என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்- ஆந்திராவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது
- மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர்.
- கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பத்மாவதி நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் அஜீத்குமார்.தொழில் அதிபர். இவர் திருவள்ளூர் சி.வி.என். சாலையில் டயர் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் திருவள்ளூரில் நின்ற அஜீத்குமாரை 2 வாலிபர்கள் திடீரென மிரட்டினர். அப்போது உனது மனைவியால் எங்கள் மீது வழக்கு உள்ளது. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ. 10 லட்சம் தர வேண்டும். மேலும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜீத்குமார் அவர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் ராமமந்திரி பகுதியைச் சேர்ந்த குர்மனா கிருஷ்ணா(39), தர்மசிங் சீனிவாச ராவ் (38) ஆகியோர் என்பது தெரிந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு அவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்த அஜீத்குமாரின் மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்ததும் இதனால் அவர் விசாகப்பட்டினத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைதான குர்மனா கிருஷ்ணா, தர்மசிங் சீனிவாசராவ் ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






