என் மலர்
தஞ்சாவூர்
- சுவாமி புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
- வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி தரிசித்தனர் .
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர் .
மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் ஆவணி பெருந் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணிப் பெருந்திரு விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது.
இரவில் உற்சவர் முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமி புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி தரிசித்தனர் .
ஆவணி பெருந்திரு விழாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி திருத்தேரோட்டம், 16 ஆம் தேதி தேதி கொடியிறக்கம், விடையாற்றி அபிஷேகம், அக்டோபர் 5 ஆம் தேதி தெப்பத் திருவிழா, 7-ந் தேதி தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடைபெறவுள்ளன.
- விடுதலைப்புலிகளுக்காக சிறை சென்றவா் என் தம்பி ரவிச்சந்திரன்.
- பா.ஜ.க.வுடன் என்றும் கூட்டணி கிடையாது.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மீத்தேன், மேகதாது விழிப்புணர்வு விளக்க பொதுக் கூட்டம் பழைய மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
ம.தி.மு.க.வில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று பேசுகின்றனா்.
மது ஒழிப்புக்காக போராடி உயிரைவிட்டவா் என் தாயாா் மாரியம்மாள். விடுதலைப்புலிகளுக்காக சிறை சென்றவா் என் தம்பி ரவிச்சந்திரன். இவா்களுக்கு என்ன பதவி கொடுத்தேன்.
பிரதமா் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சே வரக்கூடாது என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறினோம்.
நாங்களா இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம். பா.ஜ.க.வுடன் என்றும் கூட்டணி கிடையாது.
தமிழக நலன்களுக்கு முற்றிலும் எதிராக கவர்னர் ஆா்.என். ரவி நிற்கிறார். கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான விவகாரத்தில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி.
எனவே இதை கண்டித்து, அவா் கொடுக்கும் சுதந்திர தின தேநீா் விருந்தை ம.தி.மு.க. புறக்கணிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
தஞ்சாவூர்:
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் அடித்தது. அதன் பின்னர் மாலையில் மழை பெய்தது. 1 மணி நேரம் கனமழை கொட்டியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தன.
இன்று அதிகாலையில் தஞ்சை, பாபநாசம், வல்லம், குருங்குளம், திருவையாறு, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது.
தஞ்சையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழை இன்று காலையும் நீடித்தது. தொடர் மழையால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். மதுக்கூரில் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் ஓடின. காலையில் சாலை தெரியாத அளவுக்கு மழை பெய்ததால் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்கை ஓளிர விட்டப்படி சென்றனர்.
தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் விடுமுறை அறிவிப்பு ஏதும் வராத நிலையில் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். அலுவலகம் செல்வோர் குடைப்பிடித்தபடியும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ரெயின்கோட் அணிந்தபடியும் சென்றனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மாவட்டத்தில் அதிகபட்டசமாக பாபநாசத்தில் 79 மி.மீ மழை அளவு பதிவானது.
மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் சேதம் அடையுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தார்பாயால் மூடி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் நனைந்து சேதமாகும் அபாயம் உள்ளது. உனவே உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-
பாபநாசம்-79, தஞ்சாவூர்-60, திருவையாறு-60, மஞ்சளாறு-49, கீழணை-56.40, கும்பகோணம்-50, கல்லணை-43.40, குருங்குளம்-42.40, திருக்காட்டுபள்ளி-37.20. மாவட்டத்தில் ஒரே நாளில் 809.10 மி.மீ. பெய்துள்ளது குறிப்பிடதக்கது.
இதைப்போல் நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, தேவங்குடி, கட்டுமாவடி, திருச்செங்காட்டங்குடி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தெளித்த நிலையில் தண்ணீர் தேவையான நேரத்தில் இந்த மழை பெய்தது கடைமடை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் 40.30 மில்லிமீட்டர், திருப்பபூண்டி 38, வேளாங்கண்ணி 70, திருக்குவளை 32, தலைஞாயிறு 75, வேதாரண்யம் 60, கோடியக்கரையில் 42.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
இதைப்போல் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- அவ்வப்போது மழையும் பெய்ததாலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
- கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வழக்கம்போல் குறுவை சாகுபடிக்காக வழக்கமான தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை திறந்ததும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, எந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர். மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் வேளாண்மை துறையின் கிடங்குகளில் வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேளாண்மை துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சத்து 93 ஆயிரத்து 771 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர். இதை தொடர்ந்து, கடந்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை பருவத்தில் இலக்கை மிஞ்சி 1 லட்சத்து 95 ஆயிரத்து 130 ஏக்கரில் நடவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 52 ஆயிரத்து 646 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 42 ஆயிரத்து 484 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும், டெல்டாவின் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:- டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அவ்வப்போது மழையும் பெய்ததாலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். மேலும், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதும், விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்தது. சாகுபடிக்கு தேவையான பயிர் கடனும் கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்படுவதால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறும்போது:- டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களை பற்றாக்குறை இல்லாமல் வெளியில் இருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்தோம்.
அதன்படி, இந்த ஆண்டு இலக்கை தாண்டி சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறோம் என்றனர்.
- அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.
- திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவையாறு:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை நாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு தென் கயிலாயத்தில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் 'அப்பர் கயிலை காட்சி விழா' வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக நேற்று காலை திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டனர். தொடர்ந்து, மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர், இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிகர நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டது.
- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம்.
- அதிமுக ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம்.
பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் மாற்றுக்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் விவசாய சங்க அமைப்பினர், தென்னை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
பட்டுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆய்வு செய்து அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். குறுவை, சம்பா சாகுபடி தொகுப்பு கொடுத்தோம்.
உழவன் செயலியை அறிமுகப்படுத்தினோம். அதில் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கினோம்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம். அதுபோல் மீன்பிடித் தடைக்கால நிவாரணமும் அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தி வழங்கப்படும்.
தென்னை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் செய்து தரப்படும்.
கஜா புயலால் தென்னை விவசாயம் பட்டுக்கோட்டை, போராவூரணி பகுதியில் பாதிக்கப்பட்ட போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களை பாதுகாத்தோம். கஜா புயலின் போது சேதமான படகுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கினோம்.
எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உங்கள் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும். மேலும் அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக ஆட்சியில் தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2.64 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீன்பிடித் தடைக்கால தொகை உயர்த்தி வழங்கப்படும்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
திமுக ஆட்சியில் விவசாயிகள் அனுபவிக்கும் கஷ்டம், நஷ்டம், துயரத்தை நான் அறிவேன். உடலுக்கு உயிர் போல விவசாயத்திற்கு உயிரான நீரை உரிய நேரத்தில் தருவோம்.
அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மை சிறப்பாக கையாளப்பட்டது, நீரில்லை என்றால் டெல்டா பகுதி பாலைவனமாகி விடும்.
நடவு மானியம், உழவு மானியம், குறுவை, சம்பா தொகுப்புகள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டன.
அதிமுக ஆட்சியில் தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2.64 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீன்பிடித் தடைக்கால தொகை உயர்த்தி வழங்கப்படும்.
விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் தி.மு.க. செய்தது என்ன?
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றிபெறும்.
மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
திமுக ஆட்சியில் கிட்னி திருடப்படுகிறது. திமுக ஆட்சியில் மருத்துவமனைக்கு உயிரோடு போகிறவர்கள் உயிரில்லாமல் வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார் என்கிறது விசிக.
- நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் எழுச்சி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் எனக் கூறினார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி அமைத்ததும் ஸ்டாலின் அப்படியே அப்செட் ஆகிவிட்டார். சட்டசபையில் திடீரென ஸ்டாலின் எழுந்து, என்னைப் பார்த்து பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அதிமுக-வில் இருக்கிறாரா? திமுகவில் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. அதிமுக கட்சி நம்ம கட்சி. நாம் யார் கூட வேண்டுமென்றாலும் கூட்டணி வைப்போம். இவர் ஏன் சட்டமன்றத்தில் பதறுகிறார். பயம். தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.
பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்து திமுக-வின் கூட்டணி கட்சிகளும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார். அதிக சீட் தருவதாக கூறினார் என விடுதலை சிறுத்தைகள் கூறுகிறது. நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள். திமுக கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்சியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்தால் விழுங்கிவிடும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது.
- பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழவைக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நெசவு தொழிலாளர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அப்போது. கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமியிடம் நெசவு தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து எடப்படி பழனிசாமி பேசியதாவது:-
* அ.தி.மு.க. ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டத்துடன் மணமக்களுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின் ஏழை நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
* பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழவைக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும்.
* அன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் துணிக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலை உருவாக்கப்படும் என உறுதி அளித்தார்.
- இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று.
- இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் தருண்குமார் (வயது 21). இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் கட்டிடக்கலையியலில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே பெயிண்ட் ஓவியம், மினியேச்சர் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட மாணவர் தருண்குமார் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் சூரிய ஒளி ஓவியத்தை வரைந்து அசத்தி வருகிறார்.
அரசியல் தலைவர்களின் ஓவியங்கள், ராஜராஜ சோழன் போன்ற வரலாற்று மன்னர்கள் ஓவியம், பிரபலங்களின் ஓவியங்கள் என பல்வேறு விதமான ஓவியங்களை சூரிய ஒளியில் லென்ஸ் பயன்படுத்தி வரைந்து வருகிறார். இந்த ஓவியங்களை வெயில், மழையில் படாமல் பாதுகாத்து வந்தால் சுமார் 400 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும் என்றும் தஞ்சையில் பலருக்கும் இந்த ஓவிய கலையை பயிற்சி அளித்தும் வருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து மாணவர் தருண்குமார் மேலும் கூறும்போது:-
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தி லென்ஸ் மூலம் ஒரு மிட் பாயிண்டை குறித்து இந்த ஓவியம் வரைந்து வருகின்றேன். இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று. வரலாற்று சம்பந்தமான ஓவியங்கள், பாரம்பரிய சின்னங்கள் போன்ற ஓவியங்களை அடுத்தடுத்து வரைய உள்ளேன். ஒரு ஓவியம் வரைவதற்கு ஓவியத்தை பொறுத்து 2-ல் இருந்து 3 நாட்கள் வரை ஆகும். இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
என்னுடைய தொழில் ஆர்க்கிடெக்சர் ஆக இருந்தாலும் ஓவியத்தின் மேல் உள்ள எனது ஆர்வத்தினால் இதனை தற்போது தஞ்சையில் நான் மட்டுமே செய்து வருகிறேன். அதே நேரத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறேன். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏற்ற ஓவியங்களை ஆர்டர் கொடுக்கின்றனர். இந்த ஓவியம் வரைவதற்கு மிகவும் கவனம் தேவை. ஒரு நாள் முழுவதும் ஓவியம் வரைந்தால் இரவு தூக்கம் வராது. கண் எரிச்சல் ஏற்படும். பாதுகாப்பான கண்ணாடியை போட்டு வரைந்தாலும் அந்த பிரச்சனை சில சமயங்களில் ஏற்படும். இருந்தாலும் சவால் மிக்க இந்த ஓவியங்கள் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது என்றார்.
- கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
- அக்குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (புதன்கிழமை) 21-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் படங்கள் அடங்கிய பேனர் பள்ளியின் முன்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனருக்கு பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அக்குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மாலை தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் இருந்து தீபம் ஏந்தியவாறு, மவுன ஊர்வலம் புறப்பட்டு, மகாமக குளத்திற்கு சென்று மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.
- 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மாதவன் (வயது10).
அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் பாலமுருகன் (10) மற்றும் ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) இவர்கள் 3 பேரும் திருவேங்கப்புடையான்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவேங்கப்புடையான்பட்டியில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் அருகே மருதகுடி கிராமத்தில் நடந்து வரும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அனைவரும் திருவிழாவை பார்த்து கொண்டு இருந்தனர்.
அப்போது மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய 3 மாணவர்கள் மட்டும் அதேகிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். ஒன்றாக சேர்ந்து குளித்தபோது குளித்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கினர். 3 பேருக்கும் நீச்சல் தெரியதால் தண்ணீரில் தத்தளித்து காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர்.
சிறிது நேரத்தில் மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதற்கிடையே 3 பேரையும் திருவிழாவில் காணாதது கண்டு அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள குளத்திற்கு சென்ற பார்த்தபோது வெளியில் மாணவர்களின் உடமைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் குளத்தில் குதித்து தேடிபார்த்தனர். அப்போது மூழ்கிய நிலையில் இருந்த மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






