search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்து 5-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் ஆட்டோ.

    அம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்து 5-ம் வகுப்பு மாணவன் பலி

    • ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது.
    • ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளை அழைத்து வர தனியாக பள்ளியில் பஸ்கள் இருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள அடையக்கருங்குளம், அகஸ்தியர்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் தினமும் வந்து செல்கின்றனர்.

    அந்த வகையில் இன்று காலை வழக்கம்போல் வி.கே.புரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சுமார் 11 குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    ஆட்டோவை அடையக்கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். டிரைவரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரை நாதன் என்பவரது மகன் பிரதீஷ்(வயது 10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தார்.

    அகஸ்தியர்பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சுந்தர் 'பிரேக்' பிடித்துள்ளார்.

    இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரின் அருகே அமர்ந்திருந்த பிரதீஷ் ஆட்டோவின் அடியில் சிக்கி கொண்டான்.

    இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஆட்டோவின் கண்ணாடிகள் நொறுங்கியது.

    தகவல் அறிந்து வி.கே. புரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவன் பிரதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அம்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×