என் மலர்tooltip icon

    தென்காசி

    • மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
    • கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    இந்நிலையில் தென்காசி பகுதியில் இருந்து 40 பேர் கொண்ட குழு உத்தரபிரதேச மாநிலம் மகா கும்பமேளாவுக்கு செல்ல திட்டமிட்டு, காசிக்கு ரெயில் மூலம் யாத்திரை சென்றனர்.

    இந்த குழுவினர் கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.

    கும்பமேளா சென்ற 2 தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உத்தரபிரதேச காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உ.பி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
    • ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 4-வது தெருவில் நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் மருந்து தடவிய தீக்குச்சிகள் அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை தொழிலா ளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

    இதனால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதறியடித்து அங்குள்ள பல்வேறு பாதை வழியாக அங்கிருந்து வெளியேறினர்.

    இது தொடர்பாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவரை இடித்து, அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தின் போது தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அவர் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தினார். அப்போது தீப்பெட்டி தொழிற்சாலை உரிய அனுமதியின்றி செயல்பட்டதும், அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படாமல் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சங்கரன்கோவில் தாசில்தார் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.

    இதனிடையே தகவல் அறிந்து அங்கு ராஜா எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர் மன்ற துணைத்தலைவர் கண்ணன் என்ற ராஜூ ஆகியோர் விரைந்து சென்று அங்கிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி மலைக்கோவில் ரோடு பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 75).

    விவசாயியான இவர் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் நெல் அறுவடை செய்து விற்று கிடைத்த பணம் ரூ.19 லட்சத்தை தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

    நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் முனியாண்டி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்தார்.

    புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.

    அங்கு பீரோ சாவி இல்லாததால் கம்பி போன்ற பொருளைக் கொண்டு பீரோ இடது புறம் நெம்பி திருடியது தெரியவந்துள்ளது. மேலும் பணத்தை மஞ்சள் பையில் வைத்து பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் பக்கத்து வீட்டின் பின்புறம் அந்த மஞ்சள் பை கிடந்ததாக கூறப்படுகிறது.

    கொள்ளை போன வீட்டிற்கு இருபுறமும் சுவர்கள் உயரமாக இருப்பதால் பக்கத்து வீடுகளில் இருந்து வரமுடியாது எனவும், வீட்டின் பின்புறம் உள்ள வீட்டின் வழியாக மர்ம நபர் வந்திருக்கலாம் எனவும், வீட்டில் பணம் இருப்பது தெரிந்த வெளி நபர் அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் நேற்று மதியம் வீடு பூட்டிய நிலையில் இருந்த போது வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்த நிலையில் உடைக்கும் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.
    • மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கடந்த 5-ந்தேதி முத்துக்குமார் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மயக்கம் அடைந்து விட்டார் என்று கூறி 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முத்துக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் அவர் இறப்பிற்கான காரணம் என்ன என்று அறிவதற்காக முத்துக்குமார் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.

    இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் அவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. இதனிடையே நொச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்த மரியா ஆரோக்கிய செல்வி தனது கணவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை என்றும், தான் கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரியவரவே, மரியா ஆரோக்கிய செல்வியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து எனக்கும், எனது குழந்தைகளுக்கும் தொந்தரவு கொடுத்ததோடு, அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இதனால் அவரது கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 5-ந்தேதி இரவில் எனது கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தை நெரித்தேன். அதில் அவர் மயங்கிவிட்டார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையில் எனது கணவர் மயங்கி விட்டார் எனக் கூறி நம்ப வைத்து அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தேன் என வாக்குமூலம் அளித்தார்.

    அதனை தொடர்ந்து மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • ஜான் கில்பர்ட்டை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • மாமியார்-மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி அருகே உள்ள இலத்தூர் இனா விலக்கு பகுதியில் கடந்த 11-ந்தேதி ஒரு இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமலி (வயது 30) என்பதும், அவரை அவரது கணவர் ஜான்கில்பர்ட் (33) குடும்ப பிரச்சனையில் கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜான் கில்பர்ட்டை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஜான் கில்பர்ட்டும், டெய்லரான கமலியும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜான் கில்பர்ட் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் மாமியார்-மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரச்சனையை தவிர்க்கும் விதமாக ஜான் கில்பர்ட் தனது மனைவியுடன் தனியாக வீடு பார்த்து தனி குடித்தனம் சென்றார்.

    அங்கிருந்து தனியார் நிறுவனத்திற்கு கமலி வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கமலியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கமலி கர்ப்பம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலைக்கு செல்வதை நிறுத்தச் சொல்லிவிட்டார். அதையும் மீறி கமலி வேலைக்கு சென்றுள்ளார்.

    இதனால் ஜான் கில்பர்ட் தனிக்குடித்தனத்தை காலி செய்து விட்டு தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் மீண்டும் சொந்த வீட்டிலேயே வசித்து வந்தார். அதன் பின்னர் மாமியாருடன் சேர்ந்து வசிப்பது பிடிக்காததால் தொடர்ந்து மாமியார்-மருமகள் இருவருக்கும் மத்தியில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று மாமியார்-மருமகள் இடையே சமையல் அறையில் வைத்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் மாமியார் வெளியே சென்று விட்டார். உடனே சமையலறைக்குள் சென்று ஜான் கில்பர்ட் தனது மனைவி கமலியுடன் வாக்குவாதம் செய்தார்.

    ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்து மனைவியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் கமலியின் உடலை தன்னுடைய சகோதரர் தங்க திருப்பதி என்பவரின் உதவியுடன் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதிக்கு காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து அவரது உடலை தீவைத்து எரித்து விட்டு 2 பேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஜான் கில்பர்ட்டையும், அவரது சகோதரர் தங்க திருப்பதி யையும் கைது செய்த போலீசார், ஜான் கில்பர்ட் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    • கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி அருகே இலத்தூர் இனாவிலக்கு பகுதியில் மதுநாதபேரி குளம் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    பெண்ணின் காலில் மெட்டி கிடந்தது. இடது கை, காலில் உள்ள 5 விரல் எரியாமல் கிடந்தது. சம்பவ இடத்தில் ஏராளமான மது பாட்டில்களும் கிடந்தன. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. மீனாட்சி சுந்தரம் மேற்பார்வையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் இலத்தூர் முதல் இனாவிலக்கு வரை சாலையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், முந்தைய நாள் இரவு 9.30 மணியளவில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சென்றது தெரியவந்தது.

    அந்த கார் பதிவு எண் மூலம் நடத்திய விசாரணையில், அந்த கார் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவகாசி பாரதி நகரை சேர்ந்த ஜான்கில்பர்ட் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மனைவியை கொன்று எரித்தது தெரியவந்தது.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கமலி (வயது 30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜான்கில்பர்ட் தனது காதலியை கரம்பிடித்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 9-ந்தேதி கணவன்-மனைவி இடையே நடந்த தகராறில் ஜான்கில்பர்ட் தனது மனைவியை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் உடலை அப்புறப்படுத்துவதற்காக தனது சகோதரர் ஒருவரின் உதவியை நாடி உள்ளார். அதன்படி, மனைவியின் உடலை ஒரு காரில் ஏற்றி அங்கிருந்து சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக தென்காசி அருகே சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வந்து இலத்தூர் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத குளத்தின் ஒரு பகுதியில் முட்புதருக்குள் வீசி எரித்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஜான்கில்பர்ட்டை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த சகோதரரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
    • உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    டெல்லி அசோக் பிஹார் பேஸ் ஜெய்லர் லாலாபாக் பகுதியை சேர்ந்தவர் சங்கர் சரோஜ். இவரது மகன் அணிகேட் (வயது 25).

    இவரது நண்பர் டெல்லி சாலிமார்பேக் லோகியா கேம் பகுதியை சேர்ந்த உபேந்திரா (24). இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த புன்னையாபுரம் முந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் வேலை செய்வதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு ரைஸ் மில் அருகே தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர்.

    அவர்கள் இரவு சமையல் செய்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உபேந்திரா, சமையலுக்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த கத்தியால் அணிகேட்டை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அணிகேட்டின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • மாவட்ட அளவில் ஓவிய போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பபுரம், கணக்க நாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்தி ரத்தில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    இவர்களுக்கு நந்திதா என்ற மகளும், அத்திரி சித்தாத் என்ற மகனும் உள்ளனர். நந்திதா பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    3-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஓவிய போட்டிகளில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனைகள் படைத்துள்ளதோடு எண்ணற்ற சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளார்.

    இவர் 1,330 திருக்குறள் வரிகளால் பென்சில் மூலம் திருவள்ளுவரின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அதற்கு பார்டராக 133 அதிகாரங்களையும் எழுதி தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் காண்பித்து பாராட்டினை பெற்றார்.

    மேலும் சட்ட மேதை அம்பேத்கார் படத்தினை அவர் இயற்றிய சட்டங்களை கொண்டு பென்சிலால் புதிய முயற்சியாக வரைந்து கொண்டிருக்கிறார்.

    மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளில் சாதனை படைத்தது மட்டு மல்லாது மாநில அளவிலான போட்டிகளிலும் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் மாணவி நந்திதா கூறினார்.

    • காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றா லம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


    மேலும், காலையில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    • சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
    • குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி குற்றால நாதர் கோவிலில் வழிபட்டனர்.

    மேலும் ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் மிதமாக விழுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.

    • சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான்.
    • விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதான மூத்த மகனுக்கு திடீரென மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இரவில் சிறுவனின் 45 வயதான தாய் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போன அந்த சிறுவன், தனது தந்தைக்கு போன் செய்து அம்மாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டேன். தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என்று கூறியுள்ளான்.

    உடனே பதறிப்போன அவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர்களிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தபோது, தனது தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தான்.

    மேலும் அங்கிருந்த போலீசாரிடம், எனது தாயை எங்கே, நான் அவரிடம் போக வேண்டும் என்று அழுதபடியே கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

    • புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
    • ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்தது.

    இதனால் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    மெயின் அருவியில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    நேற்று காலை முதல் இரவு வரை சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இன்று 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

    மெயின் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதால் குற்றாலம் வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் குற்றாலநாதர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.

    சிறிது நேரத்தில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரானது என அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    குற்றாலத்தில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பிறப்பையொட்டி குற்றாலநாதர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், தேவாலயங்கள் என பல்வேறு வழிபாட்டுத் தலங்களிலும் காலை முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    ×