என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மாமியார் அளித்த புகாரால் விசாரணைக்காக ராஜசேகர் போலீஸ் நிலையத்தில் இருந்தார்.
    • ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். சினிமா புரொடக்சனில் வேவை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் புவனேஸ்வரி. புவனேஸ்வரிக்கும் மதுரையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜசேகருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி கணவர் ராஜசேகரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். ஒன்றாக இருந்தபோது வங்கியில் பணம் கடன் வாங்கியது தொடர்பாக புவனேஸ்வரியிடம் கேட்பதற்காக நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக பானுமதி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    மாமியார் அளித்த புகாரால் விசாரணைக்காக ராஜசேகர் போலீஸ் நிலையத்தில் இருந்தார். அப்போது திடீரென அவர் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் ஏற்கனவே வயாகரா உள்ளிட்ட 10 மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளதாகவும் அவர் போலீசிடம் கூறினார்.

    இதையடுத்து ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாமியார் புகாரால் கைதாகாமல் இருக்க அவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    இதற்கிடையில் ராஜசேகர் மீது தகாத வார்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1469 கன அடி வரை தண்ணீர் வந்தது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1469 கன அடி வரை தண்ணீர் வந்தது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தக் 6,967 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. இது மொத்தம் கொள்ளளவில் 59 சதவீதம் ஆகும்.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2244 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 258 கனஅடி தண்ணீர் வருகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 386 மி.கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 12 கனஅடி மட்டுமே தண்ணீர் வருகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 1347 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் 419 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

    • சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    பெரியபாளையம் அடுத்த தண்டுமாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்கிற மண்டை பிரவீன்(வயது25). வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கஞ்சா விற்பனை மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.

    பெரியபாளையத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரவீன் தலையிட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர்.
    • கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பத்மாவதி நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் அஜீத்குமார்.தொழில் அதிபர். இவர் திருவள்ளூர் சி.வி.என். சாலையில் டயர் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் திருவள்ளூரில் நின்ற அஜீத்குமாரை 2 வாலிபர்கள் திடீரென மிரட்டினர். அப்போது உனது மனைவியால் எங்கள் மீது வழக்கு உள்ளது. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ. 10 லட்சம் தர வேண்டும். மேலும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அஜீத்குமார் அவர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் ராமமந்திரி பகுதியைச் சேர்ந்த குர்மனா கிருஷ்ணா(39), தர்மசிங் சீனிவாச ராவ் (38) ஆகியோர் என்பது தெரிந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு அவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்த அஜீத்குமாரின் மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்ததும் இதனால் அவர் விசாகப்பட்டினத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கைதான குர்மனா கிருஷ்ணா, தர்மசிங் சீனிவாசராவ் ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரசாயன கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியும் நீரை கொண்டு 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது

    இந்த புட்லூர் ஏரிக்கு அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்பட்டு மழைக் காலங்களில் மழை நீருடன் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக ஆண்டுதோறும் கனமழை பெய்யும் வேலைகளில் ரசாயன கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்டு ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் ரசாயனக் கலவையையும் புட்லூர் ஏரியில் விடப்பட்டதால் சுமார் 5 டன்னுக்கும் மேலான மீன்கள் ஏரியில் செத்துமிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் புட்லூர் ஏரியைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணியாளர்களையும், தலைமை ஆசிரியர் காவேரி மற்றும் ஆசிரியர் பெருமக்களை தரக்குறைவாக பேசி கலாட்டாவில் ஈடுபட்டனர்.
    • கடந்த மாதம் தாசில்தாரின் அறிவுறுத்தலின்படி சர்வேயர் அந்த இடத்தை அளந்து எல்லை கற்களை நட்டார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகங்களில் ரூ 6.77 லட்சம் செலவில் நபார்டு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் அருகே மழை நீர் குளம் போல் தேங்குவதை தடுக்கும் வகையில் தாழ்வான பகுதியில் மண் கொட்டும் பணி நேற்று நடைபெற்று வந்தது.

    அப்போது அங்கு வந்த சிலர் பள்ளி வளாகத்தில் மண் கொட்டி சமன் செய்யும் பணியை தடுக்கும் வகையில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்களையும், தலைமை ஆசிரியர் காவேரி மற்றும் ஆசிரியர் பெருமக்களை தரக்குறைவாக பேசி கலாட்டாவில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹேமபூசனம்,எஸ்.எம்.சி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ராஜேந்திரபாபு,கருணாகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்து மண் கொட்டும் பணியை தடுத்தவர்களிடம் நியாயம் கேட்டனர். மேலும், 1990-ல் ஆரணி பேரூராட்சிமன்ற தீர்மானத்தின்படி இப்பள்ளிக்கு தானம் வழங்கிய இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் தாசில்தாரின் அறிவுறுத்தலின்படி சர்வேயர் அந்த இடத்தை அளந்து எல்லை கற்களை நட்டார். அந்தப் பகுதியில் மண் கொட்டக்கூடாது என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு என்று தானம் வழங்கிய இடத்தை வருவாய்த் துறையினர் குளம் என்று இருப்பதை ஆரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று மாற்றாததே பிரச்சனைக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறினர்.

    எனவே, இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்,பொன்னேரி கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையை சீரமைக்க வேண்டுமென ஜிவாரி சிமெண்ட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • பொது மக்கள் நிலக்கரி ஏற்றி வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த கே. ஆர் பாளையத்தை சேர்ந்தவர் ரேவந்த் (26). இவர் மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது நண்பர் கௌதம் உடன் இருசக்கர வாகனத்தில் ரேவந்த் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காட்டுப்பள்ளி அருகே நிலக்கரி கிடங்கில் இருந்து கும்மிடிப்பூண்டிற்கு நிலக்கரி ஏற்றி செல்வதற்காக வந்த லாரி காமராஜர் துறைமுகம் சாலை அத்திப்பட்டு ஜுவாரி சிமெண்ட் சாலை அருகே பைக் மீது மோதியது.

    இதில் பின்னால் அமர்ந்திருந்த ரேவந்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ரேவந்த் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அண்ணா நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று ரேவந்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நீதி கேட்டு அடிக்கடி விபத்து ஏற்படுவதால் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென ஜிவாரி சிமெண்ட் சாலையில் மறியலில் ஈடுபட்டு நிலக்கரி ஏற்றி வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.

    தகவல் அறிந்த மீஞ்சூர் காவல் ஆய்வாளர் டில்லி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை நேற்று காலை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளை நிற முழுக்கை சட்டையும், வெள்ளை நிற கட்டம் போட்ட லூங்கியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கண்டன உரையை ஆற்றினார்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா, வடக்கு மாவட்டச் செயலாளர் பி.பலராமன், தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கண்டன உரையை ஆற்றினார்.

    இதில் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், கோ.ஹரி, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ராம்குமார், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம், திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் புட்லூர் சந்திரசேகர், சுதாகர், சிற்றம் சீனிவாசன் இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சோழவரம், பூண்டி, புழல் ஏரிகளுக்கும் நீர்வரத்து சரிந்து உள்ளது.
    • கோடை வெப்பம் அதிக அளவில் இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பூந்தமல்லி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 1649 கனஅடி வரை தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று பலத்த மழை இல்லாததால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து தற்போது குறைந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்றைய காலை நிலவரப்படி நீர் வரத்து 545 கனஅடியாக குறைந்துள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.83 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 2562 மில்லியன் கன தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சோழவரம், பூண்டி, புழல் ஏரிகளுக்கும் நீர்வரத்து சரிந்து உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2239 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 781 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இது 328 கனஅடியாக குறைந்து இருக்கிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 403 மி.கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 115 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இது 36 கனஅடியாக குறைந்து விட்டது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1320 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 670 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 421 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலி மேடு, பேருந்து நிலையம், சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் அதிக அளவில் இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று (21-ந்தேதி) கடைபிடிக்கபடுகிறது.

    இதையொட்டி திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 3 வயது முதல் 70 வயது வரை உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 49 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 30 நிமிடத்தில் 108 யோகாசனங்கள் செய்து சாதனை படைத்தனர். சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகா செய்து நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

    இதில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் உள்பட பலர் பங்கேற்றனர். யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
    • ஏரியில் உள்ள 8 மற்றும் 9-வது மதகுகள் பழுதடைந்து உள்ளன.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இதில் தற்போது 1286 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 640 கனஅடி தண்ணீர் வருகிறது.

    தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. ஏரியில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதற்கிடையே ஏரியின் மதகுகள் அருகே கரைகள் பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது அதிக அளவு தண்ணீர் உள்ளதால் அந்த விரிசல்களில் காற்றின் வேகத்தில் தண்ணீர் வேகமாக மோதி வருவதால் அதில் மண் சரியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பருவமழைக்கு முன்னர் கரைகள் முழுவதையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே ஏரியில் உள்ள 8 மற்றும் 9-வது மதகுகள் பழுதடைந்து உள்ளன. இதனை அதிகாரிகள் சீரமைக்க திட்டமிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.

    ஆனால் பூண்டி ஏரியில் தற்போது அதிக அளவு தண்ணீர் இருப்பதாலும், கிருஷ்ணா தண்ணீர் வந்துகொண்டு இருப்பதாலும் இந்த பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

    ×