என் மலர்
திருநெல்வேலி
- இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
- சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கீழச்செழியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (70). விவசாயி. இவரது மனைவி விஜயா (60). இவர்களுக்கு இசக்கியம்மாள் (28), சுடலை மணி (20) உள்ளிட்ட 9 மகன், மகள் உள்ளனர்.
இசக்கியம்மாள் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் அவர்களை விட்டு சென்று விட்டார்.
இதனால் இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கியம்மாள் வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளார்.
அவரது குழந்தைகள் பக்கத்தில் உள்ள தாத்தா கணபதி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
அப்போது சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதே போல் மற்ற சுவர்களும் விரிசல் ஏற்பட்டு மேற்கூரையும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கியாஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு அதனால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
- 16 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
நெல்லை:
ஆயுதபூஜை வருகிற 11-ந்தேதி(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு பயணிகள் செல்வதற்கும், அங்கிருந்து மீண்டும் விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கும் ஏதுவாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்று ஆயுதபூஜை சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் தென்னக ரெயில்வே சார்பில் வெளியாகும் என்று பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதன்படி கன்னியாகுமரி-சென்னை தாம்பரம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரெயில் இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த ரெயில் விழுப்புரம், விருத்தாச்சலம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக குமரிக்கு இயக்கப்படுகிறது.
வருகிற 10 மற்றும் 12-ந்தேதிகளில் இரவு 9.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 11 மற்றும் 13-ந்தேதிகளில் மாலை 4.30 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறது. மொத்தம் 16 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோலார்பேட்டை, சேலம்,கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை வழியாக 17 பெட்டிகளுடன் ஒரு முறை ரெயில் இயக்கப்பட உள்ளது.
அந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து 9-ந்தேதி மாலை 7 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 10-ந்தேதி இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படு கிறது.
இதேபோல் அருப்புக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரெயிலானது சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில் சென்னையில் இருந்து 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 9-ந்தேதி மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படுகிறது.
- திடீரென கனமழை பெய்தது.
- ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.
தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை யிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுவதும் பயங்கர இடி-மின்னலும் காணப்பட்டது. அம்பையில் 40.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும், நாங்கு நேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 23.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 26 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 21 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 18 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி, டக்கம்மாள் புரம், மேலப்பாளையம் என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் சென்ற வாகனங்கள் கடும் மழையால் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
பாளை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இரவில் தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இல்லை. அதன்பின்னரும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. மாநகரில் பல்வேறு இடங்களிலும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பாளை பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 84 மில்லிமீட்டரும், நெல்லையில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
தென்காசி, ஆய்க்குடியில் தலா 42 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது .மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 48.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.
கருப்பாநதி அணை பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வரும் 55 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 43 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 46 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
காயல்பட்டினம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 93 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, மணியாச்சி பகுதிகளில் 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையும் கொட்டியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
விளாத்திகுளம், கீழஅரசடி, வேடநத்தம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு சாரல் மழையாக மாறி பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.
- தண்டவாளத்தின் நடுவில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.
- ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை 6.25 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
பாம்புச்சந்தை ரெயில் நிலையத்திற்கும், சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கும் இடையே சங்கனாப்பேரி பகுதியில் மாலை 6.50 மணிக்கு ரெயில் வந்தபோது, தண்டவாளத்தின் நடுவில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.
உடனடியாக சாமர்த்தியமாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த கல்லை அகற்றிவிட்டு சுமார் 20 நிமிடம் தாமதமாக ரெயில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நெல்லை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்தனர்.
தொடர்ந்து தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா, என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பாறாங்கல்லை வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து இன்று 2-வது நாளாக ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த நாளன்று அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் வாகனங்கள் வந்துள்ளதா? அங்கு திட்டமிட்டு ஏதேனும் கும்பல் வந்ததா? அல்லது குடிபோதையில் யாரேனும் இந்த செயலை செய்தார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- விட்டு விட்டு மழை பெய்வதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்த வண்ணம் உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த புரட்டாசி மாத காலக் கட்டங்களில் வெயிலின் தாக்கம் இந்த அளவுக்கு இருக்காது.
இந்நிலையில் நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. நெல்லையை பொறுத்தவரை மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நேற்று பிற்பகலில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது.
அதிகபட்சமாக நாலுமுக்கு மற்றும் ஊத்து எஸ்டேட் பகுதிகளில் தலா 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. காக்காச்சியில் 4 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மணித்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
அணைகளை பொறுத்தவரை கடுமையான வெயில் காரணமாகவும், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணைகளின் நீர் இருப்பு குறைந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தினந்தோறும் 1 அடி என்ற வீதத்தில் குறைந்து வருகிறது.
கடந்த 20-ந்தேதி 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 106.30 அடியாக இருந்தது. ஆனால் இன்று அதன் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த 20-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 113.91 அடியாக இருந்த நிலையில் இன்று 106.59 அடியாக குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் அந்த அணையில் 7 அடி நீர் இருப்பு குறைந்துள்ளது. அதே நேரம் தண்ணீர் தேக்கி மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66 அடியிலேயே நீடிக்கிறது.
எனினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து அணைகளிலும் தண்ணீர் இருப்பு அதிகமாகவே இருக்கிறது. பாபநாசத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் 71 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 101 அடி உள்ளது. சேர்வலாறு அணையில் கடந்த ஆண்டு 83 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. தற்போது அங்கு 106 அடி நீர் இருக்கிறது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இருக்காது.
ஆனால் விட்டு விட்டு மழை பெய்வதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்த வண்ணம் உள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காலாண்டு விடுமுறை விடப்படுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நெல்லை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
- எல். முருகன் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு கண்டனம்.
திருநெல்வேலியை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் இளைஞரை வழிமறித்த கும்பல், அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சம்பந்தப்பட்ட இளைஞர் தவறான தகவலை பரப்பி வருவதாக நெல்லை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெருவில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ததாகவும், வீடியோவில் இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் நடைபெறவே இல்லை என்று காவல்துறை அளித்த விளக்கம் இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
- குமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லும்போதுதான் இந்த கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே கடந்த மாதம் 6-ந் தேதி மூன்றடைப்பு போலீசார் வாகன சோதனையில் ஒரு காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரித்த போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை அந்த கும்பல் விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. இதில் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பலரும் ஏமாந்துள்ளது தெரியவந்தது. இதனிடையே இந்த கள்ளநோட்டு கடத்தலில் மூளையாக செயல்பட்ட விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்து வந்ததும், தற்போது கள்ள நோட்டு சிக்கிய சம்பவத்திற்கும் அவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ராஜேந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகளான விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நேற்று போலீசார் மடக்கி கண்டுபிடித்தனர். அவர்களை நேற்று இரவு வரையிலும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.
அதில் பிடிபட்ட 2 பேரும் சிவகாசியில் உள்ள ஒரு குடோனில் கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடித்து கொடுப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 2 பேரையும் அழைத்துக்கொண்டு போலீசார் சிவகாசிக்கு விரைந்துள்ளனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய கலர் பேப்பர்கள், அச்சடிப்பு எந்திரங்கள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து வேறு எங்கும் குடோன்கள் வைத்துள்ளனரா? இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் தொடர்புடைய கும்பல் முழுக்க முழுக்க விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தான். இவர்களுடன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
குமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லும்போதுதான் இந்த கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது. எனவே அங்கு வேண்டுமானால் இந்த கும்பலின் தரகர்கள் செயல்பட வாய்ப்பு இருக்கிறது என்றனர்.
- நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
- ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கொட்டாரம், அனவன் குடியிருப்பு, அகஸ்தியர் பட்டி, செட்டிமேடு, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தென்காசி மாவட்டம் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, சேர்வை காரன்பட்டி, பாப்பான் குளம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, கல்யாணிபுரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
சுமார் 5 வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்தி ரங்கள் உருண்டது. வீடுகளில் இருந்த ஜன்னல், கதவுகள் குலுங்கியது. ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
சில இடங்களில் பூமிக்குள் மோட்டார் ஓடுவது போல் ஒரு அதிர்வு தென்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து அவசரம், அவசரமாக வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு ஓடி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு 29-ந்தேதி செங்கோட்டை, புளியரை, வடகரை, அச்சன்புதூர், தென்காசி, சுரண்டை, வி.கே.புரம் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டது என்றனர்.
தற்போது 2 மாவட்டங்க ளிலும் பெரும்பாலான கிராமங்களிலும் மக்கள் லேசான அதிர்வை உணர்ந்துள்ள நிலையில், அதிகாரிகள் அப்படி எதுவும் தேசிய நில நடுக்க மையத்தில் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் ஏற்பட வில்லை. ரிக்டர் அளவு கோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடக்கும். அவை ரிக்டர் அளவுகோலில் பதிவாகாது.
குறிப்பிட்ட ஆழத்தில் குறிப்பிட்ட வினாடிக்கு நில அதிர்வு நீடித்தால் மட்டுமே ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும். எனினும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினர்.
அதேநேரத்தில் 2 மாவட்டங்களிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேராளவுக்கு எடுத்துச்செல்லப்படுவது தான் இந்த அதிர்வுக்க காரணம் என்று இயற்கை பாதுகாப்பு வள சங்கத்தி னரும், சமூக ஆர்வலர்களும் புகார் கூறுகின்றனர்.
நேற்றைய தினம் இயற்கை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கணக்கில்லாத அளவுக்கு ஆழமாக குவாரிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
ஆலங்குளம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போர் எந்திரம் உபயோகித்து துளை இட்டு பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் பாறைகளை எடுத்துவிட்டு, மீண்டும் ஆழம் தெரியாமல் இருக்க மண் நிரப்பி விடுகின்றனர்.
எனவே குவாரிகளை எல்லாம் அரசு உடனடியாக ஆய்வு செய்து அதி திறன் கொண்ட வெடிபொருட்களை உபயோகப்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
- சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
- பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி பகுதியில் எப்போதும் தண்ணீர் விழும். இதில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் இங்கு சூழல் சுற்றுலா வரும் பொதுமக்கள் வசதிக்காக அருவிப்பகுதியில் பெண்கள் உடைமாற்றும் அறை, பொது கழிப்பறைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது.
இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அருவிப்பகுதி யில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நேற்றுடன் முடி வடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று முதல் சூழல் சுற்றுலாவிற்காக பொதுமக்கள் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வழக்கமான நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்ககம் இளையராஜா அறிவித்தார்.
அதன்படி மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் திரண்ட வண்ணம் இருந்தனர்.
இன்று விடுமுறை நாளாகவும் அமைந்ததால் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
- பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது.
- ராஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு போலீசார் கடந்த மாதம் 6-ந்தேதி நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரித்த போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர்கள் யார்? எப்படி பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்து வந்ததும், தற்போது கள்ள நோட்டு சிக்கிய சம்பவத்திற்கும் அவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர்.
இந்த நிலையில் அவர் விருதுநகரில் பதுங்கி இருப்பதை அறிந்த அடிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு நேற்று அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- நில அதிர்வு பீதியால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
- தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்கள் மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளன.
இதில் அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, அண்ணா நகர், வைராவி குளம், மணிமுத்தாறு, ஆலடியூர், ஏர்மாள்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று நண்பகல் 11.55 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் பீதி அடைந்தனர்.
ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து தெருக்களில் கூட்டமாக நின்றனர். அப்போது அவர்கள் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அதனை தாங்கள் உணர்ந்ததாகவும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். மேலும் வி.கே.புரம் அருகே உள்ள கீழ ஆம்பூர் கிராமத்தில் சில வீடுகளில் மேலே உள்ள சிலாப்புகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் கீழே விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.
இதே போல் அம்பையை அடுத்த வி.கே.புரத்தில் பட்டாசு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். மன்னார்கோவில் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து முக்கூடல் மற்றும் சுத்தமல்லி வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தகவல்கள் பரவலாக வெளியாகி வருகிறது. சுத்தமல்லியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டுக்குள் ஓடிச் சென்று தங்களது பெற்றோரிடம் பயத்துடன் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார் பட்டி, ஆழ்வார் குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட இடங்களிலும் நண்பகலில் திடீர் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். அங்கு வீடுகள் பயங்கர சத்தத்துடன் குலுங்கியதாக கூறப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெரும்பாலான கிராம பகுதிகளில் திடீரென உணரப்பட்ட இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து ஏராளமான குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இது போன்ற நில அதிர்வுகள் ஏற்படுவதாக தங்களது பல்வேறு கருத்துக்களை கூறி விவாதித்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று.
- எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10 கோடி உறுப்பினர்களுடன் உலகத்திலேயே அதிகமான தொண்டர்களுடன் இருக்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. கடந்த 2-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.
இந்தியா முழுவதும் இதுவரை 4.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 11 கோடி பேரை இணைக்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மட்டும் 1 கோடி பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் மோடி ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் சுட்டுக்கொலை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மோடி ஆட்சிக்கு பின்னர் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எல்லை தாண்டி மீனவர்கள் செல்லாமல் இருக்கவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மீனவர்களுக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களிடம் 10 சதவீதம் பணம் இருந்தாலே 60 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் வங்கி கடனும் ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் 1 லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாதி, மதம் பற்றி தி.மு.க.வினர் பேசக்கூடாது. தமிழகத்தில் தலித்துகளுக்கு ஒரு சுடுகாடு, மற்றவர்களுக்கு ஒரு சுடுகாடு என இரட்டை சுடுகாடு நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. பட்டியலின மாணவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தமிழக முதலமைச்சரும், கனிமொழி எம்.பி.யும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாதி, மதம் குறித்து பேச வேண்டும். சாதி, மதம் குறித்து தி.மு.க. பேசுவது நியாயமற்றது.
கோவில்களில் அரசுக்கு என்ன வேலை. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
கோவில்களில் உள்ள பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் தருணம் இது தான் என நாங்களும் எண்ணுகிறோம்.
4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று. மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். 4 மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 18 சதவீதம் வாக்குகள் பெற்றோம். வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






