என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் -2 திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்தார். இந்த படத்தில் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு மலேசியாவில் நடந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அப்போது தகவல்கள் வெளியானது.


    இந்த நிலையில் நடிகை காவ்யா தாப்பர் மலேசியாவில் நடந்த பிச்கைக்காரன் -2 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளார். அப்போது நடந்த திகில் அனுபவத்தை அவர் உணர்ச்சிவசப்பட விவரித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் நடந்தது. அங்குள்ள லங்காவி கடற்கரையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நானும், விஜய் ஆண்டனியும் ஒரு படகில் கடலில் சென்று கொண்டிருந்தோம். அப்போது இன்னொரு படகு எங்கள் படகு மீது திடீரென மோதியது.இதில் படகில் இருந்த நானும், விஜய் ஆண்டனியும் கடலில் விழுந்தோம். நீரில் விழுந்ததும் எனக்கு எதுவும் தெரியவில்லை.


    ஒரு நிமிடம் சுதாரித்த பின்னர் விஜய் ஆண்டனியை பார்த்தேன். அவர் நீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அவருக்கு நீச்சல் தெரியவில்லை. எனவே அவரை காப்பாற்ற அவர் அருகில் நீந்தி சென்றேன். அதற்குள் படக்குழுவினரும் அங்கு வந்து விட்டனர். அவர்கள் உதவியுடன் விஜய் ஆண்டனியை மீட்டு படகில் ஏற்றினோம்.

    பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நீண்ட நேரத்திற்கு பிறகே கண்விழித்தார். அதன்பின்பே எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மூக்கில் எலும்பு முறிவும், நெற்றியில் காயமும் இருந்தது. இதற்காக எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடலில் விழுந்த போது நான் மரணத்தின் எல்லைக்கு சென்று வந்ததை உணர்ந்தேன். இப்போது அதை நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. மனசு படபடக்கிறது. இந்த விபத்தும், இதில் ஏற்பட்ட அனுபவமும் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. எனது முகத்தில் விபத்தால் ஏற்பட்ட வடுக்கள் உள்ளன. அவை எனக்கு இந்த விபத்தின் நினைவை வாழ்நாள் முழுக்க நினைவுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.
    • பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் குறிப்பாக ஆனி மாதம் நடைபெறும் திரு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜூலை மாதம் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்க நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த விழாவிற்கான தொடக்கமாக பந்தல்கால் நடும் விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபி ஷேகமும், அதனைத்தொடர்ந்து அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலாவும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதி முன்செல்ல அப்பர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக வர கோவில் மகா மண்டபத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பந்தல் காலை சுமந்து செல்ல, சுவாமி சன்னதி கோவில் வாசல் மண்டபத்தில் பந்தல் கால் நடப்பட்டது.

    இந்த விழாவை தொடர்ந்து ஊர் காவல் தெய்வமாக விளங்கும் பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் 10 நாட்கள் விநாயகர் திருவிழாவும், அதன் பின்னர் அப்பர் திருவிழா 10 நாட்களும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூலை மாதம் நெல்லையப்பருக்கான ஆனிப் பெருந்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மொத்தம் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் முதல் விழாவான பந்தல்கால் நடும் விழாவில் இன்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • நைட்டிங்கேல் பிறந்தநாளை உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
    • நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி நடைபெற்றது.

    நெல்லை:

    மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஆற்றி வரும் உன்னத சேவையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் உலக செவிலியர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவி லியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த நாளான மே 12-ந் தேதியை உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன்படி ஆண்டு தோறும் இன்றைய தினம் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவமனை சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், கந்தசாமி, துணை முதல்வர் சுரேஷ் துரை, செவிலிய கண்காணிப்பாளர்கள் பானு, வள்ளி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி செவிலியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் பேரணியாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.

    • நடராஜன் குடும்பத்தை பிரிந்து சாலையோரம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • முடப்பாலம் கல்வெட்டாங்குழிக்கு நடராஜன் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    நெல்லை:

    அம்பை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது75). இவர் குடும்பத்தை பிரிந்து சாலையோரம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடை வியாபாரிகள், பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று அம்பை அருகே உள்ள முடப்பாலம் கல்வெட்டாங்குழிக்கு சென்றார்.

    இந்நிலையில் திடீரென தண்ணீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
    • பயனாளர் உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (13-ந்தேதி) நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும்.

    மேற்படி முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண். 9342471314-ல் தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திசையன்விளை, நாங்குநேரி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • கோவநேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட திசையன்விளை, கோட்டைகருங்குளம் மற்றும் நாங்குநேரி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    இதனால் திசையன்விளை துணைமின் நிலையத்திற்குட்பட்ட திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கோட்டைகருங்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், நான்குநேரி துணைமின் நிலையத்திற்குட்பட்ட நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி மற்றும் பக்கத்து கிராமங்களில் மின் வினியோகம் தடைப்படும்.

    மேலும் மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையினை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • சங்கர், சிவபெருமாள் ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் அஸ்வின் (வயது21). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர்களுடன் களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது அவரது நண்பரான கீழத்தெருவை சேர்ந்த சங்கர் (21) தனது நண்பர்களுடன் வந்தார். இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. சங்கர், அவரது நண்பர் சிவபெருமாள் (25) ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர். இதுபோல அஸ்வின், வினிஸ் (23), ரவி (21) ஆகியோர் சேர்ந்து சங்கரின் நண்பரான பொறியியல் கல்லூரி மாணவர் ஸ்ரீராமரை (21) தாக்கினர்.

    இது தொடர்பாக இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சிவபெருமாள், சங்கர், அஸ்வின், வினிஸ், ரவி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரம்ப சுகாதார மையத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் இலவசமாக யோகா தியான பயிற்சி நடைபெறுகிறது.
    • யோகா பயிற்சிகளை ஆசிரியர்கள் அருள்நிதி வெங்கடேஷ், அருள்நிதி ராமலெட்சுமி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

    ஏர்வாடி:

    தினமும் யோகா பயிற்சியின் மூலம் நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் திருக்குறுங்குடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் இலவசமாக யோகா தியான பயிற்சி நடைபெறுகிறது. அரசு சுகாதார மையத்தில் நடக்கும் பயிற்சியில் பொதுமக்களும், புறநோயாளிகம் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வகையான பயிற்சியில் அருட்காப்பு சங்கல்பம், நாடிசுத்தி பிராணாயாமம், சுவாச பயிற்சிகள், கால்வலி நிவாரண பயிற்சிகள், இடுப்பு பயிற்சிகள், ரெண்டொழுக்கப் பண்பாடு, உலகை வாழ்த்துதல் மற்றும் பல்வகையாக பயிற்சியினால் ஆரோக்கியமான உடலையும், நீண்ட ஆயுளையும் பெற முடியும் என பயிற்சி வல்லுனர்கள் தெரிவித்தனர். யோகா பயிற்சியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த கர்ப்பணி பெண்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பவ்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். ஆயூஷ் சித்த மருத்துவ உடல்நல மையத்தின் சார்பில் நடைபெற்று வரும் யோகா பயிற்சிகளை ஆசிரியர்கள் அருள்நிதி வெங்கடேஷ், அருள்நிதி ராமலெட்சுமி ஆகியோர் நடத்தி வருகின்றனர். பயிற்சியின் மூலமாக இறையாற்றலும், புத்துணர்வும் கிடைக்க பெறுவதாக அதில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

    • விழாவிற்கு ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவ மனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் நெல்லை கிளை சார்பில் ஷிபா மருத்துவமனையில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவமனை யின் பங்குதாரர் ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் பிரேம சந்திரன் கலந்து கொண்டு செவிலியர் தின சிறப்பு செய்தி வழங்கினார்.

    இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சுப்பிர மணியன், செயலாளர் டாக்டர் முகம்மது இப்ராஹிம், பொருளாளர் டாக்டர் பிரபுராஜ், மருத்துவமனை தலைமை செவிலியர் ஜெமிமா, ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீதார ண்யா மற்றும் மருத்துவ மனை எலும்பு மூட்டு மருத்துவர் அகமது யூசுப் ஆகியோர் செவிலியர் தின வாழ்த்து செய்தி வழங்கினர்.

    ஷிபா மருத்துவ மனையின் செவிலியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவ மனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இந்த சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து 2 கட்டங்களாக தனது விசாரணையை நடத்தினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்குமூலம் அளித்தவர்கள், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்களிடம் அதிகாரி அமுதா விசாரித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    அதன்படி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் பாதிக்கப்பட்ட பாளை கே.டி.சி.நகரை சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வி.கே.புரம் அருகே அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு, வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகசேன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே மற்றொரு விசாரணை அதிகாரியாக துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் பாதிக்கப்பட்ட வேதநாராயணன், சூர்யா ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், அவரது உறவினர்கள், சாட்சியங்கள் ஆஜராக சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தபட்ட சரகத்தில் பணியாற்றும் சில போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் ஜீப் டிரைவர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சம்மன் அனுப்பினர். அவர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், முதல் மற்றும் 2-ம் நிலை காவலர்கள் என மொத்தம் 24 போலீசாரை மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    குறிப்பாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேஷ், ஆபிரகாம் ஜோசப், சக்தி நடராஜன், பாலசுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஸ்வரன், ரவி, பத்மநாபன், மகாராஜன் மற்றும் காவலர்கள் கணேசன், சேர்மன் துரை, வசந்த், கலைவாணி, பார்வதி, சுடலை, ஜெயராமன், அபிராமவள்ளி, ஆரோக்கிய ஜேம்ஸ், ஸ்டீபன், சதாம் உசேன், போக பூமன், விக்னேஷ், மணிகண்டன், சந்தாணகுமார், ராஜ்குமார் ஆகிய 24 போலீசார் நெல்லை மாவட்டத்தில் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்ச வம் கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும் நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்ச வம் கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோபாலா... நாராயணா.. என கோஷங்கள் இட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை யொட்டி காலையில் மலர் அலங்காரத்தில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். வரதராஜ பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருத்தேர் 32 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் 52 தூண்களும், 6 சக்கரங்களுடன் 5 அடுக்கு அதிர்ஷ்டானமும், 340 சிற்பங்களும், 4 குதிரைகளும் பொலிவுடன் உள்ளன.

    • அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு புரிகிறது. ஆனால் கவர்னருக்கு புரியவில்லை.

    திசையன்விளை,மே.11-

    திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்திற்கு ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன்

    ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாபுரம் யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிற்படு த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு இணைந்து கலைஞருக்கு பிறகு இவர்தான் தகுதியான தலைவர் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு புரிகிறது. ஆனால் கவர்னருக்கு புரியவில்லை.

    திராவிட மாடல் ஆட்சி

    எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. கூட்டணி தர்ம த்தை மதிப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால் தான் தொழிலாளர் சட்டத்தை வாபஸ் பெற்றார். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு காலாவதியாகி விட்டது. இனி தி.மு.க. தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அண்ணா மலைக்கும், கவர்னர் ரவிக்கும் அரசியல் தெரியாது. அவர்கள் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகமணி, மார்த்தாண்டம், மாவட்ட பிரதிநிதி சமுகை முரளி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் ராஜா, உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி. அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் எம்.என். கண்ணன் நன்றி கூறினார்.

    ×