என் மலர்
விருதுநகர்
- 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார்.
- 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் பனைவெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்தது சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர்.
இன்று அதிகாலை வரை நடந்த இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்திருந்தனர்.
மகா சிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.
- அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 28-ந்தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்தாண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே சதுரகிரிக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பஸ் கார், வேன் மூலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரமான தாணிப்பாறையில் தங்கி அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சிவராத்திரி என்பதால் நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிய தொடங்கினர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர்.
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பக்தர்கள் ஏராளமானோர் உற்சாகமாக மலையேறினர். சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கூட்டம் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாரை சாரையாக சென்றனர். 4 முதல் 5 மணி நேரம் நடந்து சென்று பக்தர்கள் சுந்தர, சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு கோவில் பகுதி மற்றும் அடிவாரத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகள் நடைபெற்றன. இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இரவில் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
- இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் மலை அடி வாரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலமாக தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.
இன்று காலை 6:40 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் மலையேறினர். 4 முதல் 5 மணிநேரம் நடந்து சென்று தரிசனம் செய்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்
நாளை (26-ந் தேதி) இரவு சிவராத்திரி நாளை மறுநாள் மாசி மாத அமாவாசையை (28-ந் தேதி) முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள். இதை யொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சிவராத்திரைய முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், மாசி மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளன.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
- விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
- இதுவரை 3,600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அகழாய்வு இயக்குனர் தெரிவித்தார்.
தாயில்பட்டி:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. சுடுமண் முத்திரைகள், வட்ட சில்லுகள், மண் குவளைகள் உள்பட ஏராளமான பொருட்கள் கிடைத்து உள்ளன.
இந்நிலையில் அகேட் என்னும் கல்மணி, பச்சை நிறத்திலான கண்ணாடி மணிகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட சதுரங்க ஆட்டக்காய், சங்கு வளையல் ஆகியவை தற்போது கிடைத்துள்ளன. இதில் கல்மணி, கண்ணாடி மணி ஆகியவை ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் சிறிய அளவில் கிடைத்தன. தற்போது பெரிய அளவில் கிடைத்துள்ளது. இதனை முற்காலத்தில் ஆபரணமாக பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை 3,600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.
- வீரலெட்சுமி, கஸ்தூரி, மாணிக்கம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சின்னவாடியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறைகள் தரை மட்டமாகின.
பணியில் இருந்த பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் உடல் கருகின. இதில் ராமலெட்சுமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சைமன் டேனியல், வீரலெட்சுமி (35), கஸ்தூரி, மாணிக்கம், முருகேஸ்வரி ஆகியோர் ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சைமன் டேனியல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த நிலையில் வீரலெட்சுமி, கஸ்தூரி, மாணிக்கம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வீர லெட்சுமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது.
- மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விருதுநகர்:
மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே அதிகாலையில் வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே லாரி ஓட்டுநர் சட்டென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த வாகன விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலகில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளியில் சாதனை படைத்துள்ளது.
- குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்:
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ விண்வெளித்துறை துணை இயக்குனர் கிரகதுரை கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இஸ்ரோ அனுப்பும் அனைத்து ராக்கெட்களையும் ஆன்லைனில் பார்க்கும்படி ஒளிபரப்பு செய்து வருகிறோம். உலகில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளியில் சாதனை படைத்துள்ளது. அதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், தொழில், கல்வி உள்பட எல்லா துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தரவுகளை திரட்ட வேண்டும். அதை ஆய்வு செய்து தீர்வு கொடுத்தால்தான் இந்தியா 2047-ல் வளர்ந்த நாடாக மாறும். இதை சாத்தியமாக்குவது மாணவர்கள் கையில் உள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது.
முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. அதன்பின் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொறியியல் பிரிவுகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பி.எஸ்சி., இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்.
- பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு மீட்பு பணிகளில் சிக்கல்.
விருதுநகர் அடுத்த கோவில் புலிக்குத்தி பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார். மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது.
- டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
விருதுநகர்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காக்கன்சேரியில் இருந்து 6 டன் எடையுள்ள தீக்குச்்சிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் ஆலைக்கு புறப்பட்டது. லாரியை அமீது (வயது 58) என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் அருகில் உள்ள மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ ஒன்று குறுக்கே சென்றதாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த டிரைவர் ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராத விதமாக ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது.
உடனே அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு லாரியில் சிக்கியிருந்த டிரைவர் அமீது, கிளீனரை மீட்டனர். 2 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஊரக காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து படையினர் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வானகங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
தாயில்பட்டி:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் ஏராளமான மண்பாண்ட பொருட்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சங்கு வளையல்கள், தங்க ஆபரணம், உருவ பொம்மைகள், சதுரங்க ஆட்ட காய்கள், வட்ட சில்லுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் தற்போது கூடுதலாக மெருகேற்றும் கற்கள் கிடைத்துள்ளன. மெருகேற்றும் கற்களை சங்கு வளையல்கள் உள்பட ஆபரணங்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தி உள்ளனர் என அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.
- மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பெயர், ஊர், பள்ளி வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார்.
- சிறுவனின் தோளில் கை போட்டவாறு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிகளை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி மாணவிகளின் கையால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பெயர், ஊர், பள்ளி வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்திகாளியம்மன் என்ற மாணவியிடம் பேசிய அமைச்சர் பள்ளிக்கு எவ்வாறு வருகிறார் என்பது குறித்து உரையாடினார். அவரது அருகில் வந்த சிறுவன் அன்புக்கரசு, 'நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரவில்லை' என்று தெரிவித்தார்.
அந்த சிறுவனின் பெயரை கேட்ட அமைச்சர் அன்புக்கரசு என்று சொன்னவுடன், 'உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு பஸ் விடுறேன். முதல் பஸ் விட்டதும் உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம்' என்று கலகலப்பாக பேசினார்.
பின்னர், சிறுவனின் தோளில் கை போட்டவாறு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். அதேபோல், அருகில் இருந்த மாணவி ஒருவர் கைகளை கட்டிக்கொண்டு பேசியதை பார்த்த அமைச்சர், கையை கட்ட வேண்டாம் எனக்கூறி இயல்பாக உரையாடினார்.






