இந்த அமேதி தொகுதி எங்கள் தந்தையின் (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) புண்ணியபூமி, எனவே, இது எங்களது புனிதஸ்தலம். அதனால்தான், ராகுல் காந்தி வேட்புமனு தாக்கலுக்காக நாங்கள் இங்கே குடும்பமாக வந்திருக்கிறோம்’ என பிரியங்கா உணர்வுப்பூர்வமாகவும், உருக்கமாகவும் தெரிவித்தார். #Amethi #karmabhoomi  #RajivGandhi #sacredland #Priyanka
    இலவச அரிசி திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்ததாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தொகுதி, தொகுதியாக, வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று உப்பளம் தொகுதியில் வீதி, வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சின்னமணிக்கூண்டு அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தின் போது பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ரங்கசாமியை ஜெயலலிதா துரோகி என விமர்சித்தபோதும் அ.தி.மு.க.வினருடன் கூட்டணி வைத்துள்ளார்.

    மோடியும், பேடியும் சேர்ந்து புதுவையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு மூலகாரணமாக இருப்பவர் ரங்கசாமி. இதை கண்டித்துத்தான் நாங்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்துக்கு பிறகு தான் அரிசி வந்தது. அதையும் தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்துள்ளார்.

    தமிழகத்திலும், ஆந்திராவிலும் தேர்தல் நடைமுறையில் இருக்கும் போது இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. துறைமுகத்திற்காக ரூ.64 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். உப்பளத்தில் 900 வீடுகள் கட்ட திட்டமிட்டு உள்ளோம்.

    மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும். இதற்கு கை சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், முருகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #Loksabhaelections2019 #Narayanasamy
    தைப்பொங்கல் பரிசு, தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் என ஏழைகளுக்கு கொடுக்க நினைப்பதை தடுக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #Edappadipalaniswami #MKStalin
    திருச்சி:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறியில் இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நடைபெற இருப்பது பாராளுமன்ற தேர்தல். இந்த தேர்தலில் மத்தியில் நல்ல ஆட்சி, திறமையான பிரதமர் நாட்டை ஆள வேண்டும். நாடு நலம்பெற நாட்டின் பாதுகாப்பு முக்கியம். நாட்டின் பாதுகாப்பு நன்றாக இருந்தால் தான் முசிறியிலும் பாதுகாப்பு இருக்கும். எனவே நம் நாட்டிற்கு தகுதியான, திறமையான பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும்.

    நான் மற்றும் நாமெல்லாம் விவசாயிகள். நான் இன்றும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளின் கஷ்டம், இன்னல்கள் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் விவசாயத்தை பற்றி கேலியும், கிண்டலும் பேசி வருகிறார். கோதாவரி- காவேரி நதி இணைப்பு திட்டம் வரவுள்ளது. பாராளுமன்றத்தில் முதல் குரல் இந்த கோரிக்கை எழப்போகிறது.

    கோதாவரியை தெலுங்கானா வழியாக கொண்டு வந்தால் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும். இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலும் இதனை குறிப்பிட்டுள்ளனர். எங்கள் ஆட்சியின் முதல் கோரிக்கை தண்ணீருக்காக தான். குடிமராமத்து திட்டத்தில் ஆறு, மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வாரி வருகிறோம். இன்று வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும். நீர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் கொண்ட குழு ஆய்வறிக்கையை சமர்பித்து வருகிறது. அதன்படி தடுப்பணைகள் கட்டப்படும். காவிரி ஆற்றில் எத்தனை தடுப்பணை வேண்டுமோ அதை கட்டுவோம். தற்போது 3 தடுப்பணை கட்டப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் இதே போல் நீர் மேலாண்மைக்கு செய்தார்களா? எந்த திட்டமும் செய்யவில்லை. தமிழகத்தில் எத்தனை தடுப்பணை முடியுமோ அத்தனையும் அம்மாவின் அரசு நிச்சயம் கட்டும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பது எங்களின் நோக்கம். வேளாண் பணி சிறக்க வேண்டும். வேளாண் பொருட்கள் காய்கறி, பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.

    2 ஆயிரம் கோடியில் சென்னையில் உணவு பூங்கா அமைக்கிறோம். விவசாய பொருட்களுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் விவசாயிகள் ஒரு மாதம் வரை பொருட்களை வைத்து, விலையேறும் போது விற்பனை செய்யலாம். 900 ஏக்கரில் கால்நடை பூங்கா அமைக்க உள்ளோம். அதில் கலப்பின, நாட்டு பசு போன்றவை நோய் தடுப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.

    அதிகம் பால் கொடுக்கும் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு வழங்குவோம். இந்த உணவு பூங்கா தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இது விவசாயிகளுக்கான அரசு, அவர்களின் தேவையை நிறைவேற்றுவோம்.

    கோதாவரி-காவேரி நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டதும் மோட்டார் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் எடுத்து செல்லப்படும். இதற்காக திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. நான் செய்வதை தான் சொல்வேன், ஸ்டாலின் போல சொல்லி விட்டு செல்லமாட்டேன்.



    தை பொங்கல் பரிசு ஆயிரம் கொடுத்தோம். அதை ஸ்டாலின் தடுக்க முயற்சி செய்தார். ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்க நினைக்கிறார். அவர் மக்களுக்கு நன்மை அளிக்க கட்சி நடத்தவில்லை.

    தற்போது தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவித்தேன். அதை ஸ்டாலின் தடை செய்ய முயற்சி செய்தார். ஆனால் நீதிமன்றம் தடை வழங்க மறுத்துள்ளது. வழக்கினையும் தள்ளுபடி செய்தது.

    தேர்தல் முடிந்ததும் இந்த திட்டம் கட்சி பாகுபாடின்றி அனைத்து தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஸ்டாலின் எங்களை தடுத்து நிறுத்த முடியாது. ஏழைகளுக்கு கொடுப்பதை இந்தியாவிலே தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். ஏழைகள் வாழ்வு பெற மத்திய அரசு ஓய்வுதியம் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கவுள்ளது.

    முசிறி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் சாதனைகளை கூறியும், செய்யவுள்ளதையும் கூறி ஓட்டு கேட்கிறோம். ஆனால் ஸ்டாலின் ஆளும் கட்சியினரையும், பிரதமரை மற்றும் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்.

    தொட்டியம் வட்டத்தில் காட்டு நாயக்க இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்யும். சிவபதியின் வெற்றி இந்த மண்ணிற்கான பெருமை. தமிழகம் முழுவதும் 90 சதவிதம் இடத்திற்கு சென்றுள்ளேன். இன்னும் 10 சதவிதம் உள்ளது. அங்கும் சென்று விவசாயிகளை, பொது மக்களை சந்தித்து சாதனைகளை கூறி ஓட்டு கேட்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Edappadipalaniswami #MKStalin
    ×