என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விட்டதால், அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Ottapidaram #EC
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.சுந்தர்ராஜ் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

    அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், “ஒட்டப்பிடாரம் தொகுதி வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தது.

    இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்தார். இதன் காரணமாக அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    அதை சென்னை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு உறுதி செய்தது. இதையடுத்து ஒட்டப்பிடாரம் தொகுதி காலியிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

    மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகளும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் ஏற்கனவே காலியிடங்களாக இருந்தன.

    இதற்கிடையே ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் சிக்கி தண்டனை பெற்றதால் அவர் பதவி இழந்து ஓசூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. எனவே தமிழக சட்டசபையில் 21 தொகுதி இடங்களில் காலியிடங்களாக இருந்தன. இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மற்ற 18 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    3 தொகுதி தேர்தல் நடத்தாததற்கு தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 3 தொகுதிகளிலும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தனர்.

    இதை ஏற்று திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த டாக்டர் சரவணன் தனது வழக்கை வாபஸ் பெற்றார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    அதுபோல ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தான் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அவரது வழக்கு நேற்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கை வாபஸ் பெறுவதாக” கிருஷ்ணசாமி மனு செய்தார்.

    அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை அவர் தள்ளுபடி செய்தார்.

    கோர்ட்டின் இந்த உத்தரவு நகலை உடனடியாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விட்டதால் அங்கு தேர்தலை எந்த தடையும் இல்லை. எனவே ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை வேறு தேதியில் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Ottapidaram  #EC
    திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¼ கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #Parliamentelection #LSPolls

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன வாகனம் வந்தது.


    வாகனத்தில் இருந்தவர்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆவணத்தில் உள்ள எண்ணும், வேனின் பதிவு எண்ணும் வித்தியாசமாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வேனும், பணமும் திருமங்கலம் தாசில்தார் தனலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.  #Parliamentelection #LSPolls

    திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது.  #Parliamentelection #LSPolls

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu #PMModi

    அமராவதி:

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மிக முக்கிய பொறுப்புகளில் தலைவராக இருப்பவர்களுக்கு பல்வகை திறமைகள் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியை பொருத்தவரை அது போன்ற திறமைகள் அவரிடம் இல்லை.

    மக்கள் அவரிடம் மிக அதிகமாக எதிர் பார்த்தார்கள். அவர் குஜராத் மாடலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறினார். குஜராத்திலும் அவர் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை. 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற மாதிரி குஜராத்தில் பொருளாதார அறிவுத்திறனை அவர் உருவாக்கவில்லை.

    குஜராத்தை உற்று நோக்கினால் அடிப்படை திறன் உருவாக்காமல் இருந்ததை காண முடியும். அங்கு வர்த்தகத்தில் மட்டும்தான் மேன்மையாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் நான் தொழில் தொடங்குபவரை உருவாக்குகிறேன். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்றவற்றில் முதன்மை இடங்களில் குஜராத்தை சேர்ந்தவர்கள் வருவது இல்லை.

    அதே நேரத்தில் ஒன்றுபட்ட ஆந்திராவில், அறிவுத்திறன் மிக்க இடமாக ஐதராபாத்தை மாற்றினேன். இன்று ஐதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் அறிவுத்திறன் மிக்க இடங்களாக உள்ளது.

    பலரும் நம்புவதுபோல மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை. ஒரு தலைவருக்கு ஆளுமை தகுதி இருந்தால் சிறந்த அறிவுத்திறன் கொண்டவரை மேலும் முன்னேற செய்ய வேண்டும். ஆனால் மோடி அவ்வாறு செய்வதில்லை.

    அதிகார வர்க்கங்கள், ஊடகங்கள், அரசியல், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைகளை அழிப்பவராக மோடி செயல்படுகிறார்.

    இவ்வாறு தலைமை பண்புகளை அழித்தால் அது நாட்டுக்கே பேரழிவாகி விடும். என்னிடம் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்கள் பலரும் மிகுந்த வேதனையோடு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

    அவர்கள் இந்த ஆட்சியில் கடுமையான மனஅழுத்தத்துடன் இருக்கிறார்கள். அவர்களை அவமதித்து இருக்கிறார்கள். மிரட்டி இருக்கிறார்கள்.


    வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை ஏவி விடுகிறார்கள். இதனால் நாங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இந்த துறைகளை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த யாருமே இவ்வளவு மோசமாக பயன்படுத்தியது இல்லை.

    கடந்த காலத்தில் நான் காங்கிரசோடு கடுமையாக மோதல் போக்கில் ஈடுபட்டேன். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் இதுபோன்று எங்கள் மீது நடந்து கொண்டது இல்லை.

    எங்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை பல முறை குறி வைத்து சோதனை நடத்தப்பட்டது. நாங்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டதை தவிர என்ன தவறு செய்தோம். இதற்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டுமா? எங்கள் ஆட்கள் எதையும் மறைத்து வைக்கவில்லை.

    ஜெகன்மோகன் போன்றவர்கள் ஏராளமாக ஊழல் செய்து சொத்து சேர்த்து உள்ளனர். அவர்களது பாதுகாப்பு நடவடிக்கையில் தான் மத்திய அரசு செய்தது. பல ஆதாரங்களையும் நாங்கள் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    பிரதமர் மோடி தன்னை நாட்டின் காவலன் என்று கூறி கொண்டார் அவரிடம்தான் சாவி இருந்தது. ஆனால் திருடர்களும், ஊழல்வாதிகளும் பணத்தை சுருட்ட அனுமதித்து விட்டார்.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்கள் போன்று அடிக்கடி நடந்துள்ளது. என்னை பொறுத்தவரை இந்த வி‌ஷயத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது.

    மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பயங்கரவாதிகள் ஒவ்வொரு முறை தாக்கும்போதும் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்று மோடி குற்றம்சாட்டி வந்தார். இப்போது மோடி ஆட்சியிலும் அது தான் நடந்துள்ளது.

    நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது மைனாரிட்டி ஆட்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுத்து பல்வேறு மாற்றங்களை உருவாக்கினார். அதேபோல வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோரும் மைனாரிட்டி உறுப்பினர்களை கொண்டுதான் ஆட்சியை 5 ஆண்டு நடத்தினார்கள்.

    பிரதமர் மோடி தனிப்பெரும் மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். அவர் என்ன வளர்ச்சியை உருவாக்கி இருக்கிறார். ஏன் இதுபோன்ற புள்ளி விவரங்களை மறைக்கிறீர்கள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu #PMModi

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பாராளுமன்ற தேர்தலுக்கு 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 2 பேரும் மனுதாக்கல் செய்தனர். #LSPolls #SatyabrataSahoo
    சென்னை:

    வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா (மதச்சார்பற்றது), சுயேச்சை சார்பில் தலா ஒரு மனு, சோசலிஸ்டு யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) சார்பில் 2 மனுக்கள் என மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    தென்சென்னையில் சோசலிஸ்டு யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) சார்பில் 2 மனுக்கள், ஒரு சுயேச்சை என 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



    நாமக்கலில் அகிம்சா சோசலிஸ்டு கட்சி, மதுரையில் ரா‌‌ஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கோவை, பொள்ளாச்சி, தேனி, நெல்லை ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள் தலா ஒரு வேட்புமனுவும், ராமநாதபுரம், திருப்பூரில் தலா 2 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பாராளுமன்ற தொகுதிகளுக்காக 20 வேட்புமனுக்கள், முதல் நாளான நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

    சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பெரம்பூர், திருவாரூரில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இத்தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். #LSPolls #SatyabrataSahoo

    தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan
    பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து இருக்கிறார். தென் சென்னை தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.



    இது குறித்து அவர் கூறும்போது, “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்து விட்டேன். தற்போது கட்சியின் துணைத்தலைவராக உள்ளேன். இந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன். மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், நான் துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan

    தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள் யார்? என்பதை தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது. #LSPolls #ElectionCommission
    மத்திய, மாநில அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் ஆதாயம் பெறும் பதவியில் இருப்பவர்கள் (பிரிவு 10, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951), மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் அல்லது அவ்வாறு ஏதேனும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் போட்டியிட முடியாது.



    திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டவர்கள், ஏதேனும் வெளிநாட்டு குடியுரிமையை பெற்றவர்கள், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஏதேனும் ஒரு சட்டத்தால் தகுதியிழந்தவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 8-ன் கீழ் சில குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் போட்டியிட முடியாது.

    இதே போல் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தகுதியிழந்தவர்கள், லஞ்சம் அல்லது அரசுக்கு எதிராக துரோகம் செய்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் (பிரிவு 9), வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் அரசுடன் ஒப்பந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தவறியவர்கள், வேறு ஏதேனும் குற்றங்களுக்காக 2 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தகுதி இல்லாதவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  #LSPolls #ElectionCommission
    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகனுக்கு காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 56 வேட்பாளர்களைக் கொண்ட 5-வது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #LSPolls #Congress #AbhijitMukherjee
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்துக்கு பிறகு இப்பட்டியல் வெளியிடப்பட்டது.



    ஆந்திர மாநிலத்துக்கு 22 வேட்பாளர்கள், மேற்கு வங்காளத்துக்கு 11 பேர், தெலுங்கானாவுக்கு 8 பேர், ஒடிசாவுக்கு 6 பேர், அசாம் மாநிலத்துக்கு 5 பேர், உத்தரபிரதேசத்துக்கு 3 பேர் உள்பட மொத்தம் 56 வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முறித்துக் கொண்டது. அங்குள்ள ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெராம்பூர் தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா தாஸ்முன்ஷி ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    காக்கிநாடா தொகுதியில், முன்னாள் மத்திய மந்திரி பல்லம் ராஜு, பபட்லா (தனி) தொகுதியில் மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஜே.டி.சீலம் ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அசாம் மாநிலம் மங்கள்டோய் தொகுதியில் மாநிலங்களவை எம்.பி. புவனேஸ்வர் கலிடா, ஒடிசா மாநிலம் கலஹண்டியில் முன்னாள் மத்திய மந்திரி பக்த சரண்தாஸ், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோருக்கும் ‘சீட்’ அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 137 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  #LSPolls #Congress #AbhijitMukherjee
    மக்களின் ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி வருவதால் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #LSPolls #EdappadiPalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. அமைத்திருக்கும் மெகா கூட்டணியும், அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கையாக அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளும், அ.தி.மு.க. கூட்டணி களமிறக்கியிருக்கும் தலைசிறந்த தகுதிபடைத்த வேட்பாளர்களின் அணிவகுப்பும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கூட்டணியே பிரமாண்ட வெற்றி பெறும் என்பதனை இப்போதே முன்கூட்டி சொல்லும் விதமாக மக்களிடம் எழுந்திருக்கும் ஏகோபித்த ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி வருவதை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

    குறிப்பாக கோதாவரி ஆற்றுநீரின் உபரி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை கிருஷ்ணா-காவிரி இணைப்பு மூலமாக தடுத்து, தமிழகத்தை பசுமை கொஞ்சும் பகுதியாக மாற்றிட கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், 7 பேர் விடுதலை, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மாதம் ரூ.1,500 வாழ்வாதார உதவி போன்ற நமது தேர்தல் வாக்குறுதிகள் ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் உற்று நோக்கப்பட்டு, அவர்களின் உளமார்ந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.



    வரலாறு காணாத வகையில் வாகை கனி கொய்து வங்கத்து கடலோரம் துயில் கொண்டிருக்கும் நம் தங்கத்தாரகையாம் ஜெயலலிதா, அவரது வலப்புறத்தில் சந்தனப்பேழையில் சாய்ந்துறங்கும் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கங்களின் வெற்றித் தேரோட்டத்துக்கு வித்திட்ட அண்ணா ஆகியோரது புகழடி பொற்பாதங்களில் 40 தொகுதிகளின் வெற்றியை சமர்ப்பிப்போம் என்கிற குருதி கலந்த உறுதியை நம் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களும் உளமார எடுத்திடவேண்டும்.

    40 பாராளுமன்ற தொகுதிகளின் வெற்றியையும், 18 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றியையும் ஒருசேர ஈட்டுவதன் மூலம் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆளும் என்கிற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும். இதற்காக இப்பொழுதே மடைதிறந்த வெள்ளமென அ.தி.மு.க. சிப்பாய்கள் படை புறப்படட்டும். மக்கள் திலகம், மகராசி அம்மா ஆகியோரது நல்லாசி நமக்கிருக்க நாற்பதும் நமதாகும். நாளை திருநாடும் நமக்கென ஆகும் என்பதை சொல்லி, வாகை கனி கொய்திட புறப்படும் எனது அருமை அ.தி.மு.க.வின் போர்ப்படை வீரர்களை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #LSPolls #EdappadiPalaniswami

    பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #LSPolls #BJP #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நல்லாட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலையும் நாங்கள் கூட்டணி மூலமே எதிர்கொள்கிறோம். சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே சிறிய அளவில் பிரச்சினைகள் உள்ளது. அதை சரிசெய்து கொள்வோம். கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு.



    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. அங்கிருந்து வெளியேற்றினர்.

    பிற கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக பேசுவதை ஊக்குவிப்பதை அவர் நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #LSPolls #BJP #Kumaraswamy
    பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கினார். #LokSabhaElections2019 #MKStalin
    திருவாரூர்:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் 8 கட்சிகளும், தி.மு.க. கூட்டணியில் 9 கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இரு கூட்டணிகளையும் ஏராளமான அமைப்புகள் மற்றும் சிறிய கட்சிகள் போட்டி போட்டு ஆதரிக்கின்றன.

    கூட்டணி அமைப்பதில் தொடங்கி வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் பிரசாரத்தை தொடங்குவது ஆகியவற்றில் அ.தி.மு.க. தலைவர்களும், தி.மு.க. தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர். கடந்த 17-ந்தேதி ஒரே நாளில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. நேற்று அ.தி.மு.க.- தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் வெளியானது.

    இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 கட்டமாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிரடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல் கட்டமாக மார்ச் 20-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை பிரசார சுற்றுப்பயண திட்டத்தை வெளியிட்டார். முதல் கட்டத்தில் இன்று முதல் மொத்தம் 18 நாட்கள் அவர் இடைவிடாமல் பிரசாரம் செய்கிறார்.

    மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தனது பூர்வீக ஊரான திருவாரூரில் தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இதற்காக நேற்று அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் சென்றார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு அங்கிருந்த கருணாநிதி படத்துக்கும் மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் திருவாரூர் கீழவீதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தார். இன்று அதிகாலை அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    திருவாரூர் கீழ சன்னதி தெரு, திருவள்ளுவர் நகர், வாசன் நகர், காந்தி நகர், மருதப்பாடி மற்றும் அய்யனார் கோவில் தெரு,கீழ வீதி உள்பட பல்வேறு இடங்களில் பொது மக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திருவாரூர் தொகுதி சட்டசபை வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

    வீதி வீதியாக சென்ற அவர் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார். நிறைய பேரிடம் அவர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    பிரசாரத்தின் போது அவரை ஆண்களும், பெண்களும் உற்சாகமாக வரவேற்றனர். நிறைய இடங்களில் வாலிபர்களும், இளம்பெண்களும் சிரித்தப்படி மு.க.ஸ்டாலினுடன் செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டனர். அப்போது செல்பிக்காக அவர்களுடன் மு.க.ஸ்டாலின் பொறுமையாக நின்று விட்டு சென்றார்.



    வீதி, வீதியாக சென்ற மு.க.ஸ்டாலின் ஒரு கட்டத்தில் வீடு வீடாகவும் சென்று தி.மு.க., கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டார். வாக்காளர்களை கண்டதும் முகம் மலர கை கூப்பியப்படி மு.க.ஸ்டாலின் வணங்கி வாக்கு சேகரித்தார்.

    8 மணிக்கு பிறகு பல இடங்களில் நடந்தே சென்று அவர் வாக்குகளை சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    மு.க.ஸ்டாலின் தெருக்களில் நடந்து சென்ற போது எதிரே வரும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி ஸ்டாலினிடம் கை குலுக்கினார்கள். அவர்களில் பலரிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    இதுபோல திருவாரூர் வீதிகளில் பல இடங்களில் சிறுவர்-சிறுமிகள் மு.க. ஸ்டாலினுக்கு ஆர்வத்துடன் ஓடிவந்து பூக்கொத்துக்களை கொடுத்தனர். அவற்றை சிரித்தப்படியே வாங்கிக் கொண்ட மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிகளிடம் கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின் இந்த நட வடிக்கைகளால் திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தி.மு.க. நிர்வாகிகளுடன் பொதுமக்களும் வரவேற்றதால் உற்சாகம் அடைந்த மு.க.ஸ்டாலின் பெரும்பாலான தெருக்களில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.

    தேர்தல் பிரசாரத்திற்கு இடையே திருவாரூர் கீழ சன்னதி வீதியில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு சிறிது நேரம் அமர்ந்து நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

    பின்னர் திருவாரூரில் இருந்து காரில் புறப்பட்டு மணக்கால் கிராமத்துக்கு சென்றார். அங்கு பெண்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் மறக்காமல் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு கொண்டார்.

    அங்கு பிரசாரம் முடிந்ததும் திருக்காரவாசல் கிராமத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். அந்த ஊர் மக்கள் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.

    அவர்கள் கூறுகையில், “எங்கள் ஊரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடங்க நட வடிக்கை எடுத்துள்ளனர். இந்த திட்டம் எங்கள் பகுதிக்கு வேண்டாம். இதை உடனடியாக கைவிட செய்ய வேண்டும். இந்த திட்டம் வந்தால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்” என்று கூறினார்கள்.

    பொதுமக்கள் சொன்னதை மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் அந்த பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    காலை 11 மணிக்கு திருவாரூர்-நாகை புறவழிச் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

    இதையடுத்து மீண்டும் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை மு.கஸ்டாலின் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்கிறார். தஞ்சை திலகர் திடலில் மாலை 6 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    பின்னர் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார்.  #LokSabhaElections2019 #MKStalin
    வேலூரில் இன்று காலை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காட்பாடியில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ. 1 லட்சம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த மணிவண்ணன் (45) என்பது தெரியவந்தது.

    சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர். #Parliamentelection #LSPolls

    ×