என் மலர்
சிவகங்கை
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரைக்குடி பகுதியில் பெய்த மழைக்காரணமாக நகரில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டு வருகிறது. மேலும் காரைக்குடி நகர் வளர்ச்சிக்காக ரூ.120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக காரைக்குடி நகர் முழுவதும் சாலைகள் தோண்டப்பட்டு அதில் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் பெரும்பாலான இடத்தில் நடந்து முடிந்துவிட்டது. இதற்காக தோண்டப்பட்ட சில இடங்கள் மட்டும் மூடப்பட்ட நிலையில் சில இடங்கள் இன்னும் அப்படியே உள்ளன. இதையடுத்து தொடர் மழை காரணமாக காரைக்குடி நகர் முழுவதும் உள்ள சாலைகளில் தற்போது சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
காரைக்குடி நகர சிவன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த 2 பள்ளிகளின் முன்புள்ள பிரதான சாலை, கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 10 நாட்களுக்கும் மேலாக சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாக காணப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த சாலையில் செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் எஸ்.எம்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி தன்னார்வமாக மாணவர்கள், தலைமை ஆசிரியர் வள்ளியப்பன் மற்றும் ஆசிரியர்கள் சேவு.முத்துக்குமார், பிரகாஷ்மணிமாறன் ஆகியோர் தலைமையில் சாலையை சீரமைத்தனர். சாலையை சீரமைத்த மாணவர்களை பொதுமக்கள் பாராட்டினர். #tamilnews
காரைக்குடி காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தையொட்டி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 16 வயது முதல் 25 வயது வரையும், 26 முதல் 50 வயது வரையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதேபோல் 16 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் ஆண்களுக்கான 16-25 வயது மற்றும் 26-50 வயது பிரிவுகளுக்கான போட்டியை காரைக்குடி சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் கே.பிள்ளை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆண்களுக்கான 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவு போட்டியை இலுப்பக்குடி துணை ராணுவ பட்டாலியன் சீனியர் கமாண்டர் அஜய் ஜோஷியும், பெண்களுக்கான பிரிவு மாரத்தான் போட்டியை சிவகங்கை அரசு மருத்துவமனை டீன் வனிதாவும் தொடங்கி வைத்தனர். 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலெக்டர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு ஓடினார்.
இருதய பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் ஆண்களுக்கான 16-25 வயது பிரிவில் லிங்கேசுவரன் முதலிடத்தையும், வெங்கடேஷ் 2-ம் இடத்தையும், கஜேந்திரன் 3-ம் இடத்தையும் பிடித்தனர். 26-50 வயது பிரிவில் மணிகண்டன், குல்தீப்குமார், பட்டாணி ஆகியோர் முதல் 3 இடங்களையும், 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் முத்துவிநாயகம், வள்ளியப்பன், அஜய் ஜோஷி ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில் ஏன்சலின்ஸ், நீது, லட்சுமி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன், காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் சலீம், டாக்டர் காமாட்சி சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை ஆக்ஸ்போர்டு நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி பாண்டி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார். பாண்டி செல்வி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர்களுடைய 2- வது மகள் தீபிகாஸ்ரீ(வயது3) வீட்டுவாசலில் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அருகில் வசிக்கும் சங்கீதா (32) என்ற பெண் தன்னுடைய காரை பின்னோக்கி ஓட்டியபோது எதிர்பாராதவிதமாக தீபிகாஸ்ரீ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை செய்து வருகிறார்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதிஉதவி வழங்கி பாதுகாக்கவும், 2018-19-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் ரபி பருவத்தில் நெற்பயிர் (சம்பா) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, நடப்பாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 520 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்.கடன்பெறாத விவசாயிகள் சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் மாதம் 30-ந்தேதி ஆகும். நெல் பயிருக்கான காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.24ஆயிரம் ஆகும்.
காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.360 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. எனவே, விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி பயன்பெமாறும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு உள்ளது
மானாமதுரை வட்டாரத்தில் மணல் திருட்டு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பலரும் வைகை ஆற்றிலும் கண்மாய் பகுதிகளிலும் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். இரவு 10 மணி முதல் விடிய விடிய மணல் திருட்டு நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அனுமதியின்றி சவடு மண் ஏற்றிக்கொண்டு செல்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சவடு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து டிரைவர் வெள்ளைச்சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் மண் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை அபராதத்துடன் விடுவிக்காமல் பறிமுதல் செய்து அரசின் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதே போல மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்பது பெயரளவிலேயே உள்ளது. எனவே மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் அந்த பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் பல்வேறு வியாதிகள் பரவி வருவதாக கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக அந்த போராட்டக்குழு சார்பில் நேற்று அந்த ஆலை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார், இந்த முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம் கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். இதையடுத்து காரைக்குடி மற்றும் கோவிலூரில் உள்ள ஆலை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
மேலும் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்கள் கழனிவாசல் வழியாக பேயன்பட்டி பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டது. இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் போலீசார் தரப்பில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் உள்பட 8 துணை சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள், 136 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஆலையை மூடக்கோரி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காந்திய தொண்டர் மன்ற ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, முன்னாள் கவுன்சிலர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அழகப்பன், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சகுபர்சாதிக், அழகன் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கும்போது முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தலைமையில் சென்ற ஒரு பகுதியினர் அந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழ.கருப்பையா, காந்திய தொண்டர் மன்ற நிர்வாகி விஜயராகவன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் வேணுகோபால், தாலுகா செயலாளர் தட்சணாமூர்த்தி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டை நோட்டம் பார்த்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து அந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மானாமதுரை சப்-இன்ஸ்பெக்டர் முகமதுதாரிக் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மானாமதுரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியில் நின்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சிவகங்கை, கல்லல், மானாமதுரை, சிப்காட் பகுதி, நாச்சியார்புரம், குன்றக்குடி, மணக்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் மானாமதுரையை அடுத்த கீழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(வயது24), முருகப்பாஞ்சான் கிராமத்தை சேர்ந்த மணிக்காளை(25) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் அங்குரகு (வயது 28). இவருடைய மனைவி முனீஸ்வரி (25), மகன் விஜயராஜன் (10). இந்தநிலையில் அங்குரகு மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் கல்லலை அடுத்த நடராஜபுரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார்.
அழுபிள்ளைதாங்கி கண்மாய் அருகே வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகில் உள்ள கிருங்காகோட்டையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் பழனிவேல் (வயது 25), திருமணமாகவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
3 தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து பழனிவேல் ஊர் திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு திருப்பத்தூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. ஜாதகம் பார்ப்பதற்காக சகோதரி வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சகோதரி வீட்டுக்கு வந்திருந்த பழனிவேல் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய சகோதரி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்த சிறிய அரிவாளை எடுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தொனியில் பேசினார். மேலும் சிலரை விரட்டிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து தலைமை குற்றவியல் நீதிபதி அறைக்குச் சென்ற அந்த வாலிபர் நீதிபதி இருக்கையில் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாலிபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி இருக்கையில் அமர்ந்து ரகளை செய்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த முனியசாமி (வயது 24) என தெரிய வந்தது.
இவர் ஒரு வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட கோர்ட்டுக்கு கையெழுத்திட வந்துள்ளார். அப்போது தான் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
முனியசாமிக்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகிறார். #Judge #court
மாவட்டம்தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி காளையார்கோவிலில் நடக்கிறது.
செயல் வீரர்களின் கூட்டங்களில் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அந்த குழுவின் தலைவராக நான் உள்ளேன்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்ய தனியாக வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசிற்கு தேவையான 126 போர் விமானங்கள் வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் 36 ரபேல் விமானங்கள் வாங்க பா.ஜனதா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை காட்டிலும் 9 சதவீதம் குறைவான விலைக்கு ரபேல் விமானங்களை வாங்குவதாக பா.ஜனதா அறிவித்தது. விலை குறைவு என்றால் அதனை கூறுங்கள் என்று கேட்டால் தெரிவிக்க மறுக்கிறார்கள். மேலும் குறைவான விலைக்கு விமானங்கள் வாங்குவது என்றால் அதிக விமானங்களை வாங்க வேண்டியதுதானே? ஏன் குறைத்து வாங்குகிறீர்கள்?.
ராணுவ அமைச்சகம் பற்றி அதன் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை. பா.ஜனதாவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 3 பேர் ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டுள்ளனர். யாரும் உருப்படியான எந்த காரியத்தையும் செய்யவில்லை. இந்த அரசு அடக்கு முறை கொள்கையை கையாண்டு வருகிறது.
தொடர்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் சரிந்து வருவது பொருளாதார வீழச்சிக்கு வழிவகுக்கும். இதுபற்றி நான் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறேன்.

இந்தியாவில் வாக்குச் சீட்டு முறை தேர்தல் தான் தேவை என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #PChidambaram #AIIMS #MaduraiAIIMS
விருதுநகரிலிருந்து ரேஷன்கடை வினியோகத்திற்காக பாமாயில் பாக்கெட்டுகள் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ஏற்றிய ஒரு லாரி கும்பகோணத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மாரிமுத்து (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் லாரி திருப்பத்தூரை அடுத்த நெடுமரம் பாலத்தின் அருகே வந்த போது, திடீரென பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.
அதை டிரைவர் நிறுத்த முயன்றார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறிய லாரி, நிலைதடுமாறி அங்கிருந்த பாலத்தில் மோதி பக்கவாட்டு பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அதில் லாரியில் இருந்த பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் கீழே சிதறி விழுந்து சேதமடைந்ததில், எண்ணெய் கொட்டியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.






