என் மலர்
திருநெல்வேலி
+2
- சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
- 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.
இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
- கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
- பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது. கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.
இந்நிலையில், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.
- எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 3 மாவட்டங்களிலும் இன்று காலை வரையிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை, பாளை ஆகிய இடங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லி மீட்டர் பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது .
118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 116 அடி நீர் இருப்பு உள்ளது. பிரதான பாபநாசம் அணையில் 135 அடி நீர் இருப்பு இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே விவசாயிகள் நல் நடவு செய்தனர். இதன் காரணமாக அவை கதிர் உண்டாகும் நிலையில் உள்ளது. அவை இன்னும் ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை முதல் இரவு வரையிலும் கயத்தாறு மற்றும் கழுகு மலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லி மீட்டரும், கழுகு மலையில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
இதேபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சிவகிரி பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
- கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை திடீரென பரவலாக மழை பெய்தது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக காலை 7 மணி முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் அதிகாலையில் பெய்தது.
நெல்லை மாநகர பகுதியில் இன்று காலை 7.30 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் தொடக்கத்தில் லேசான சாரல் அடித்த நிலையில் படிப்படியாக மழை அதிகரித்தது. சுமார் 1 மணி நேரம் தச்சநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. டவுனில் சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டையில் அரை மணி நேரமாக பெய்த கனமழையினால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர்.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் வண்ணார் பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நனையாமல் மழைக்கு ஒதுங்கி நின்றனர். காலையில் பெய்த மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர். திடீரென பெய்த மழையால் அவர்கள் பணிக்கு செல்லவும், பள்ளிகளுக்கு செல்லவும் தாமதம் ஏற்பட்டது. மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெய்த மழையில் பெண்கள் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.
மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 20 மில்லிமீட்டரும், நெல்லை யில் 7.40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணை பகுதியில் மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதல் ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சிவகிரி பகுதிகளிலும் காலையில் இருந்து சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதி, திருச்செந்தூர் சாலை, கடற்கரை பகுதிகளில் இன்று காலை சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. ஒரு சில இடங்களில் அதிகாலை 3 மணிக்கு சாரல் மழை தொடங்கிய நிலையில் 4 மணி அளவில் இடி-மின்னலுடன் ஒரு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் சாலையில் மழை நீர் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் முள்ளக்காடு, பழைய காயல், ஆறுமுகநேரி, முத்தையா புரம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் தற்போதைய மழையால் அவை தடைபட்டுள்ளன. மாவட்டத்தில் அதிக பட்சமாக காயல்பட்டி னத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது.
- கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி, மிளா என பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை சேதப்படுத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடியும் வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பாபநாசம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரது மகன் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் புகுந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த சுமார் ஒரு வயதுடைய கன்றுக்குட்டியை கழுத்து பகுதியில் பிடித்து கடித்துள்ளது. இதில் அந்த கன்று குட்டியின் முகம் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

வலி தாங்க முடியாமல் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சத்தம் போட்டதால் சிறுத்தையானது வனப்பகுதியை நோக்கி சென்றது. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்தில் வனத்துறையினர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். குட்டி சிறுத்தை வந்திருக்கலாம் எனவும், பெரிய சிறுத்தையாக இருந்திருந்தால் கன்று குட்டியை அடித்து இழுத்து சென்று இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
- 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 1 மற்றும் 2-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் பிரிந்து வழங்கப்படுகிறது.
மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எரிபொருள் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கூடன்குளத்தின் முதல் 2 அணு உலைகள் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாட்கள் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அந்த அணு உலைகளில் மின் உற்பத்தி தொடங்கும்.
இந்நிலையில் முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ( திங்கட்கிழமை) மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- கடந்த 1 மாதத்தில் 20 பனை மரங்கள், 23 தென்னை மரங்கள், 15 வாழைகளை யானை சாய்த்துள்ளது.
- ஒற்றை யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் காட்டு பத்து, மேலகாடு பகுதிகளில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இடம் பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் முகாமிட்டு தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.
பகலில் மலையடி வார புதர்களில் தஞ்சமடையும் யானை இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, பனை, வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்வதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
கடந்த 1 மாதத்தில் 20 பனை மரங்கள், 23 தென்னை மரங்கள், 15 வாழைகளை யானை சாய்த்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. எனவே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், நாசமான வாழை, தென்னை, பனை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.
நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் மழை நீர் தேங்கிய நிலையில் நெல்லை, மேலப்பாளையம், தாழையூத்து ஆகிய மண்டலங்களில் மழைநீர் முழுவதும் வடிந்துள்ளது.
ஆனால் பாளை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது.
குறிப்பாக பாளை மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநகர பகுதி முழுவதும் சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ ராவ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இன்று வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கொசு மருத்து தெளிக்கப்பட்டது. மேலும் பாளை பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெறுகிறது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் டெங்கு தடுப்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் டெங்கு அறிகுறி காணப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டு அங்கு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
- பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.
- பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் குடிதாங்கிகுளம், பத்மநேரி குளம், கங்கணாங்குளம், சிங்கிகுளம் மற்றும் பச்சையாறு அணை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.
கணக்கெடுப்பு பணியுடன் பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு சில குளங்களில் கழிவுநீர் கலப்பதால் பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாகவும், குழுவினர் தெரிவித்தனர்.
கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- “ஆழி சூழ் உலகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன்.
நெல்லை:
குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பத்ம விபூஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்து பாளை புனித சவேரியார் பள்ளியில் அவர் தனது உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.
தமிழ் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் இவர் பணியாற்றினார். இவர் கொற்கை, ஆழிசூழ் உலகு உள்ளிட்ட பல நாவல்களையும், புலம்பல்கள் என்ற கவிதையையும், விடியாத பொழுதுகள் உள்ளிட்ட ஏராளமான ஆவண படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனங்களை இவர் எழுதி உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடற்கரை மக்களுக்கான அங்கீகாரமாக இதனை நான் பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.
நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன். அந்த வகையில் அதனை மத்திய அரசு அங்கீகரித்திருப்பதில், கடலோர மக்களை அரசு மதிக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம் என்றார்.
- தேசிய கொடியை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஏற்றி மரியாதை செய்தார்.
- குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
குடியரசு தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தின விழாவையொட்டி கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசியக்கொடி எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து கொடிக்கம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஏற்றி மரியாதை செய்தார்.
அப்போது கோவில் யானை காந்திமதி 3 முறை பிளிறி, தேசியக் கொடிக்கு வணக்கம் செய்தது. அதே வேளையில் கோவில் ஊழியர்களும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து தேசியக் கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.
நெல்லை:
இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறந்திட வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.
தொடர்ந்து தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அதனை வழங்கி வரும் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.






