என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • அயர்ந்து தூங்கியவரின் இருசக்கர வாகனம், செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

     ராஜபாளையம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் அழகுராஜ். கட்டிட தொழிலாளி. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பி கொண்டி ருந்தார்.

    அப்போது அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் ஆர்.ஆர்.விலக்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனை இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு ரோட்டோரமாக உள்ள மரத்தின் அடியில் படுத்து தூங்கி விட்டார். இதை பார்த்த மர்ம நபர்கள் அழகுராஜின் இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் திருடி சென்று விட்டனர்.

    தூக்கத்தில் இருந்து விழித்த அழகுராஜ், தனது இருசக்கர வாகனத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ திருடி சென்றதை அறிந்த அவர் அது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஆங்கிலேயர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் செந்திவிநாயக புரத்தில் அருப்புக்கோட்டை செல்லும் பழைய சாலையில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல், முத்து முனியசாமி யாக வழிபாட்டில் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவ னத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கண்டறிந்தனர்.

    இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

    ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலங்களில் மைல் கற்களில் ஊர்ப்பெயர் களை ஆங்கிலம், தமிழிலும், தூரத்தை ரோமன், தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்துள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்க ளில் இத்தகைய மைல் கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார்.

    விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் விருதுபட்டி என ஆங்கிலத்திலும், விருது பட்டி என தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர் ெரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், '௧' என்ற தமிழ் எண்ணிலும் மைல் கல்லில் குறித்துள்ள னர். ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கல்லில் கருப்பு பெயிண்ட் அடிக்கப் பட்டுள்ளதால் இதன் எழுத்துகள் தெளி வாக இல்லை. இக்கல் வழிபாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக உள்ளது.

    ஒருங்கிணைந்த ராமநா தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து 1915-ல் நகராட்சி யான விருதுநகர், 1923-க்கு முன் விருதுபட்டி என அழைக்கப்பட்டது. மதுரை யில் இருந்து தூத்துக்குடி வரை ெரயில் பாதை போட்டபோது, 1876-ல் விருதுபட்டியில் இரயில் நிலையம் வந்தது. இதனால் இவ்வூர் முக்கிய வர்த்தக நகரானது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இது உதவியது. இப்போதும் கூட இவ்வூர் ரயில் நிலைய சுருக்கக் குறியீடு விருதுப்பட்டியைக் குறிக்கும் வி.பி.டி. தான்.

    அருப்புக்கோட்டையின் உற்பத்திப் பொருட்கள் வண்டிகள் மூலம் விருது பட்டி ெரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆயின. பொருட்களை விரைவாக கொண்டு செல்ல அருப்புக் கோட்டை யிலிருந்து சரளைக்கல் சாலை போடப்பட்டபோது, இம்மைல்கல் வைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது வைக்கப்படும் மைல்கல் போல இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டு சாலையைப் பார்த்தவாறு நிறுவப்பட்டிருக்கும்.

    மேலும் விருது என்ற சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம், மரபுவழி என பல பொருள்கள் உண்டு. முல்லை நில ஊர்கள் பட்டி எனப்படும். பெருங்கற்காலம் முதல் காசி, கன்னியாகுமரி பெருவழிப் பாதையில், வெற்றிச் சின்னமாக, வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வூர் விருதுபட்டி என பெயர் பெற்றதாகக் கருதலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி இவ்வூர் 'விருதுகள்வெட்டி' என முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், ஆங்கிலே யர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தபோது, 1869-ல் வெளியிடப்பட்ட நூலில் விருதுப்பட்டி என்றே இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மைல்கல்லின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.1875க்கு முன் நடப்பட்டதாகக் கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாலிபரை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி யாதவர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 35). இவர் அங்குள்ள கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அேத பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விசிலடித்து அங்கிருந்தவர்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை முத்துராஜா தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அங்கி ருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த முத்துராஜா சிறிது நேரம் கழித்து மீண்டும் கலை நிகழ்ச்சி களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வெங்க டேஷ் மற்றும் அவரது உறவினர்க ளான ராகவன், ரமேஷ், முத்து, முத்து சரவணன், லட்சுமி உள்ளிட்ட 11 பேர் அவரை வழி மறித்து தகராறு செய்த னர். மேலும் அவரை தாக்கினர். இதை தடுக்க வந்த முத்துராஜாவின் தந்ைத முத்தையா, ராமகிருஷ்ணன், ஆதிமுகிலா ஆகியோருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் காயம் அடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுகுறித்து முத்துராஜா கூமாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    • பாலித்தீன் நிறுவனத்தில் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பேராலி ரோட்டில் தனியார் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மார்க்கெட்டிங் மேலாளராக கலைசெல்வன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈரோட்டை சேர்ந்த நடராஜன் வாசுதேவன் என்ற வியாபாரி அறிமுகமானார்.

    இதைத் தொடர்ந்து பல தவணைகளில் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 351 மதிப்புக்கு நடராஜன் வாசுதேவன், கலைச்செல்வன் மூலமாக பாலித்தீன் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கினார். இதற்கான தொகை செலுத்துமாறு கலை ச்செல்வன் அவரிடம் கேட்ட போது, 15 நாட்களுக்குள் தொகையை முழுவதுமாக கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் விருதுநகருக்கு வந்த நடராஜன் வாசுதேவன், ரூ.16லட்சம் மதிப்புக்கு 2 காசோலைகளை கலைச்செல்வனிடம் கொடுத்தார். பின்னர் அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது.

    இதையடுத்து கலைச்செல்வன் ஈரோட்டுக்கு சென்று, நடராஜன் வாசுதேவனிடம் தொகையை ரொக்கமாக தருமாறு கேட்டுள்ளார். அப்போது பணம் கேட்டு நேரில் வந்து சந்திக்க கூடாது என்று கூறி, நடராஜன் வாசுதேவன் கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலை யத்தில் கலைச்செ ல்வன் புகார் செய்தார். அதன்பேரில் நடரா ஜன் வாசுதேவன் மீது போலீசார் வழக்கு ப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே வாலிபர்-தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினர்.
    • நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார. இவரது மகன் கனகவேல் (18). இவர் உறவினர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

    வாலிபர் பலி

    ஏ.ராமலிங்காபுரம் விலக்கு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் கனகவேலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

    பின்னர் மயக்கம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கனகவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிலாளி

    விருதுநகர் மாவட்டம் எம்.துரைச்சாமி புரத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது50). தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கடைகளுக்கு சென்று மிக்சர் பாக்கெட் விநியோகம் செய்வார். இந்த நிலையில் சைக்கிளில் சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூதாட்டி

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (68). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    • அருப்புக்கோட்டை அருகே விவசாயி-தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
    • சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கள்ளுமடத்தை சேர்ந்தவர் மணிமாறன் (44) விவசாயி. கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மணிமாறன் மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (58). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பர்வதம். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கருப்பசாமி தனியாக வசித்து வந்தார். ஆனால் தனது சம்பளத்தை மட்டும் மனைவியிடம் கொடுத்து விடுவாராம். வீடு கட்டுவதற்காக இடம் கொடுத்தது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விறகு வெட்டுவதற்காக வாங்கிய அரிவாளுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து தங்களை தாக்குவதற்காக வருவதாக கருப்பசாமியின் மகன் தவறாக நினைத்து அவருடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து பர்வதம் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே உள்ள அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் சாரைப்பாம்பு கிடந்தது.
    • அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குளம் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி திறக்கப்படு வதை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளி முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

    இந்த நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை துப்புரவு பணி யாளர்கள் சுத்தம் செய்த போது, குடிநீர் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதுகுறித்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமை யிலான வீரர்கள் ஆனைக் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து, தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

    • சந்தேகம் அடைந்த சோனைமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்தார்.
    • சோனை முத்து, அவருடன் பணி புரிந்த அழகம்மாளுடன் மாயமானது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் சோனைமுத்து (வயது35). இவர் ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    அதே ஓட்டலில் அழகம்மாள் (22) என்பவர் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சோனைமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்தார்.

    இருப்பினும் அவர்களது பழக்கம் தொடர்ந்து வந்தது. சம்பவத்தன்று தனது மனைவி பாண்டியம்மாளிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சோனைமுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது கணவர் மாயமானது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சோனை முத்து, அவருடன் பணி புரிந்த அழகம்மாளுடன் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபா்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    அரசு விதிமுறைகளை பின்பற்றாத வணிகநிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம் 2021-ன்படி கடைகள் மற்றும் நிறுவ னங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவ னங்களில் பணி புரியும் அனைத்து தொழிலா ளர்களுக்கும் தங்களது பணி நேரம் முழுவதிலும் நின்று கொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

    மேற்படி சட்டதிருத்தத்தை கடைப்பிடிக்காத 12 நிறுவன உரிமையாளர்கள் மீது 1947-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    மேலும் தமிழில் பெயர் பலகை வைக்காத 5 திருமண மண்டப உரிமையாளர்கள் உள்பட 39 கடைகள், நிறுவன உரிமையாளர்கள் மீது 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் விதி 15-ன் படியும் மற்றும் ஒரு உண வக உரிமையாளர் மீது 1950-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு விடுதிகள் விதி 42-ன்படியும் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, உமா மகேஸ்வரன், செல்வ ராஜ், பாத்திமா, துர்கா, பிச்சைக்கனி மற்றும் சிவசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் திருவிழாவில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது33). இவரது மனைவி ராஜ லட்சுமி(25). விருதுநகர் மாவட்டம் மூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவிக்கும், ராஜலட்சுமி யின் சகோதரர் சதீஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    இது தொடர்பான பிரச்சினையில் 6 மாதங்களுக்கு முன்பு சதீஷ் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் மணிமாறன் குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகேயுள்ள கொட்டமடக்கி பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு ராஜலட்சுமி கணவருடன் வந்தார். அங்கு மணிமாறன் சாமியாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் ராஜலட்சுமியை பார்த்ததும் ஆவேசமடைந்து திட்டியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் ராஜலட்சுமியின் சகோதரி முனீஸ்வரியை மணிமாறன் அரிவாளால் வெட்டினார். அதை தடுக்க வந்த சுரேசுக் கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதனால் காயமடைந்த இருவரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ராஜ லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

    • திருமண ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைதானார்.
    • சிறுமியிடம் பலமுறை உதயகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள குமிலாங்குலம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 19). இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப் படுகிறது.மேலும் அந்த சிறுமியிடம் பலமுறை உதயகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து நரிகுடி போலீசாருக்கு தகவல்த ந்த அதன் அடிப்படையில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய உதயகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர்.

    அதில் அந்த சிறுமியை காதலித்து வந்ததும், திருமண ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து நரிகுடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உதயகுமாரை கைது செய்தனர்.

    • முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.
    • மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது64). இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் 2-வது திருமணம் செய்தார். கடந்த சில வருடங்களாக மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அருப்புக்கோட்டை அண்ணா சிலை அருகேயுள்ள குப்பை தொட்டி ஒன்றில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர் ராஜகோபாலின் மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். முத்துக்குமார் அங்கு வந்து பார்த்தபோது ரத்த காயங்களுடன் ராஜகோபால் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×