என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள்.
    • அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது.

    திருப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 25 சதவீத வரியை உயர்த்திய நிலையில் கூடுதலாக 25 சதவீத வரியை உயர்த்தி அறிவித்துள்ளார். இதனால் இந்திய பொருட்கள் விலை அமெரிக்காவில் உயர்வதன் காரணமாக வர்த்தகம் பெருமளவில் பாதிக்கும்.

    குறிப்பாக அமெரிக்காவுக்கான பின்னலாடைகள் ஏற்றுமதி ரூ.12,000 கோடி அளவில் பாதிக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள். 100 ரூபாய் ஆடைகள் இனி ரூ.150ஆக உயரும். அவற்றை வாங்க முடியாமல் அமெரிக்க நுகர்வோர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

    இந்தியாவுக்கான வரி உயர்வை போட்டி நாடுகளான பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் பட்சத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய அமெரிக்க ஆர்டர்கள் பாதிக்கும்.

    அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது. இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் செய்து கொண்டதால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான்.
    • அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் நேற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் அவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.

    மணிகண்டன் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

    இந்நிலையில் என்கவுண்டர் நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பது குறித்து காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான். ஆயுதத்தை எடுப்பதற்காக மணிகண்டனை அங்கு அழைத்து சென்றோம்.

    அரிவாளை எடுத்து எங்களை மணிகண்டன் துரத்த ஆரம்பித்தான். ஆயுதத்தை கீழே போடுமாறு இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் மணிகண்டன் கேட்கவில்லை.

    அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான். என் மீது தாக்குதல் நடத்திய பின்னர் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர்தான் சுட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சண்முகவேல் கொலை வழக்கில் 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.
    • தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் சிக்கனூத்தில் மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்த தொழிலாளர்களான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன்கள் மணிகண்டன்(30), தங்கபாண்டி(25), ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல்(57) மற்றும் போலீஸ்காரர் அழகுராஜா ஆகியோர் தோட்டத்திற்கு விரைந்து சென்று, தந்தை-மகன்கள் இடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க முயன்றனர்.

    அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன்கள் 3 பேரும், எங்களிடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க நீங்கள் யார்? என்று கேட்டு சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அரிவாளால் வெட்ட முயற்சிக்கவே, போலீஸ்காரர் அழகுராஜா அங்கிருந்து தப்பியோடி விட்டார். சண்முகவேல் தப்பியோட முயன்றபோது அவரை சரமாரி அரிவாளால் வெட்டினர். கழுத்தில் வெட்டியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல் உயிரிழந்தார்.

    இதையடுத்து தந்தை-மகன்கள் 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து அழகுராஜா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் தோட்டத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்ட கிடந்த சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தப்பியோடிய மூர்த்தி, மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோரை பிடிக்க திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலையாளிகளின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று எண்ணி தனிப்படையினர் வேடசந்தூர் பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் உடுமலை, குடிமங்கலம் பகுதியிலும் வலைவீசி தேடினர்.

    இந்தநிலையில் மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் எங்கு பதுங்கி உள்ளான் என்று விசாரணை நடத்தினர். அப்போது உடுமலை பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்றிரவு அங்கு சென்ற தனிப்படையினர் மணிகண்டனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விசாரணை நடத்தினர். அவரிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்தியபோது குடிமங்கலம் சிக்கனூத்து உப்பாறு ஓடை பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தான்.

    இதைத்தொடர்ந்து ஆயுதத்தை பறிமுதல் செய்வதற்காக மணிகண்டனை, குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம், சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் மற்றும் போலீசார் வேனில் உப்பாறு ஓடை பகுதிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

    அங்கு சென்றதும் போலீசார் மணிகண்டனை வேனில் இருந்து இறக்கி, அரிவாளை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்று அதனை மீட்க முயன்றனர். அப்போது அரிவாளை எடுத்த மணிகண்டன், போலீசாரிடம் இருந்து தப்பிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமாரின் வலது கையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றான்.

    அவரை பிடிக்க முயன்ற போலீசாரையும் வெட்ட முயன்றான். இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் தற்காப்புக்காக மணிகண்டனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது உடலில் குண்டு பாய்ந்தது.

    இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,கிரிஷ் யாதவ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கிசூடு நடந்த உப்பாறு ஓடை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

    • திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை
    • எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.

    மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

    • வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
    • பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கணவர் குடும்பத்திற்கு 120 சவரன், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் பிரீத்தியை கொடுமைப்படுத்தியதாகி கூறப்படுகிறது

    இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    • மூர்த்தி 2ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மகன்கள் ஒரு மாதத்திற்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்தனர்.
    • கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சிறந்த அதிகாரி.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் குடும்பத்தினரை திருப்பூர் புறகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் மகேந்திரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோரிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரிபார்த்த பிறகே வேலையில் சேர்த்தேன். மூர்த்தி 2ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மகன்கள் ஒரு மாதத்திற்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்தனர். கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சிறந்த அதிகாரி.

    அவர் கொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.

    • அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.
    • மோதலில் ஈடுபட்ட 4 பேரும் திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொன்றனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.

    மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட 4 பேரும் திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொன்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிக் கொன்றதாக கூறப்படும் மணிகண்டன், அவரது சகோதரர், தந்தையும் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள 6 தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெட்டிக்கொலை.
    • 4 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலை செய்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

    நேற்றிரவு அப்பாவுக்கும் மகனுக்கும்  இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான சண்முகவேலிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரும் ஒரு காவலரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தகராறு ஏற்பட்ட இருவரையும் அழைத்து பேசியுள்ளார். அவர்களை சமாதானம் செய்து வைத்துவிட்டு திரும்பியுள்ளார். அப்போது ஒருவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் மீது பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் பலர் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர்.
    • சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரிய வருகிறது.

    திருப்பூர்:

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆயத்தமாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி, தேசியக்கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் வந்துள்ளது. ஆண்டுதோறும் தேசிய கொடிகளை தயாரித்து வருகிறோம். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தேசிய கொடிகளை இப்போது விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம்.

    ஆர்டர்களின் பேரில் பெற்ற கொடிகள் தயாரிப்பு பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. சில பின்னலாடை நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. பெண்கள் பலர் வீடுகளிலேயே வைத்து தயாரிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பலர் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர். முன்பெல்லாம் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் தேசிய கொடியை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது பலர் புதிதாகவே வாங்கி ஏற்றுகின்றனர். இதன் மூலம் எங்களுக்கு லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் கிடைக்கிறது.

    வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரிய வருகிறது.

    10க்கு 16 இன்ச், 18க்கு 22 இன்ச், 20க்கு 26இன்ச், 20க்கு 40 இன்ச், 40க்கு 60இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.2 முதல் ரூ.300 வரை கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது. ஐதராபாத்தில் பிரிண்டிங் செய்து, அங்கிருந்து கொண்டு வந்து வெட்டி தைக்கிறோம். தற்போது தேசியக்கொடி தைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அனைவரும் 10-ந்தேதிக்குள் தைத்துத்தர கேட்டிருப்பதால் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன என்றார். 

    • கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
    • சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 58). இவர் புலிப்பல் வைத்திருந்ததாக கூறி, கடந்த 29-ந்தேதி உடுமலை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள குளியலறையில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதால் மாரிமுத்து உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டினர். போலீசார், வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்காக மாரிமுத்து உடலை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    நேற்று காலை உடுமலை மாஜிஸ்திரேட்டு நித்யகலா முன்னிலையில் மருத்துவர் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடுமலை ஆர்.டி.ஓ., குமார், டி.எஸ்.பி., நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    மருத்துவமனை வளாகத்தில் மாரிமுத்துவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவரது குடும்பத்தினர் அடையாளம் உறுதிப்படுத்திய பின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.

    பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அங்கு திரண்டிருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பிரேத பரிசோதனை கூடம் முன் அமர்ந்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாரிமுத்துவின் உறவினர்கள், பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும். இந்த வழக்கை வன்கொடுமை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல் குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 

    • போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
    • பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று மாலை கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில வாலிபர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இது குறித்து சிறுமி வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறுமி மாலை தனது தாயிடம் அடி வயிற்றில் வலி ஏற்படுவதாகவும், மேலும் பள்ளியில் நடந்த சம்பவத்தையும் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த கே.வி.ஆர் நகர் சரக உதவி கமிஷனர் ஜான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமை சேர்ந்த ஜெய் (27) என்பவரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 100க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு ஒன்று கூடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் நடந்த சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

    • மாரிமுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • மாரிமுத்துவை கொலை செய்து விட்டதாக மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு.

    உடுமலை:

    உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45).

    இவர் தமிழக கேரள எல்லையில் நேற்று இரவு புலிப்பல் கடத்தி வரும்போது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் விசாரணைக்காக உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு பின்னர் அலுவலர்கள் வெளியே சென்றனர். அப்போது மாரிமுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் வன ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வன ஊழியர்கள் இதுகுறித்து உடுமலை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் உடுமலை டிஎஸ்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே, மாரிமுத்துவை கொலை செய்து விட்டதாக கருமுட்டி மேல் குருமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    தொடர்ந்து தற்கொலை குறித்து வன அலுவலர் ராஜேஷ், வருவாய் கோட்டாட்சியர் குமார், உடுமலை டி.எஸ்.பி நமச்சிவாயம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

    ×