என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றவாளி மணிகண்டன் என்கவுண்டர்- காயமடைந்த உதவி ஆய்வாளர் விளக்கம்
- உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான்.
- அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் நேற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் அவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.
மணிகண்டன் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் என்கவுண்டர் நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பது குறித்து காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான். ஆயுதத்தை எடுப்பதற்காக மணிகண்டனை அங்கு அழைத்து சென்றோம்.
அரிவாளை எடுத்து எங்களை மணிகண்டன் துரத்த ஆரம்பித்தான். ஆயுதத்தை கீழே போடுமாறு இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் மணிகண்டன் கேட்கவில்லை.
அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான். என் மீது தாக்குதல் நடத்திய பின்னர் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர்தான் சுட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.






