என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ- தலைமை ஆசிரியையும் கைது
    X

    5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ- தலைமை ஆசிரியையும் கைது

    • மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக விஜயா உள்ளார். இங்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் வேலை பார்க்கின்றனர். கரம்பயம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 53) என்பவரும் 5-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிகிறார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளி வேலையின் போது 5-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாஸ்கர் தனது அருகில் நின்று பாடத்தை படிக்கும்படி கூறியதாகவும், அந்த மாணவி படித்துக் கொண்டிருக்கும் போது அவர் மீது கையை வைத்து தவறாக நடந்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது தோழி களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் சென்று இதுகுறித்து கேட்டு முறையிட்டுள்ளனர்.

    ஆனால் அவர் இதுகுறித்து மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் பாஸ்கர் இதேபோல், 5-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர். தொடர்ந்து, 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×