search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பற்களை பிடுங்கிய விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 போலீசார் அதிரடி இடமாற்றம்
    X

    பற்களை பிடுங்கிய விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 போலீசார் அதிரடி இடமாற்றம்

    • சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இந்த சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து 2 கட்டங்களாக தனது விசாரணையை நடத்தினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்குமூலம் அளித்தவர்கள், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்களிடம் அதிகாரி அமுதா விசாரித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    அதன்படி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் பாதிக்கப்பட்ட பாளை கே.டி.சி.நகரை சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வி.கே.புரம் அருகே அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு, வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகசேன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே மற்றொரு விசாரணை அதிகாரியாக துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் பாதிக்கப்பட்ட வேதநாராயணன், சூர்யா ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், அவரது உறவினர்கள், சாட்சியங்கள் ஆஜராக சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தபட்ட சரகத்தில் பணியாற்றும் சில போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் ஜீப் டிரைவர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சம்மன் அனுப்பினர். அவர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், முதல் மற்றும் 2-ம் நிலை காவலர்கள் என மொத்தம் 24 போலீசாரை மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    குறிப்பாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேஷ், ஆபிரகாம் ஜோசப், சக்தி நடராஜன், பாலசுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஸ்வரன், ரவி, பத்மநாபன், மகாராஜன் மற்றும் காவலர்கள் கணேசன், சேர்மன் துரை, வசந்த், கலைவாணி, பார்வதி, சுடலை, ஜெயராமன், அபிராமவள்ளி, ஆரோக்கிய ஜேம்ஸ், ஸ்டீபன், சதாம் உசேன், போக பூமன், விக்னேஷ், மணிகண்டன், சந்தாணகுமார், ராஜ்குமார் ஆகிய 24 போலீசார் நெல்லை மாவட்டத்தில் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×