search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    141 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    141 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    • இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு மற்றும் அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பருவமழையின்போதும், அணையின் நீர்மட்டம் உயரும்போது ஆய்வு செய்து அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.

    இதுவரை அணை பலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்றிரவு 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அணைக்கு 1230 கனஅடிநீர் வருகிறது. இன்றுமுதல் அணையிலிருந்து நீர்திறப்பு 1300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது. அணைக்கு 1906 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2149 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 137 கனஅடி.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    Next Story
    ×