search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road renovation"

    முறையான அனுமதி பெறாமல் சாலையை சீரமைத்ததாக கூறி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட 50-க்கும் அதிகமான பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னையில் இருந்து வானகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி சிக்னல் அருகே குண்டும் குழியுமாக சேதம் அடைந்து இருக்கிறது. இதனால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.

    எனவே மதுரவாயல் குடியிருப்போர் கூட்டமைப்பு, திருவேற்காடு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். பொதுமக்கள் இதற்கு உதவ முன் வந்தனர்.

    இன்று காலை இந்த சாலையை சீரமைப்பதற்காக குண்டும் குழியுமாக இருந்த இடத்தில் ஜல்லிகற்கள், மணல் கொட்டப்பட்டன. அதைக்கொண்டு சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி சாலையை சீரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    இதை அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முறையான அனுமதி பெறாமல் சாலையை சீரமைத்ததாக கூறி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட 50-க்கும் அதிகமான பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

    இது 4 வழி தேசிய நெடுஞ்சாலை. 2012-ம் ஆண்டு இதை 6 வழி சாலையாக மாற்ற அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த பணி நடைபெறவில்லை. ஆனால் இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 6 வழி சாலைக்குரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த சுங்கச்சாவடியை அமைத்துள்ள ஒப்பந்ததாரர் தான் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இங்கு தினமும் ரூ.5 லட்சம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி வருமானம் வந்தும் சாலை பணி நடக்கவில்லை. மத்திய சாலை போக்குவரத்து இணை மந்திரி, தமிழக முதலமைச்சர், உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயன் இல்லை. எனவேதான் நாங்களே சாலையை சீரமைக்க முடிவு செய்தோம். அதையும் தடுத்து எங்களை கைது செய்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    காரைக்குடியில் பள்ளி முன்பு சேறும், சகதியுமான சாலையை தன்னார்வமாக அதனை சீரமைக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
    காரைக்குடி:

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரைக்குடி பகுதியில் பெய்த மழைக்காரணமாக நகரில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டு வருகிறது. மேலும் காரைக்குடி நகர் வளர்ச்சிக்காக ரூ.120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்காக காரைக்குடி நகர் முழுவதும் சாலைகள் தோண்டப்பட்டு அதில் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் பெரும்பாலான இடத்தில் நடந்து முடிந்துவிட்டது. இதற்காக தோண்டப்பட்ட சில இடங்கள் மட்டும் மூடப்பட்ட நிலையில் சில இடங்கள் இன்னும் அப்படியே உள்ளன. இதையடுத்து தொடர் மழை காரணமாக காரைக்குடி நகர் முழுவதும் உள்ள சாலைகளில் தற்போது சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    காரைக்குடி நகர சிவன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த 2 பள்ளிகளின் முன்புள்ள பிரதான சாலை, கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 10 நாட்களுக்கும் மேலாக சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாக காணப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த சாலையில் செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் எஸ்.எம்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி தன்னார்வமாக மாணவர்கள், தலைமை ஆசிரியர் வள்ளியப்பன் மற்றும் ஆசிரியர்கள் சேவு.முத்துக்குமார், பிரகாஷ்மணிமாறன் ஆகியோர் தலைமையில் சாலையை சீரமைத்தனர். சாலையை சீரமைத்த மாணவர்களை பொதுமக்கள் பாராட்டினர். #tamilnews
    ×