search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    140 அடியை நெருங்கிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
    X

    140 அடியை நெருங்கிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

    • முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்பி காணப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களாக கேரளா, மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதமும் இதே அளவில் தண்ணீர் நிலைநிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 139.85 அடியாக உள்ளது. அணைக்கு 2023 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 140 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் 14 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். எனவே வண்டிபெரியாறு, சப்பாக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பெரியாற்று கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது 142 அடியை எட்டினால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் 6-வது முறையாக இந்த அளவை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர் மழை காரணமாக வைகை அணையும் நிரம்பி காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2187 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 2319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகையாற்றில் இருகரையை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 122 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 176.97 கனஅடி. தேக்கடி 1.2, கூடலூர் 0.4, உத்தமபாளையம் 1, சண்முகாநதி 0.8, போடி 0.2, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×