என் மலர்
திருநெல்வேலி
- தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன.
- மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து அமரன் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானாவில் உள்ள அலங்கார் தியேட்டருக்கு நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தியேட்டருக்கு வெளியில் நின்றபடியே தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அடுத்தடுத்து வீசப்பட்ட 3 பெட்ரோல் குண்டுகளும் தியேட்டர் வளாகத்தில் விழுந்து 'டமார்' என்கிற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் தியேட்டர் வளாகத்தில் தீப்பிளம்பு எழுந்தது. பெட்ரோல் குண்டுகள் விழுந்த இடம் தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து தியேட்டரில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று பார்த்தனர். வளாகத்தில் தீ பற்றிய இடத்தை அவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் தியேட்டரில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீசார் தியேட்டருக்கு விரைந்து சென்றனர். நெல்லை போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர் சரவணன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோரும் விரைந்து சென்று தியேட்டர் ஊழியர்களிடம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.
தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன. அவைகளை போலீசார் தடயங்களாக சேகரித்தனர்.
பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்கள் யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து ஆய்வு செய்தனர். தியேட்டருக்கு வெளியில் இருந்த ஒரு சி.சி.டி.வி. கேமராவில் 2 பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்து அதில் தீ வைத்து கொளுத்தி தியேட்டர் மீது வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார் அவர்கள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் பீர் பாட்டில்களை பெட்ரோல் குண்டுகளாக மாற்றி வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. 2 குண்டுகள் தியேட்டர் வளாகத்திற்குள் வீசப்பட்ட நிலையில் 3-வது குண்டு தவறி கீழே விழுந்து தீ பிடித்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
மர்ம நபர்கள் இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து இருவரின் பின்னணி பற்றியும் முழுமையாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தியேட்டரில் அமரன் படம் வெளியிடப்பட்ட போதே பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடந்த வாரம் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதையடுத்து இயல்பு நிலை திரும்பி இருந்தது. அதை பயன்படுத்தி மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்று உள்ளனர்.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு மருத்துவர்கள் மக்களிடத்தில் பேரன்பு கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
- மாநில அரசு போதைப் பொருளை தடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது நிர்வாகிகள் சிலருக்கிடையே திடீரென வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்ட நிலையில் நிர்வாகிகள் சிலர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது நெல்லை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சீமான் பதிலளிக்கும் போது, நேற்று நெல்லையில் நடந்தது. சம்பவம் அல்ல, நாங்கள் 2026-ல் செய்யப்போவது தான் சம்பவம் என்றார். தொடர்ந்து சீமான் கூறியதாவது:-
அரசு மருத்துவர்கள் மக்களிடத்தில் பேரன்பு கொண்டு நடந்து கொள்ள வேண்டும். நாம் அவர்கள் மீது பெருமதிப்பு வைத்துள்ளோம். மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அரசு மருத்துவமனைகளில் துணை காவல் நிலையம் போல் அமைத்து காவலர்களை பணியில் வைக்க வேண்டும்.
தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் எல்லா போதைப் பொருளும் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கிடைக்கிறது. மாநில அரசு போதைப் பொருளை தடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதில் மனது முழுவதும் கோபம் இருக்கிறது. ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். தமிழக மீனவர்களை தொட்டுவிட்டால் என்னை கேளுங்கள் என்றார்.
தொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், பேசுவதை எல்லாம் குற்றம் என்று கைது செய்யக்கூடாது. வருத்தம் தெரிவித்து விட்டால் விட்டுவிடலாம். அதை பெரிய குற்றமாக நான் கருதவில்லை. இது அரசியல் பழிவாங்கலாக நடக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்துடன் நேற்று அரசு விழாவில் கலந்து கொண்டது குறித்து கேட்கிறீர்கள் இது அவர்கள் ஆட்சி. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள். அரசு விழாவில் அவர்கள் அடையாளத்துடன் வருவதை ஒன்றும் செய்ய முடியாது. அதை நாம் கண்டிக்கிறோம். ஒன்றும் செய்ய முடியாது. அடுத்த முறையும் அதேயே தான் அவர்கள் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 25 நாட்களாக குப்பை கூளங்களுடன் அரசு பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டு வந்தது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்தும் பயணத்தை மேற்கொள்கின்றனர். இப்படி லட்சக்கணக்கானோர் பயணிக்கும் பேருந்துகளை சிலர் சுத்தம் செய்து இயக்குவர். சிலர் அப்படியே இயக்குவர்.
இந்த நிலையில், அரசு பேருந்தில் சேர்ந்த குப்பைகளை பெண் பயணி ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 25 நாட்களாக குப்பை கூளங்களுடன் அரசு பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டு வந்தது. இந்த குப்பைகளை காண பொறுக்காமல் தனது வீடு போல நினைத்து பயணி மாஞ்சோலை தமிழரசி சுத்தம் செய்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- நாலுமுக்கு பகுதியில் இன்று காலையில் பனிமூட்டத்துடன் ரம்மியமான சூழ்நிலை நிலவியது.
- அணைகளை பொறுத்த வரை பாபநசாம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இதன் காரணமாக விவசாயிகளும் நெல் நடவு பணியை தொடங்குவதில் தாமதம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பரவலாக மழை பெய்தது.
நெல்லையில் சில நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று பிற்பகலில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நாலுமுக்கு பகுதியில் இன்று காலையில் பனிமூட்டத்துடன் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 8.2 சென்டிமீட்டரும், ஊத்து பகுதியில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 7.2 சென்டி மீட்டரும், மாஞ்சோலையில் 6.7 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மணிமுத்தாறில் 28 மில்லிமீடடரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 200 கனஅடியாக அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 405 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக வினாடிக்கு 1,204 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கொடுமுடியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை கொட்டியது. 52.50 அடி கொண்ட அந்த அணை நீர்மட்டம் 31.25 அடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 96.70 அடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 84.65 அடி நீர் இருப்பு உள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு சேர்வலாறு அணை நீர்மட்டம் 110 அடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு இன்று 86.45 அடியாக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் பணகுடி, களக்காடு, ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையொட்டி மின்தடையும் ஏற்பட்டது. குறிப்பாக ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பிசான சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் அடித்தது. அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை ஐகிரவுண்டு, மேலப்பாளையம், தியாகராஜ நகர், மகாராஜ நகர் பகுதியில் மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்றது. நெல்லை வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு பகுதியில் சாரல் மழை பெய்தது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக நெல்லை மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது. அங்கு 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. மாவட்டத்தில் மழைபொழிவு இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை முதலே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் காலை 7.30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாநகரில் முத்தையாபுரம், பிரையண்ட் நகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அங்கும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், காலை முதல் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஒரு கைதிக்கு ஒரு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- 2 கைதிகளும் மத்திய சிறையின் உள்ளே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை:
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் தண்டனை கைதிகளுக்கும், விசாரணை கைதிகளுக்கும் சிறைத்துறை சார்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சில கைதிகளின் பழக்க வழக்கத்தை பொறுத்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் பீடி கட்டுகள் வழங்கப்படுவது வழக்கம்.
கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்க்க வரும்போது அவர்களுக்கு தின்பண்டங்கள், பீடி உள்ளிட்டவை கொண்டு வந்து கொடுத்து வந்த நிலையில், அதனால் சில விபரீதங்கள் ஏற்பட்டதன் காரணமாக மத்திய சிறைகளில் சிறைத்துறை சார்பில் சிறிய அங்காடிகள் ஏற்படுத்தப்பட்டு பீடி உள்ளிட்டவை கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பாளை மத்தியச்சிறையில் சுமார் 1,100 கைதிகள் விசாரணைக்காகவும், தண்டனை பெற்றும் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறை கைதிகளில் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காக பீடி வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் 10 எண்ணம் கொண்ட பீடி கட்டு ஒரு கைதிக்கு ஒரு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 கட்டுகள் மட்டும் ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் என்று சிறை வார்டன்கள் அங்கிருக்கும் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென்று பீடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் வாரத்திற்கு 2 பீடி கட்டுகள் தான் கொடுப்பீர்களா என்று கேட்டு மனம் உடைந்து போன 2 விசாரணை கைதிகள் நேற்று பாளை மத்திய சிறையில் தங்களது அறையில் இரும்பு துண்டு மூலம் கைகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதுகுறித்து அறிந்த சிறை வார்டன் உடனடியாக அந்த 2 கைதிகளையும் மத்திய சிறையின் உள்ளே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கையை அறுத்துக்கொண்ட கைதிகள் பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்தையா, கோவில்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பதும், இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி, குமரியில் கடந்த 2022-ம் ஆண்டு வெவ்வேறு வழக்குகளில் கைதாகி கடந்த ஜூலை மாதம் முதல் பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
- குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து யாரும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 9-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் இந்த பள்ளியில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து அதே பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதற்காக விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
அதே நேரம் பள்ளியில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதற்கு மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் தட்டிக் கேட்டால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து யாரும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே பள்ளியில் சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்ட தகவல் கசிந்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் புதிய திரைப்படங்கள் இரண்டும் திரையிடுவதற்கு பள்ளியில் உரிமம் பெற்று உள்ளார்களா? என்று அவர்கள் கேள்வி கேட்டதோடு, பள்ளிகளில் சினிமா திரைப்படங்களை திரையிட்டு அதன் மூலம் வசூல் வேட்டையில் பள்ளி நிர்வாகம் இறங்கியுள்ளதாக அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
இதையடுத்து உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில், கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், மாணவர்களுக்கு மனதளவிலான அழுத்தத்தை குறைப்பதற்காக கடந்த சனிக்கிழமை திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
அந்த மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திருப்பி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.
மேலும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
- நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
- சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறானது நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.
சமீப காலமாக தாமிரபணி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் வி.கே.புரம் நகராட்சியில் தொடங்கி நெல்லை மாநகர பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வரையிலும் சுமார் 60 இடங்களில் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால், குடிக்கும் வகையில் இருந்த அந்த தண்ணீர் மாசுபட்டுவிட்டது.
இதனால் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு முத்தாலங் குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் மாதம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், படித் துறைகள், கல்மண்டபங் களை சீரமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி அமர்வு இன்று தாமிரபரணி நதியை நேரில் பார்வையிட வருவதாகவும், அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மதுரையில் இருந்து நெல்லை வந்தனர்.
நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட நீதிபதிகள் சந்திப்பு சிந்துபூந்துறை நதிக்கரை, உடையார்பட்டி நதிக்கரை, ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.
பின்னர் டவுன் குறுக்குத்துறை பகுதியில் ஆய்வு செய்த நீதிபதிகள், கல்லணை பள்ளி அருகிலும், முருகன்குறிச்சி பாளையங் கால்வாய் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தலைமையில் சுற்றுலா மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணியில் ஆய்வு செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும், நிதி ஒதுக்கீடு, கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்கான பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளியான மகேஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
- மகேஷ் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை செந்தில் நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மகேஷ் இன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு மகேஷ் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரோகிணி செல்வி தலைமையிலான போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடிச்சென்று மகேசிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர்.
பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது மனைவி அனிதா போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினோம். தற்போது அந்த வீட்டின் உரிமையாளர் எந்த காரணமும் கூறாமல் வீட்டை காலி செய்யுமாறு எங்களை மிரட்டுகிறார்.
நாங்கள் அவரிடம் அவகாசம் கேட்டோம். ஆனால் அவர் அவகாசம் தர மறுப்பதோடு வீட்டின் மின் இணைப்பை தடை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தொந்தரவு கொடுக்கிறார். எனவே எங்களுக்கு உரிய அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார் இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசில் முறைப்படி புகார் மனு அளியுங்கள் என கூறி தங்களது ரோந்து வாகனத்திலேயே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.* * *மனைவி, குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை மீட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
- தகவலை அறிந்த அன்பழகன், உடனடியாக கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக தொழிலதிபரை காரில் கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் உதயகுமார்(வயது 32). தொழிலதிபர். இவர் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.
இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலரிடம் நெல் கொள்முதல் செய்துள்ளார். சுமார் ரூ.98 லட்சத்திற்கு நெல் கொள்முதல் செய்த அவர், வாங்கிய நெல் மூட்டைகளை அரிசியாக்கி விற்றுள்ளார். அதில் ரூ.70 லட்சம் வரையிலான நெல்லுக்கான தொகையை திருப்பி ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
மீதி தொகையை நெல் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்க தாமதித்து வந்துள்ளார். நெல் மூட்டைகள் அரிசியாக மாற்றி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை விற்கப்பட்ட உடனே தொகைகளை ஒப்படைப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் கால தாமதம் ஏற்படவே, நேற்று கடலூரில் இருந்து நெல் கொடுத்தவர்களான அரிகிருஷ்ணன், சூரியகுமார், சுரேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த பிரதீபன் ஆகிய 4 பேரும் வெங்கடாம்பட்டியில் இருக்கும் உதயகுமாரின் ரைஸ்மில்லுக்கு வந்துள்ளனர்.
அங்கு உதயகுமாரிடம் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த கும்பல், உதயகுமாரை அவரது காரில் ஏற்றியது. பின்னர் அங்கிருந்து கடலூர் நோக்கி கடத்தி சென்றது. இந்த தகவலை அறிந்த அன்பழகன், உடனடியாக கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கடத்தல் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடினார்.
உதயகுமாரின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், சிக்னல் பெரம்பலூர் பகுதியை காண்பித்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு விடுதி பகுதியில் உதயகுமாரின் கார் நின்றது. அதில் அவரை அந்த கும்பல் கடத்தி வைத்திருந்தது.
இதையடுத்து உதயகுமாரை மீட்ட போலீசார், அவரை கடத்தியதாக கடலூரை சேர்ந்த அரிகிருஷ்ணன், சூரியகுமார், சுரேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த பிரதீபன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் கடையத்திற்கு அழைத்து வரப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக தொழிலதிபரை காரில் கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (வயது 38). இவர் பி.எம்.சி. மார்க்கெட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
இதற்காக மணலிவிளை எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. இந்த வீட்டில் இருந்து பிணவாடை வீசுவதாக அப்பகுதி மக்கள் திசையன்விளை போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தரையில் அழுகிய நிலையில் மார்ட்டின் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது மனைவி பியூலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பியூலா ஆஸ்பத்திரியில் தங்கி மகளை கவனித்து வருகிறார். இதனால் மார்ட்டின் திசையன்விளையில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா சுமார் 25 கிலோ பறிமுதல்.
- கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள சிதம்பரநகர் விலக்கு பகுதியில் தச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அதில் இருந்த 7 பேரிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா சுமார் 25 கிலோ இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த 7 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்கள், தச்சநல்லூர் கரையிருப்பு கிராமத்தை சேர்ந்த இசக்கிபாண்டி(42), மணிகண்டன்(38), ரகுநாதன்(41), முத்து பட்டன்(28), கணபதிமில் காலனியை சேர்ந்த ரகுநாதன் (41), சுந்தர் கணேஷ்(27), பழைய பேட்டையை சேர்ந்த பண்டாரம்(55), மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்த சுடலை(34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கும்பல் பெங்களூரில் இருந்து குட்காவை இங்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பல் இதற்கு முன்பும் இதே போன்று காரில் குட்கா கடத்தி வந்து நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 வாலிபர்கள் திடீரென அரிவாளால் சரவணன் தோள்பட்டை, கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
- தொடர்ந்து சரவணனை வெட்டிவிட்டு சென்றது என்பது தெரிய வந்தது.
நெல்லை:
சென்னையை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இதற்காக வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவில் ஒரு வாடகை வீட்டில் அவர் குடியிருந்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு தியேட்டரில் இரவு காட்சி முடிவடைந்து அவர் வண்ணார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டுத்தொகை தெருவில் அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் திடீரென அரிவாளால் சரவணன் தோள்பட்டை, கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதில் காயம் அடைந்த சரவணனை அந்தப் பகுதி மக்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் சரவணன் வேலை பார்க்கும் தியேட்டரில் நெல்லை டவுன் பகத்சிங் தெருவை சேர்ந்த கார்த்தி (28) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையை விட்டு நீக்கி உள்ளனர்.
தனது வேலை போனதற்கு சரவணன் தான் காரணம் என்று நினைத்த கார்த்தி, தனது நண்பரான ஜோதி சங்கர் என்பவரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவுக்கு வந்துள்ளார். தொடர்ந்து சரவணனை வெட்டிவிட்டு சென்றது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.






