என் மலர்
தேனி
- கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
- வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இது மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தத்தால் அருவிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குளித்து செல்கின்றனர். நேற்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
அருவியில் குளித்து கொண்டிருந்தபோது அவர் கையில் வந்திருந்த 6.5 கிராம் தங்க மோதிரத்தை தண்ணீரில் தவறவிட்டார். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து தாமோதரன் தவறவிட்ட மோதிரத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா சுற்றுலா பயணியான தாமோதரனை வரவழைத்து அவருடைய தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.
மோதிரம் காணாமல் போன ஒரேநாளில் அதனை மீட்டு கொடுத்த வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
மேலும் அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு மற்றும் அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பருவமழையின்போதும், அணையின் நீர்மட்டம் உயரும்போது ஆய்வு செய்து அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.
இதுவரை அணை பலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்றிரவு 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அணைக்கு 1230 கனஅடிநீர் வருகிறது. இன்றுமுதல் அணையிலிருந்து நீர்திறப்பு 1300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது. அணைக்கு 1906 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2149 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 137 கனஅடி.
தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
- வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளது.
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை கடந்த மாதம் 10-ந்தேதி 70 அடியை எட்டியது. இதனைதொடர்ந்து 11-ந்தேதி முதல் 14-ம் தேதி வரை சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் வடகிழக்குபருவமழை தீவிரமடைந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் இந்த மாதம் முழுகொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசனபகுதி 3-க்கும் 1004 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வைகையாற்றின் வழியாக நேற்று காலை முதல் விநாடிக்கு 800 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 200 கனஅடியாக திறக்கப்பட்டது. அணையிலிருக்கும் தண்ணீரை பொறுத்து கிருதுமால் நதிக்கு 10 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் விநாடிக்கு 150 கனஅடிவீதம் 300 மி.கனஅடி தண்ணீர் 58-ம் கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2284.86 ஏக்கர் நிலங்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.90 அடியாக உள்ளது. வரத்து 2190 கனஅடி, திறப்பு 1999 கனஅடி, இருப்பு 5728 மி.கனஅடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது. ஏற்கனவே இடுக்கி மாவட்டத்தில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்., அணைக்கு நீர்வரத்து 1715 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு 7342 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழை குறைந்துள்ளபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 5-ம் நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
- போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 10 பேரை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் டேப் பெண்டாடல் ஹைட்ரோ குளோரைடு என்ற போதை தரும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி சரகத்திற்குட்பட்ட மற்ற பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி சமத்துவபுரம் அருகே ராஜதானி போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ராஜதானி பிச்சம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் தினேஷ்குமார் (24), குமாரபுரத்தைச் சேர்ந்த வைரக்குமார் (25), சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த ஜேசுதாசன் (20) மற்றும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மகன் இன்பக்குமார் (19) என தெரிய வந்தது.
இதில் ஜெகநாதன் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும், இன்பக்குமார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு சக மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் இக்கும்பலுடன் மேலும் சிலர் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ளனர். இவர்கள் எங்கிருந்து இந்த மாத்திரைகளை வாங்கி வந்தனர்? என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து நேற்றுமாலை 140 அடியை எட்டியது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர்.
இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து ஆகிய பகுதிகளில் உள்ள பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 1817 கனஅடி நீர்வருகிறது. நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் வகையில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 7221 மி.கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 141 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன்பிறகு உபரிநீர் 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு திறக்கப்படும்.
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குபிறகு இதுவரை 5 முறை அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 800 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றுகாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 69.59அடியாக உள்ளது. நீர்வரத்து 1961 கனஅடி, தண்ணீர் திறப்பு 2599 கனஅடி, நீர்இருப்பு 5724 மி.கனஅடி.
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரியாறு 3, தேக்கடி 8.4, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.4, சண்முகா நதிஅணை 4, மஞ்சளாறு 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வீரபாண்டி 4, மி.மீ மழைளவு பதிவாகி உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்பி காணப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக கேரளா, மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதமும் இதே அளவில் தண்ணீர் நிலைநிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 139.85 அடியாக உள்ளது. அணைக்கு 2023 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 140 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் 14 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். எனவே வண்டிபெரியாறு, சப்பாக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பெரியாற்று கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது 142 அடியை எட்டினால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் 6-வது முறையாக இந்த அளவை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் மழை காரணமாக வைகை அணையும் நிரம்பி காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2187 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 2319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகையாற்றில் இருகரையை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 122 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 176.97 கனஅடி. தேக்கடி 1.2, கூடலூர் 0.4, உத்தமபாளையம் 1, சண்முகாநதி 0.8, போடி 0.2, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, சிறப்பு அபிஷேகம்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூரில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆடி மாதம் வரும் சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில்இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
இதற்காக நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சணை தொடங்கியது. இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, நவக்கிரஹ பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை தொடர்ந்து 5.20 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோவில் முன்பு உள்ள சுரபி நதியில் நீராடி தங்கள் பரிகார பூஜைகளை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.
- 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.
அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 136 அடியை எட்டியதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை உயர்ந்து 138 அடியை கடந்தது.
இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு 2-ம் கட்ட தகவலை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 142 அடியான பின் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 13 ஷட்டர்கள் வழியாக இடுக்கி மாவட்டம் பெரியாற்றில் திறந்து விடப்படும்.
உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உத்தரவிட்ட பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-வது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடி வரை தண்ணீர் நிறுத்தப்பட்டது.
எனவே இந்த வருடமும் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் 6-வது முறையாக அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 139.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2515 கன அடியாக உள்ளது. நேற்று வரை 1867 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 105 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6937 மி.கன அடியாக உள்ளது. தற்போது மழை அளவு குறைந்துள்ள போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4944 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3699 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5720 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டும்போது அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாகவும், கால்வாய்கள் மூலமாகவும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதே வைகை அணையின் கரையோரப்பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காட்சி கடல்போல் உள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முறையே 214 மற்றும் 236 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை ஏற்கனவே நிரம்பி முழு கொள்ளளவை எட்டி விட்டது.
- சோத்துப்பாறை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.73 அடியில் இருப்பதால் அணைக்கு வரும் 681 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. ஏற்கனவே அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை நெருங்கியதில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 9-ந்தேதி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.09 அடியாக உள்ளது. அணைக்கு 12955 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று மதியம் அல்லது மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் மதகுகள் வழியாகவும், கால்வாய் வழியாகவும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை ஏற்கனவே நிரம்பி முழு கொள்ளளவை எட்டி விட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 56.30 அடியில் இருப்பதால் அணைக்கு வரும் 345 கன அடி முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் சோத்துப்பாறை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.73 அடியில் இருப்பதால் அணைக்கு வரும் 681 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகமலை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகாநதி அணையும் முழு கொள்ளளவை எட்டி விட்டதால் அணையில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரியாறு 3.4, தேக்கடி 9.4, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அணை 23, போடி 7.6, வைகை அணை 11, மஞ்சளாறு 11, சோத்துப்பாறை 19, பெரியகுளம் 13, வீரபாண்டி 7, அரண்மனைப்புதூர் 8.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
- இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. குறிப்பாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறு, முல்லைக்கொடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது. நேற்று மாலை 4 மணிக்கு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதும் தமிழக பகுதிக்கு 1867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கேரளாவுக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது.
இதனையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியார், உப்புத்துறை, சப்பாத்து ஆகிய முல்லைப்பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7405 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6748 மி.கன அடியாக உள்ளது.
அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியான பின்பு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அதற்கு மேல் வரும் தண்ணீர் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் வழியாக இடுக்கி மாவட்ட பெரியாற்றில் திறந்து விடப்படும்.
தற்போது தொடர்மழை நீடித்து வருவதால் 6-வது முறையாக 142 அடியை எட்டுமா என விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் டிசம்பர் மாதத்தில் 142 அடியாக நிலைநிறுத்தலாம் என்று ரூல் கர்வ் நடைமுறை தெரிவித்துள்ளது. ஆனால் அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டிய போதே இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை முதல் அணையை ஒட்டியுள்ள ஷட்டரில் இருந்து படிப்படியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கேரள பகுதிக்கு திறக்கப்படும் என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே மக்களை பீதியடைய செய்யும் வகையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- சுவர் இடிந்து விழுவதைப் பார்த்ததும் வினோத்குமார் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
- அதிர்ஷ்டவசமாக பாண்டி மீனாவை அங்கிருந்து வினோத்குமார் வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழபூசனூத்து பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி பாண்டி மீனா மற்றும் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக இவரது மண் வீடு இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கர்ப்பிணி மனைவியான பாண்டி மீனா தனது மகளுடன் உறங்கிக் கொண்டு இருந்தார். சுவர் இடிந்து விழுவதைப் பார்த்ததும் வினோத்குமார் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கும் அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பாண்டி மீனாவை அங்கிருந்து வினோத்குமார் வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது. நீர்வரத்து 652 கன அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 136.50 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 5987 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6244 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் மீண்டும் 136 அடியை கடந்துள்ளதால் இடுக்கி மாவட்டத்திற்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று இரவு முதல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 19280 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4854 மி.கன அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை10 மணிக்கு 25ஆயிரம் கனஅடி வரையிலும் மாலையில் மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று 69 அடியை அணையின் நீர்மட்டம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராகநதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 127.42 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 629 கன அடி நீர் முழுவதும் வெளியேறி வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 56.30 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு 128 கன அடி. இருப்பு 432 மி.கன அடி.
தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்து வரும் மழையினால் அன்றாட பணிகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
பெரியாறு 82.6, தேக்கடி 108, கூடலூர் 33.6, உத்தமபாளையம் 14.6, சண்முகாநதி அணை 88.4, போடி 87, வைகை அணை 25, மஞ்சளாறு 52, சோத்துப்பாறை 126, பெரியகுளம் 96, வீரபாண்டி 104.6, அரண்மனைபுதூர் 93, ஆண்டிபட்டி 86.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






