என் மலர்
திருநெல்வேலி
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
- உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அங்கு உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங் உட்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நெல்லை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை 3 கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் அவற்றில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார். தொடர்ந்து 4-வது முறையாக இந்த வழக்கு இன்று நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நேரில் ஆஜரானார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
அப்போது எதிர்தரப்பு வக்கீல் மகாராஜன் தாங்கள் இந்த வழக்கிற்காக ஆஜராக வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பல்வீர் சிங் தரப்பு வக்கீல் துரைராஜ், இந்த வழக்கை அரசு வக்கீல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படி அவருக்கு உதவி புரிவதற்காக வக்கீல்கள் நியமிக்கப்பட்டால் அதற்கான உத்தரவு நகலை தங்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
- ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது.
- ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.
சிங்கை:
நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளை அழைத்து வர தனியாக பள்ளியில் பஸ்கள் இருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள அடையக்கருங்குளம், அகஸ்தியர்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் தினமும் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று காலை வழக்கம்போல் வி.கே.புரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சுமார் 11 குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டனர்.
ஆட்டோவை அடையக்கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். டிரைவரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரை நாதன் என்பவரது மகன் பிரதீஷ்(வயது 10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தார்.
அகஸ்தியர்பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சுந்தர் 'பிரேக்' பிடித்துள்ளார்.
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரின் அருகே அமர்ந்திருந்த பிரதீஷ் ஆட்டோவின் அடியில் சிக்கி கொண்டான்.
இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஆட்டோவின் கண்ணாடிகள் நொறுங்கியது.
தகவல் அறிந்து வி.கே. புரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவன் பிரதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அம்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
- கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.
நெல்லை:
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களையும், பயிர்களையும் அழிக்கும் காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி இன்று பாளை பெருமாள்புரத்தில் உள்ள நெல்லை மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் ஆபிரகாம் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியதாவது:-
நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்துள்ளோம். மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் வன விலங்குகள் ஏற்படுத்தும் சேதங்கள் தான்.
காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் மானாவாரி பயிர்களை கூட விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறோம்.
நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட எந்த பயிர்களுக்கும் ஆதார விலை கூட அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை நன்றாகப் பெய்து தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி உள்ளோம்.
எனவே காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் எவ்வித சிரமமும் இன்றி விவசாயத்தில் ஈடுபட முடியும்.
100 சதவீதம் நடக்க வேண்டிய விவசாயம் தண்ணீர் இருந்தும் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் 40 சதவீதம் தான் நடக்கிறது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அவை வீணாகி விடுகிறது.
இந்த கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
- கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள செம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி அன்ன ஜெமிலா (வயது 60). இவரது மகள் சகாய ஜூலி (25).
இவர்கள் 2 பேரும் நேற்று அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் அன்ன ஜெமிலாவின் மற்றொரு மகளை திசையன்விளை அருகே உள்ள அதிசயபுரத்தில் அவரது வீட்டில் விட்டுவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பினர்.
அப்போது திசையன்விளை புறவழிச்சாலை அருகில் இசக்கியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே உவரியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகன் பிபின்குமார்(20) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே மதியழகனும், அன்ன ஜெமிலாவும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்த சகாய ஜூலிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திசையன்விளை கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ்களாக மாறிவிட்டதால் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.
அந்த வழியாக பயணிகள், மாணவ-மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக இறங்கவேண்டிய நிலை இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையை தவிர்க்கும் விதமாக உடனடியாக பஸ் படிக்கட்டுகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடி வாரத்தில் கடந்த 3 மாதமாக ஒற்றை யானை முகாமிட்டு, விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.
காட்டு பத்து, மேலகாடு விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெல், தென்னை, பனை மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் ஒற்றை யானை மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்து கொண்டு விவசாயிகள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதைக்கண்ட யானையும் சற்று பின்வாங்கியது. உடனடியாக விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஒற்றை யானை தினசரி விளைநிலங்களில் நுழைகிறது. எங்கள் பயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்துள்ளோம். யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானையிடமிருந்து பயிர்களையும், உடமைகளையும் காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறோம்.எனவே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக நேற்று மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார்.
- கங்கணாங்குளத்தில் ஒரு மண்டபத்தில் தொண்டர்களுடன் சந்தித்து பேசும் நிகழ்ச்சி இருந்தது.
நெல்லை:
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக நேற்று மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார்.
பின்னர் மாலையில் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அதன்பின்னர் நெல்லை சந்திப்பு பகுதியில் தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார்.
தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டம் அம்பை தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி யூனியன் கங்கணாங்குளத்தில் ஒரு மண்டபத்தில் தொண்டர்களுடன் சந்தித்து பேசும் நிகழ்ச்சி இருந்தது. இதற்காக அவர் இன்று காலை புறப்பட்டு கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்தார். இதனால் கங்கணாங்குளத்தில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையே தலை சுற்றல் காரணமாக ஓய்வெடுத்த ஓ.பன்னீர்செல்வத்தை டாக்டர்கள் பரிசோதித்தனர்.
அதனை தொடர்ந்து அவர் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்காமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னை புறப்படுவதாக உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- குழு தனது பயணத்தை கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில் மண்டல வாரியாக சென்று 10-ந்தேதி வரை கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
- நேருஜி கலையரங்கில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அந்த குழுவினர் பங்கேற்கின்றனர்.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பொதுமக்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள், தொழில் முனைவோர் என பலதரப்பட்டவர்களிடமும் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் அவர்களின் தேவைகளை அறிந்து அதனை வருகிற பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி களாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் வண்ணம் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்படுகிறது.
அதன்படி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒன்றை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பிரிவு மாவட்டங்களில் நேரடியாக சென்று பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
இந்த குழு தனது பயணத்தை கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில் மண்டல வாரியாக சென்று 10-ந்தேதி வரை கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்பதற்காக நெல்லை மண்டலத்தில் அந்த குழுவினர் இன்று மாலை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் அந்த குழு அங்கிருந்து கார் மூலமாக நெல்லை வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பாளை நேருஜி கலையரங்கில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அந்த குழுவினர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
- 11 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன் திருவோடு கன்றுகளை நட்டார்.
- திருவோடு மரத்தை ஆர்வத்துடன் பார்த்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவில் முன்பு 9 நிலை கொண்ட முழுவதும் கருங்கற்களால் ஆன 108 அடி உயர ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
11 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன் திருவோடு கன்றுகளை நட்டார். இந்த வகை மரங்கள் குளிர்ச்சியான பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. அட்சய பாத்திரம் என அழைக்கப்படும். திருவோடு சிவபெருமானுக்கு உகந்தது என்பதால் சிவ ஆலயமான சுயம்பு லிங்கசுவாமி கோவிலில் வளர்த்து வருவதாக கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் கூறினார்.
தற்போது இந்த மரம் காய்த்து குலுங்குகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்த்து குலுங்கும் திருவோடு மரத்தை ஆர்வத்துடன் பார்த்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.
- போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
- பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.
இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அங்கு பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
அப்போது பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை தந்த நிலையில் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவ நாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜ செல்வம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சுரேஷ், சங்கர், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.
நெல்லை:
நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நெல்லையில் இருந்து வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றுவிட்டு பின்னர் மதியம் 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இரவு 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே வாஞ்சி மணியாச்சிக்கும், நாரைக்கிணறுக்கும் இடையே வந்தே பாரத் ரெயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ரெயில் பெட்டிகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.
உடனே பெட்டிகளில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் ரெயில் வேகமாக வந்ததால் சிறிது நேரத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரெயில்பெட்டிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 6 பெட்டிகளின் இடது புறங்களில் சுமார் 9 இடங்களில் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்திருந்தது.இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் மர்ம நபர்கள் உருவம் எதுவும் பதிவாகவில்லை.
தொடர்ந்து சேதம் அடைந்த ரெயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது நாரைக்கிணறு பகுதியில் வைத்து இந்த கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் யாரேனும் அந்த பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
சம்பவ இடம் முட்புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்தது. மேலும் அந்த இடத்தில் மதுபாட்டில்கள் உள்ளிட்டவையும் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் கும்பல் ஏதேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா? அந்த கும்பல் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் வந்தே பாரத் ரெயில் மீண்டும் தனது இயக்கத்தை தொடங்கி சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
- வண்ணார்பேட்டையில் கவர்னர் வரும் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
- கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 போலீசார் நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நெல்லை மனோணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார்.
அவர் அங்கிருந்து கார் மூலமாக நெல்லை மாநகர பகுதி வழியாக நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வளாகத்திற்கு வந்தார். அவரது வருகையை ஒட்டி மாநகரப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் மகாத்மா காந்தி குறித்து அவர் பேசியதை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணார்பேட்டையில் கவர்னர் வரும் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை போலீசார் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காங்கிரஸ் அலுவலகம் முன்பு இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு அடைத்ததுடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு வாகனம் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.
இந்நிலையில், கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரசார் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து திரண்டனர். பின்பு அலுவலகம் முன்பு அமர்ந்து காந்தி பற்றி கவர்னர் பேசியதை கண்டித்து காந்தியின் புகழ் பாடும் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பஜனை பாடலை பாடி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 போலீசார் நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






