என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சிகிச்சை பலனின்றி தமிழ்மாறன் பரிதாபமாக இறந்து போனான்.
    • செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் பி.வி.ஆர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன்.எலக்ட்ரீசியன். இவரது மகன் தமிழ் மாறன்(வயது8). காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்றுமாலை வீட்டில் இருந்த தமிழ்மாறன் தனது தாயின் சேலையை ஊஞ்சல்போல் கட்டி விளையாடினான். அப்போது எதிர்பாராதவிதமாக அவனது கழுத்தில் சேலை சுற்று இறுக்கியது. இதில் தமிழ்மாறன் மயங்கினான்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த பெற்றோர் அவனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்மாறன் பரிதாபமாக இறந்து போனான்.

    இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பலத்த காற்று மழை காரணமாக பழவேற்காடு கடலில் குறைந்த அளவு படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.
    • தாழ்வான இடங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    திருவள்ளூர்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    நேற்று இரவும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2-வது நாளாக நேற்று இரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

    திருவள்ளுரில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் இரவிலும் நீடித்தது. அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    திருத்தணி, தாமரப்பாக்கம், திருவாலங்காடு, ஆவடி, பூண்டி, பூந்தமல்லி செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 63 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில மற்ற இடங்களில் பெய்த மழை அளவ(மி.மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி-12

    பள்ளிப்பட்டு-18

    ஆர்.கே.பேட்டை-30

    சோழவரம்-32

    பொன்னேரி-17

    செங்குன்றம்-35

    ஜமீன்கொரட்டூர்-28

    திருவாலங்காடு-53

    பூந்தமல்லி-62

    பூண்டி-28

    தாமரைப்பாக்கம்-38

    திருவள்ளூர்-54

    ஊத்துக்கோட்டை-22

    ஆவடி-53

    பொன்னேரி அடுத்த உப்பளம், பழவேற்காடு மீஞ்சூர் அடுத்த அரியன் வாயல் நந்தியம்பாக்கம் கல்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. இதையடுத்து மின்தடை ஏற்பட்டது.

    தடப்பெரும்பாக்கத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் தெரு நாய் ஒன்று பலியானது. பலத்த காற்று மழை காரணமாக பழவேற்காடு கடலில் குறைந்த அளவு படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன. பொன்னேரி 9-வது வார்டு, பர்மா நகர், ரெயில் நிலையம் அருகில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி உள்ளது. ஆணையர் கோபிநாத் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு கன மழை கொட்டியது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்றத்தூரில் 82 மி.மீட்டர் மழை பதிவானது. காஞ்சிபுரத்தில் 42.7மி.மீட்டர், உத்திரமேரூர்-40.8 மி.மீட்டர், வாலாஜாபாத்-48.4, ஸ்ரீபெரும்புதூர்-78.4, செம்பரம்பாக்கம்-64.2.மி.மீட்டர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதியில் 2-வது நாளான நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுராந்தகத்தில் 79 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில்-55 மி.மீட்டர், செய்யூர்-25.3 மி.மீட்டர், தாம்பரம்-21.5 மி.மீட்டர், மாமல்லபுரம்-27 மி.மீட்டர், கேளம்பாக்கம்-44.2 மி.மீட்டர், திருக்கழுக்குன்றம்-45.4 மி.மீட்டர், திருப்போரூர்-37 மி.மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது.

    • புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1286 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் இடி-மின்னலுடன் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

    பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1649 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.70 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கனஅடியில் 2530 மி. கன அடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கும் வரை கண்காணித்து அதன் பிறகு உபரி நீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தொடர் மழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2228 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 781 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 419 மி.கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 115 கனஅடி தண்ணீர் வருகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1286 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 640 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 423 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மின்சார சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் எரிந்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.
    • புகைமூட்டத்தில் சிக்கிய பாலையா சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பன்னூர் தோமையர் தெருவை சேர்ந்தவர் பாலையா (வயது80). தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் மின் கசிவால் தீப்பிடித்தது. இதின் மின்சார சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் எரிந்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய பாலையாவால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்து விழுந்தார்.

    இதற்கிடையே பாலையாவின் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புகைமூட்டத்தில் சிக்கிய பாலையா சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர்.

    மப்பேடு போலீசார் பாலையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகை மூட்டத்தில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் பொன்னேரி புதிய தேரடி தெருவில் செல்போன் கடை வைத்து உள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றார்.

    நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 225 கன அடி தண்ணீர் வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கும்போது உபரி நீர் திறப்பது வழக்கம்.

    பூந்தமல்லி:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடி, மின்னலுடன் மழை கொட்டுவதால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி வருகிறது.

    இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழைகொட்டி தீர்த்தது. சுமார் 11 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது.

    இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1146 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.17 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2,403 மி. கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேலும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 225 கன அடி தண்ணீர் வருகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கும்போது உபரி நீர் திறப்பது வழக்கம். ஆனால் இப்போது ஏரியில் 19 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படாது.

    • மீனவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அசலாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது46).

    மீனவரான இவர் இன்று அதிகாலை லைட் ஹவுஸ் ஊராட்சிக்கு உட்பட்ட கரிமணல் எனும் இடத்தில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை அருகே மர்மமாக இறந்து கிடந்தார்.

    திருப்பாலைவனம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.
    • விபத்து குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். மாம்பழ வியாபாரி. இவரது மனைவி நிர்மலா (வயது 33). கேசவன் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து உள்ளார். நேற்று மாலை அவர் அங்கிருந்து மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். டிராக்டரை கேசவன் ஓட்டினார். அவரது மனைவி நிர்மலா அருகில் அமர்ந்து இருந்தார்.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.

    இதில் நிலை தடுமாறிய நிர்மலா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா இறந்தார்.

    இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார்.
    • குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப் பள்ளிதுறைமுக விரிவாக்க திட்டத்திற்கு இடம் அளித்ததற்காக 2009-ம் ஆண்டு காட்டுப் பள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 140 பேருக்கு பணி வழங்கப்பட்டது. அவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்ட நிலையில் நிரந்தர பணி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்பவர் உள்பட 11 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரையும் சந்தித்து புகார் மனு அளித்து உள்ளனர்.

    இதற்கிடையே நித்யா (33) உள்பட 4 பேர் கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் நித்யாவை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கினார். அவரை தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி கிராமமக்கள் ஏராளமானோர் திரண்டு துறைமுக நுழைவாயில் அருகே ஊராட்சித் தலைவர் சேதுராமன் தலைமையில் திரண்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நித்யாவின் பணிநீக்கத்துக்கு காரணமான துறைமுக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆவடி காவல் சரக துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கடலில் விழுந்து மாயமான நித்யாவை படகுகள் மூலம் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது கதி என்ன ஆனது? என்பது தெரியாததால் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர். இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து மனைவி லாவண்யாவை பிரிந்து செல்வபிரகாசம் தனியாக சென்று விட்டார். இதனால் லாவண்யா, தனது மகன் சர்வேஸ்வரனுடன் தனியாக வசித்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் மகன் சர்வேஸ்வரன் தவறி கிழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சர்வேஸ்வரன் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றி லாவண்யா தனது கணவர் செல்வபிரகாசத்துக்கு தகவல் தெரிவிக்க வில்லை.

    இதற்கிடையே செல்வ பிரகாசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனை பார்க்க சென்றபோது அவன் இறந்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் லாவண்யாவின் நடவடிக்கை குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

    இதையடுத்து செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யா, அவரது கள்ளக்காதலனான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து குழந்தை சர்வேஸ்வரணை அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    மேலும் கொலையை மறைக்க அவன் தவறி கிழே விழுந்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனால் ஆரம்பத்தில் லாவண்யாவின் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அவரும் மகன் சாவில் சோகத்தில் இருப்பது போல் நடித்து வந்தார்.

    ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது லாவண்யா தனது மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து லாவண்யா, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கணவர் பிரிந்து சென்ற பின்னர் வீட்டின் அருகே வசித்த மணிகண்டனுடன் லாவண்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களின் உல்லாச சந்திப்பிற்கு இடையூறாக குழந்தை சர்வேஸ்வரன் இருந்தான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், குழந்தை சர்வேஸ்வரன் உடலில் கடித்து வைத்து உள்ளார். மேலும் இருவரும் தொடர்நது குழந்தை சர்வஸே்வரனை அடித்து உதைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளியதில் குழந்தை சர்வேஸ்வரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டான். இது வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து லாவண்யா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அணிகள் மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதப் பிரதமரின் 9 ஆம் ஆண்டு சாதனை விளக்கும் வகையில் நடைபெற்ற அணிகள் மாநாட்டில் பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தலைமையில் பொதுச் செயலாளர்கள் வருண் காந்தி,முக்தா சரவணன், இளங்கோவன், கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி ஜெயபால் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பாஜக அரசின் பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினர். இந்த மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணிகள் தலைவர்கள் பிரவீண் குமார், சரத்குமார், நாகராஜ்,ராஜன், பிரபாகரன், கலாவதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நந்தன்,கோட்டி, பொதுச் செயலாளர் பொன்.பாஸ்கர்,முத்துராஜ்,பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார், பொது செயலாளர் கோகுல், ரமேஷ்,பொருளாளர் பாலாஜி பொன்னேரி நகர பட்டியல் அணி தலைவர் டி.ஹரிதாஸ், பாஜக நிர்வாகிகள் மகேஷ்வரி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • சென்னை குடிநீர் வாரியத்துக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல்,செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த மாதம் 1-ந் தேதிமுதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா தண்ணீரை அதிகமாக பயன்படுத்தியதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோபாயிண்டிற்கு நீர்வரத்து 356 கன அடியாக அதிகரித்து உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 330 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்கலாம் இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27 .62 அடியாக பதிவானது.1.263 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ×