என் மலர்
சிவகங்கை
திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அங்குள்ள அண்ணாசிலை அருகே நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிவகங்கை, ராமநாதபுரம் ஆவின் சேர்மன் அசோகன், ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கரு.சிதம்பரம், பேரவை வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 1991-96-ல் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் அமைச்சர், கட்சியின் பொருளாளர் என பெரிய பொறுப்புகளை வழங்கியது திருப்பத்தூர் தொகுதி. உள்ளாட்சி தேர்தலை நாம் நடத்தவில்லை என்பது உண்மை. காரணம் அன்று கட்சியில் சில பிரச்சினைகள் வந்தது, இன்றைக்கு முடிந்துவிட்டது. வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்.
12 நாடுகளில் சொத்துக்கள் வாங்கிய நபர்கள் ப.சிதம்பரமும், அவரது மகனும் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பா.ஜ.க.வுடன் எங்களுக்கு உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்களோ, தொண்டர்களோ கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக, பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்த திருநாவுக்கரசார் இருக்கிறார். ஆனால் அந்த கட்சியில் 9 தலைவர்கள் உள்ளனர்.
அ.தி.மு.க.வில் யாரும் தலைவர்கள் கிடையாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், நான், மாவட்ட செயலாளர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தொண்டர்கள் தான். சில அதிகாரிகள் செய்கின்ற தவறுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படலாம். எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க. வெற்றியை பெறும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திரைப்பட நடிகர் சிங்கமுத்து, நெற்குப்பை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, முன்னாள் நகர துணைச் செயலாளர் பிரேம்குமார், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சின்னையா அம்பலம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.
காரைக்குடி:
காரைக்குடியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு தினமும் சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் செல்கிறது. வழக்கம் போல் இன்று காலை 5.05 மணிக்கு ரெயில் புறப்பட தயாரானது.
அப்போது தான் என்ஜினில் பழுது ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் என்ஜினில் ஏற்பட்ட பழுதை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் முயற்சிக்கு பலன் இல்லை.
எனவே திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 7.35 மணியளவில் 2 1/2 மணி நேரம் தாமதமாக பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். #Train
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவல்பட்டி விராமதி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மகாலட்சுமி (வயது 7). இவள் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மகாலட்சுமி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், திடீரென்று சிறுமி மகா லட்சுமியை பைக்கில் ஏற்றி கடத்திச் சென்று விட்டார்.
இது குறித்து தந்தை ஆறுமுகம் கீழச்செவல்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் குழந்தையை கடத்தியது புதுக்கோட்டை மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் ராமு (26) என்பது தெரியவந்தது.
இது குறித்து ராங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ராமுவை கைது செய்தனர். அவர் எதற்காக சிறுமியை கடத்தினார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி ப.சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, மலேசியா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மக்களிடம் அதிகளவில் வாக்குறுதிகளை கொடுத்து அதை செயல்படுத்தாமல் உள்ளது. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவோம், அனைத்து வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
ஆனால் இதனை எல்லாம் நிறைவேற்றாமல் மோடி அரசு மக்களை ஏமாற்றி விட்டது. விலைவாசியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என நினைத்து அதிக வாக்குறுதியை அளித்தோம் என மத்திய மந்திரி நிதின் கட்கரியே கூறியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க லட்சியத்தோடு பணி புரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ப.சிதம்பரம் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டார். #thirunavukkarasar #bjp
திருப்பத்தூர் அருகே கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வண்ணியன் மனைவி செல்வி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு மானகிரியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மறுநாள் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து செல்விக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் 1,500 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன. அதில் முக்கியமான சில பொருட்கள் திருடு போனதாக கூறப்படுகிறது.
இதே போல அதே ஊரைச்சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மனைவி வள்ளி (75) வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம், ஒரு பட்டுச்சேலையை திருடிச்சென்றுள்ளனர். மேலும் அருகிலுள்ள ராஜகோபால் மனைவி வசந்தா (60) என்பவரது வீட்டிலும் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் நகை, பணம் இல்லை என்பதால் தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து செல்வி மற்றும் வள்ளி ஆகியோர் நாச்சியாபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்முனியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஒரே ஊரில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கல்லூரி முதல்வர் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயமணி உள்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், கனவு நாயகன் கலாம் என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் அலுவலர் ஜெயமணி செய்திருந்தார்.

இதேபோல திருப்பத்தூர் அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி தாளாளர் ஹாஜி பாபா அமிர்பாதுஷா அப்துல் கலாமை பற்றிய அறிவு சார்ந்த கருத்துக்களை எடுத்து கூறினார். பள்ளி முதல்வர் கவிதாமேரி வரவேற்றார். இதில் அப்துல்கலாமை பற்றி பாடல்கள் பாடப்பட்டன. பெற்றோர் சங்கத்தின் சார்பில் ஹேமலதா வாழ்த்தி பேசினார். முடிவில் ஆசிரியை முத்துக்குமாரி நன்றி கூறினார்.
கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி விக்டர் தலைமை தாங்கினார். இதில் திருப்பத்தூர் ஆறுமுகம் நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ரூபன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் ‘விஷன்2020‘ என்ற தலைப்பில் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகர் வர்த்தக சங்கத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் சிவராஜ், கல்வியாளர் ரங்கசாமி, முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாணவர் தலைவர்கள் ஜெப்ரீ, முத்துமீனா ஆகியோர் செய்திருந்தனர்.
ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை இளைஞர்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடும் வகையில் ஓய்.ஆர்.சி., என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அப்துல்கலாம் கிளப் சார்பாக ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கியும், 1,800 மாணவ- மாணவிகள் ரத்தம் தரம் அறிதல் முகாமிலும் பங்கு கொண்டனர். சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விமலாதேவி வித்யா, காரைக்குடி ரத்த வங்கி மருத்துவர் அருள்தாஸ் மற்றும் நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபிநயா உள்பட 50-க்கும் மேற்பட்ட நர்சுகள் முகாமில் பணியாற்றினர். இதில் கல்லூரி துணை முதல்வர்கள் கோபிநாத், ஸ்ரீதேவி, சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குனர் பேராசிரியர் ராஜமாணிக்கம், பேராசிரியர்கள் மாரியப்பன், இளங்கோவன், வானதி, ஜெயக்குமார், சிவக்குமார், வேல்முருகன், தனலெட்சுமி, காளிதாஸ், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மரியரத்தினம், பெலிஜியாஞானதீபம், காசிவயிரவன், இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முகாம் அமைப்பாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் உள்ள புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் வைரவன். இவர் காரைக்குடியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளஞ்சியம் (வயது 60). இவர்களது மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
வைரவன் தினமும் வேலை முடிந்து வீட்டு இரவு 10 மணிக்கு தான் வீடு திரும்புவார். இதனால் பெரும்பாலான நேரங்களில் இளஞ்சியம் வீட்டில் தனியாகவே இருப்பார்.
இந்த நிலையில் நேற்று இரவு போல வேலை முடிந்து வைரவன் வீடு திரும்பினார். அப்போது வீட்டிக்கு இளஞ்சியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் இரும்பு கம்யியால் தாக்கப்பட்டிருந்த அடையாளம் இருந்தது.
மனைவி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த வைரவன் உடனே அழகப்பாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ் பெக்டர் ஆத்மநாதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இளஞ்சியத்தின் நகைகள் வீட்டின் பின்புறத்தில் சிதறி கிடந்தன.
இதனால் நகைக்காக கொலை செய்யப்பட்டது போல் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இளஞ்சியம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சிவகங்கை வந்தார். அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வார்டுகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு, முதியோர்களுக்கான தனிப்பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, டெங்கு நோய் தடுப்பு வார்டு, சிடி ஸ்கேன் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு போதுமான வசதிகள் உள்ளதா என்றும் அவைகள் சரியாக செயல்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ரூ.4½ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சை பிரிவு பகுதியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவத் துறை இணை இயக்குனர் விஜயன்மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சுாதாரத்துறை செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:- பருவமழை தொடங்க உள்ளதால் மழை காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்காய்ச்சல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இந்த நோய்களின் தாக்கம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில சிங்கம்புணரி, அழகமாநகரி மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் கலெக்டர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரூ.87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விபத்து சிகிச்சை பிரிவு இன்னும் 2 மாதத்தில் செயல்படும். மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்புவனம் மன்னர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 29). திருமணமாகாத இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து அவரது தந்தை திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதில், திருமணமாகாத ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில், மகேந்திரன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காரைக்குடி அருகே உள்ள கூத்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை. இவருடைய மகன் சின்ராசு (வயது 23). இவர் காரைக்குடியில் உள்ள கார், மோட்டார் சைக்கிள் வாஷ் செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் சின்ராசு உள்பட அவருடைய நண்பர்கள் 3 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் காரைக்குடிக்கு வந்தனர்.
அப்போது கோவிலூர் வாகன சோதனைச் சாவடி அருகில் வந்த போது, அங்கு பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், 3 பேரையும் சோதனைச் சாவடியில் அமர வைத்தனர்.
அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் சின்ராசு, திடீரென எழுந்து சோதனைச் சாவடி அருகில் இருந்த தனியார் செல்போன் கோபுரத்தில் வேகமாக ஏறத் தொடங்கினார். சுமார் 150 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு தன்னை யாராவது காப்பாற்ற முயன்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது.
தகவலறிந்து வந்த காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாபன், குன்றக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் உள்ளிட்ட போலீசார், காரைக்குடி தீயணைப்பு படை வீரர்கள் ஆகியோர் வாலிபர் சின்ராசுவிடம் சமரசமாக பேசி, அவரை கீழே இறங்க செய்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கிய வாலிபரை போலீசார் குன்றக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் குடிபோதை மற்றும் மோட்டார் சைக்கிளின் ஆவணங்கள் இல்லாததால் போலீசாருக்கு பயந்து செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபருக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்புவனம் மன்னர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 29). திருமணமாகாத இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து அவரது தந்தை திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதில், திருமணமாகாமல் ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில், மகேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். #tamilnews
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணியஸ்தலமாக உள்ள ராமேசுவரத்திற்கு மானாமதுரையில் இருந்து தான் பிரிந்து செல்ல வேண்டும்.
மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது மானாமதுரையில் இருந்தும், மானாமதுரை வழியாக இந்தியா முழுவதும் ஏராளமான ரெயில்கள் ராமேசுவரத்திற்கு இயக்கப்பட்டன.
அகல ரெயில்பாதை வசதி வந்தவுடன் பல ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. ராமேசுவரம் -பாலக்காடு மற்றும் கோவைக்கு பழனி, பொள்ளாச்சி வழியாக ரெயில் இயக்கப்பட்டது. இப்போது இல்லை.
ராமேசுவரம்-கோவை இடையே திருச்சி, கரூர், ஈரோடு வழியாக வாரம் ஒரு ரெயில் மட்டுமே வெகுதூரம் சுற்றிச் செல்லும் நிலையில் விடப்பட்டு உள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு புதிதாக விடப்பட்ட 3 ரெயில்களும் ராமேசுவரம், மானாமதுரை, திருச்சி, கும்பகோணம், விழுப்புரம் ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது.
தற்போது பண்டிகை கால சிறப்பு ரெயில்களில் சென்னை-ராமேசுவரம் மார்க்கத்தில் உள்ள புதுக்கோட்டை, காரைக்குடி, சிவங்கங்கை மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக எந்தவித சிறப்பு ரெயிலும் இயக்கப்படாததால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமேசுவரம்-சென்னை இடையே முன்பதிவு இல்லாத அந்தியோதயா சிறப்பு ரெயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை-பழனி வழியாக கோவை, பாலக்காடு வரை புதிய ரெயில்கள் விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






