என் மலர்
திருவாரூர்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார்.
- திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்று, நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இதை மீறி இந்த வழிதடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
- பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்குப் பிறகு பச்சைபயிறு சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு முற்றிலும் தண்ணீர் தேவைப்படாது. தற்பொழுது 35 நாட்களான பச்சைப் பயிறு சங்கு வைத்து பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது. இன்று 2-வது நாளாகவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாகுபடி வயல்களில் பச்சைப் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூக்கள் அனைத்தும் கொட்டி பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.
குறிப்பாக கமலாபுரம், வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், கோட்டூர், பூந்தாலங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான பயிர் செடிகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு பச்சைப் பயிறு சாகுபடி செய்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு டானிக் மற்றும் பூச்சி மருந்துகள் சுமார் ரூ.4000-க்கு தெளித்து செலவு செய்தோம். எனவே அரசு உடனடியாக பாதிப்புகளை பார்வையிட்டு பயிர் காப்பீட்டு தொகை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
- மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான்.
- மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வருகை தந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு இருமொழி கொள்கையை கடைபிடிப்பது என்பது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு நடைபெறவில்லை. காமராஜர், அண்ணா காலங்களில் இருந்து தற்போது வரை இருமொழி கொள்ளை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்கவும், இந்தி பேசுகிற மாநிலங்களில் சமஸ்கிருத்தை திணிக்கவும் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைக்கிறது. மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான். எனவே, மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி கொடுத்துவிட்டு, கேரளா மற்றும் தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காதது பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களை தண்டிப்பது போன்றதாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக உள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது எதற்கு? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
மன்னார்குடி:
கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்தும் விலையேற்றத்திற்கு காரணமான கிரஷர் கம்பெனிகளை கண்டித்தும் , தமிழக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தும் விதமாகவும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பு அகில இந்திய கட்டுனர் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து எம் சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை மன்னார்குடி அருகே உள்ள கோவில்வெண்ணி, செருமங்கலம், காரிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் ஏராளமானோர் திரண்டு மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து லாரிகள் அங்கேயே நிற்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
- சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.
முத்துப்பேட்டை:
இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் சான்றிதழ் வழங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் பணிகளையும் ஆராய்ந்து போலீஸ் நிலையங்களின் வருடாந்திர தர வரிசையில் சிறந்த போலீஸ் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை மத்திய அரசு தேர்வு செய்யப்பட்டு அங்கீகரித்துள்ளது.
இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. இதனையொட்டி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.
அப்போது தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிலிப் பிராங்களின் கென்னடி மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் கூறுகையில்:-
இன்றியமையாத காவல் துறை பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தையும் முறையாக கையாண்டு, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் நான் மனதார பாராட்டுகிறேன் என்றார்.
- நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- நெற்கதிர்கள் அரிசியாக்கப்பட்டு வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படும்.
வேதாரண்யம்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
அங்கிருந்து வரும் நெல்லை கொண்டு தினமும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கு விளைந்த அறுவடை செய்து முதல் நெல்லை தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தைப்பூச தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கோட்டையாக கட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
முன்னதாக களஞ்சியம் விநாயகர் கோவிலின் முன்வைத்து சிவகுமார் குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வேதாரண்யம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் சன்னதியின் முன்பு வைக்கப்பட்டு, நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது.
பின்னர், அந்த நெற்கதிர்கள் அரைத்து அரிசியாக்கப்பட்டு இன்று வேதாரண்யேஸ்வரருக்கு நடக்கும் 2-ம் கால பூஜையில் நிவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
நெல் கோட்டை ஊர்வலத்தின் போது வேதாரண்யம் கோவில் நிர்வாகத்தினர், யாழ்பாணம் வரணி ஆதீனம், செவ்வந்தி நாத பண்டாரசந்நிதி, இளையவர் சபேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது.
திருவாரூர்:
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி (ஆயில்ய நட்சத்திரத்தன்று) நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கோவிலில் உள்ள ருண விமோசனர் சன்னதியின் அருகில் உள்ள கல் தூணிற்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிவவாத்தியங்கள் முழங்க திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெற்று, தேரடியில் உள்ள ஆழித்தேர் அருகில் வைக்கப்பட்ட 5 பனஞ் சப்பைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலை மற்றும் மாவிலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பூஜை செய்யப்பட்ட பனஞ் சப்பைகள் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அதிக உயரமுள்ள பனஞ்சப்பை ஆழித்தேர் எனப்படும் தியாகராஜர் தேரில் வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோபர்ட் (வயது 40). ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுபலெட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 8 மாதங்கள் குடும்பம் நடத்திய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சுபலெட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இது தொடர்பாக ரோபர்ட்டுக்கும், சுபலட்சுமியின் அண்ணன் சிவநேசனுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாயனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறப்பிற்காக பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சிவனேசன் அவரது நண்பர் கோபி உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரோபர்ட்டுக்கும், சிவநேசனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரோபர்ட் ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது சிவநேசன், கோபி உள்ளிட்ட 6 பேர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றி சிவனேசன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து ரோபர்ட்டை கத்தியால் குத்தி தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த தாக்குதலில் ரோபர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கரூண் கரட் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவனேசன் ,கோபி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனவைி அவரை பிரிந்து சென்று விட்டார்.
- வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், பெரும்பண்ணையூர் செல்வம் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (வயது 67). இவரது மனைவி பட்டு (64).
இந்த முதிய தம்பதியினருக்கு திருநாவுக்கரசு என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். மகன் திருநாவுக்கரசுவிற்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனவைி அவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு திருநாவுக்கரசு உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் 6 மாதத்திற்கு முன்பு மருமகள், தனது வீட்டிற்கு புதிய பூட்டு போட்டு பூட்டியதுடன், வீட்டிற்கு வந்த தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து கடந்த 6 மாதமாக மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது தங்கள் வீட்டை மருமகளிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும் என திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சவுமியாவிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்று கொண்ட வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
- காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபடுகின்றனர்.
- தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது.
மன்னார்குடி:
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி சென்னை, திருவாரூரில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் (வயது 38) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபடுகின்றனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் அந்த இயக்கத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள், தடயங்கள் எதுவும் இருக்கின்றதா? என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போன்களையும் கைப்பற்றி, அதில் ஏதேனும் தகவல்கள் இருக்கின்றதா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்டில் ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது.
என்.ஐ.ஏ. சோதனையை யொட்டி பாபா பக்ருதீன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மன்னார்குடியில் காலை முதல் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகம் அபிவிருத்தீஸ்வரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த தம்பதிக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ஏற்கனவே இறந்து விட்டார்.
இவரது மகள் மஞ்சு பிரியா குடவாசலில் ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். மகன் பிரசன்னா எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் 3 பேரும் திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் மஞ்சுபிரியா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் தாய் ராஜலட்சுமி, தம்பி பிரசன்னா ஆகிய இருவரும் சுவற்றில் சாய்ந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதைப் பார்த்த மஞ்சு பிரியா ஓடிச்சென்று தனது தாயை தொட்டுள்ளார். அப்போது மஞ்சு பிரியாவை மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.
பின்னர் மின்சாரம் தாக்கி ராஜலட்சுமி, பிரசன்னா ஆகியோர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கொரடாச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தாய், மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மஞ்சு பிரியா கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் கிறிஸ்தவனாக இருப்பது பற்றி பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
- சனாதனத்தை கண்டிப்பதற்காகவே தன்னை கிறிஸ்தவன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிக் கொள்வது போன்று தெரிகிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் கிறிஸ்தவனாக இருப்பது பற்றி பெருமைப்படுவதாக தெரிவித்தார். இது முற்றிலும் தவறான போக்கு மற்றும் கண்டிக்கத்தக்கது.
பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருந்து கொண்டு மற்றொரு மதத்தை விமர்சிப்பதும், குறிப்பாக இந்து மதம் நம்புகின்ற சனாதனத்தை விமர்சிப்பதும் கண்டிக்கத்தக்கது. சனாதனத்தை கண்டிப்பதற்காகவே தன்னை கிறிஸ்தவன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிக் கொள்வது போன்று தெரிகிறது.
அமைச்சர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் பொதுவானவர்கள் என்பதை உணர்ந்து, தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






