என் மலர்
திருச்சிராப்பள்ளி
- விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
- சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே இயக்கி வந்தது. இதனால் விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் வரும் மார்ச் 23-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது.
இந்த விமானம் ஆனது மாலை 6:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7:45 மணிக்கு வந்தடையும். மீண்டும் இந்த விமானம் இரவு 8 15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் திருச்சி சென்னைக்கு 5 சேவைகளை வழங்கி வரும் நிலையில் ஆறாவது சேவையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை தொடங்குவது அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது
- திருச்சியில் நடந்த வைரவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
- அப்போது அவர் பேசுகையில், மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று என்றார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பெருந்திரளணி `ஜாம்புரி' என்ற பெயரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்து சுமார் 20,000 சாரண-சாரணியர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை கடந்த 28-ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் அங்கேயே தங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில், திருச்சியில் வைரவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு சாரணர் இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம், நவீன பயிற்சி வசதிகளோடு ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்.
மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும். மானிட தத்துவத்தால் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளம் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு பெரும் புகழை ஈட்டித் தருகிறது பள்ளிக் கல்வித்துறை. இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர் அமைச்சர் அன்பில் மகேஷ். இவர் தலைமையில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான நிதி ஆயோக் அறிக்கையில் 17 இலக்குகளிலும் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது.
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கருணாநிதி. சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்" என தெரிவித்தார்.
- அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
- காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். தமிழ்நாட்டு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் இக்கோயில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாகள் கொண்டாடபடும். அதில் தைப்பூச திருவிழா, பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம், ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இந்த தைப்பூச திருவிழாவை யொட்டி இன்று காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
பின்னர் அம்மனின் திருஉருவப்படம் வரையப்பட்ட துணியாலான கொடியை தங்க கொடிம ரத்தில் கோவிலின் குருக்கள் காலை 7.30 மணிக்கு ஏற்றினர். அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோயிலின் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ், உறுப்பினர்கள் சுகந்தி, லட்சுமணன் பிச்சை மணி மற்றும் கிராம முக்கிய ஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- விழாவை கடந்த 28-ந்தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பெருந்திரளணி `ஜாம்புரி' என்ற பெயரில் மாநாடு போல் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் சாரண-சாரணியர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த விழாவை கடந்த 28-ந்தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஒவ்வொரு நாளும் இதில் பங்கேற்றுள்ள மாணவ- மாணவியர்கள் தங்களது மாநிலத்தின் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் இன்று மதியம் 2 மணி அளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து சாரண-சாரணியர் இயக்க வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார். விழா முடிந்த பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி விமான நிலையம் மற்றும் அவர் பயணம் செய்ய உள்ள வழித்தடங்களில் `டிரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து அவர் தங்க உள்ள ஓட்டல் வரையும் சாலைகள் சீரமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
- இன்று மத்தியதர வகுப்பினா் அவசரத் தேவைகளுக்கு விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.
திருச்சி:
ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது பெரும் பணக்காரா்களுக்கே சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இன்று மத்தியதர வகுப்பினா் அவசரத் தேவைகளுக்கு விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
தொலைவில் உள்ள இடத்திற்கு குறைந்த நேரத்தில் அடைந்துவிட முடியும் என்பதாலும், ரெயில் பயணம், பஸ் பயணம் போன்றவை ஏற்படுத்தும் அலுப்பும் களைப்பும் விமானப் பயணத்தை தூண்டுகிறது, உள்நாட்டு நகரங்களுக்கிடையேயான விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 760.93 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை 4.28சதவீதம் அதிகரித்துள்ளது என்று விமான ஆணையரகம் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மாதவாரியாக கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 5.76 சதவீதம் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.
விமான பயணத்தில் பயணிகள் வருகை பதிவில் மற்ற விமான நிலையங்களை காட்டிலும் சென்னை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் சர்வதேச விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 11-ந் தேதி அதாவது ஒரு நாள் மட்டும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி வந்த விமான பயணி ஒருவர் கூறும்போது,
திருச்சியில் உள்ள எனது மகனை பார்ப்பதற்காக கடந்த 26-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 8.40 மணி விமானத்தில் திருச்சி சென்றேன்.
பயணத்தின்போது விமானத்திற்குள் கடைப்பிடிக்க வேண்டியது குறித்தும், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டியது குறித்தும் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் குறித்தும் அறிவிப்பு செய்தார்கள்.
ஆனால் அந்த அறிவிப்புகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது. மேலும் இருக்கையில் ஒட்டியுள்ள அறிவிப்பு ஸ்டிக்கரிலும் தமிழ் இல்லை.
எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏனென்றால் தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. அருகில் அமர்ந்திருந்தவரிடம் தயக்கத்துடன் கேட்டு தெரிந்து கொண்டேன். விமானத்தில் மட்டுமல்ல, விமான நிலையத்திலும் இதே நிலைமைதான் உள்ளது.
இந்தி, ஆங்கிலத்தில் செய்த அறிவிப்பை குறை சொல்லவில்லை. தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு இருந்தால் என்னை போன்று பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அறிவிப்பை கேட்டுக் கொண்டே தினந்தோறும் விமானத்தில் பயணம் செய்யும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என் போன்றவர்களின் மனக்குமுறலை மனதில் வைத்து, தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக அமையும் என்றார்.
- உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
- சாரணர்கள் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண - சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
சாரணியர் இயக்க வைரவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தமிழ்நாடு பாரத சாரண - சாரணியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்தி காட்டும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
- சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளவாய்ப்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு சிறப்பு 'ஜாம்புரி' என்ற பெயரில் நேற்று தொடங்கி பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் சாரண, சாரணியர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் கலந்து கொள்கிறார்கள்.
சாரணர்களுக்காக சிப்காட் வளாகத்தில் சாரணர்கள் தங்குவதற்கு ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவு தயாரிப்பு கூடங்கள், மருத்துவ உதவி மையங்கள், கருத்தரங்கு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரகணக்கான சாரணர்கள் அங்கு குவிந்து விட்டதால் சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சாரணர்கள் 24-க்கும் மேற்பட்ட சாகசப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகைகள் பாலம், குரங்கு பாலம், பீம் ஏறுதல், டயர் டனல், தீ பள்ளம், துப்பாக்கிச் சுடுதல், அம்பு எறிதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 72 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பயிற்சிகளில் பங்கேற்றுள்ள மாணவ-மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- திருச்சி மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா இன்று தொடங்கியது.
- இந்நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது ஆண்டு வைர விழா மற்றும் பெருந்திரள் பேரணி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட சாரணர் இயக்கத்தினர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிப்காட் வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்தும் சாரணர் இயக்கத்தினர் வருகை தந்துள்ளனர்.
- நான்கு பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
- வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் அன்பு (வயது 32). ரவுடி. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் உள்ளன.
மேலும் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப்பின் கூட்டாளியாவார்.
இவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் அங்குள்ள ஜிம்முக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தெரு சுற்றுலா வாகன பார்க்கிங் பகுதியில் வந்த போது இரு வேறு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று பார்க்கிங் பகுதியில் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் தலை, கழுத்து, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது.
பின்னர் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அன்பு இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அன்புவுக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மனைவி மற்றும் உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
மேலும் கொலை நடந்த பகுதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வெளிமாநில மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் வாகன நிறுத்தமிடமாகும்.
கொலையாளிகள் அன்புவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்வதை பார்த்து வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ மாணவிகளும் நாலா புறமும் சிதறி ஓடினர். சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அன்புவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வீடியோ மற்றும் படங்கள் பதிவிடுவது வழக்கம்.
- இந்த தம்பதியை பின்பற்றுபவர்கள் இவர்களை வாழ்த்தியும், பாராட்டியும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வருபவர் வருண்குமார். இவரது மனைவியான வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். ஐ.பி.எஸ். தம்பதியான இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்ற நிலையில் இருந்து டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இவர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வீடியோ மற்றும் படங்கள் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் நாட்டின் 76-வது குடியரசு தின விழாவையொட்டி நேற்று வந்திதா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை 'ரீல்ஸ்' ஆக பதிவிட்டு உள்ளார்.
அதில் மாவட்ட கண்காணிப்பாளர் பதவியில் இருந்து சரக துணைத்தலைவர் பதவிக்கான அந்தஸ்து உயர்வின்போது தங்களது சீருடையில் ஸ்டார் மற்றும் அசோக சக்கர முத்திரை அடையாளங்களை ஒருவருக்கொருவர் மாற்றி அணிவிக்கும் காட்சிகள் பின்னணி இசையுடன் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைத்தள பதிவுகளில் இந்த தம்பதியை பின்பற்றுபவர்கள் இவர்களை வாழ்த்தியும், பாராட்டியும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதிகார இணையர் (பவர் கப்பிள்), உங்களது சேவை நாட்டிற்கு தேவை என்றெல்லாம் 'கமெண்ட்ஸ்' குவிந்து வருகிறது.
- அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களின் பேரணி.
- விவசாயிகள் டிராக்டரை நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மண்ணச்ச நல்லூர்:
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநில விவசாய சங்க தலைவர் டல்லேவால் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்
அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களின் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட டிராக்டர் பேரணி நடைபெற்றது.
பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசு விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உரிய ஆதார விலையை நிர்ணயித்து சட்டமாக இயற்ற வேண்டும், மின் திருத்த சட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்,
விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணி புறப்பட்டது.
இதில் தேசிய தென்னி ந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டர்களுடன் பங்கேற்றனர்.
சிறிது தூரம் சென்றதும் பேரணிக்கு அனுமதி இல்லை என கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் டிராக்டரை நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விமான நிலையம் வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையம் வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் ரகுபதிக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதயத்தில் அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






