என் மலர்tooltip icon

    சிவகங்கை

    டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ள வீடு, கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சிவகங்கை:

    மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலக அரங்கில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:- டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையினருடன் அனைத்து துறைகளும் இணைந்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்வதுடன் வீடு, தெருக்கள், வார்டு, கிராமம் மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய நகராட்சிப் பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகராட்சி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு மேற்கொள்வதுடன், காய்ச்சல் கண்காணிப்பு, கொசுப்புழு ஒழிப்பு, புகைமருந்து அடிக்கும் பணிகள், அபேட் மருந்து தெளிக்கும் பணி, குளோரின் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்திட வேண்டும். குடிநீர் குழாய் கசிவை உடனடியாக சரிசெய்தல் வேண்டும்.

    டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் வைத்திருக்கும் வீடு, கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதித்தும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    ஆய்வு என்பது தினமும் நடைபெற வேண்டும். அதன் அறிக்கைகளை துறைத்தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் மரு.விஜயன் மதமடக்கி, துணை இயக்குனர் மரு.யசோதாமணி, உதவி இயக்குனர் விஜயநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    சுற்றுச் சூழலை வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
    மானாமதுரை:

    மும்பையை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து சைக்கிள் கிளப் ஆரம்பித்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலத்திற்கு சைக்கிளில் சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதையடுத்து இந்த ஆண்டு அந்த இளைஞர்கள் சார்பில் மும்பையில் இருந்து ராமேசுவரத்திற்கு சுற்றுச்சூழலின் அவசியம் குறித்தும், அவற்றை பாதுகாப்பது நமது கடமை என்றும் வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து ஜூடு டிசைசா என்பவர் தலைமையில் 5 இளைஞர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் கர்நாடக மாநிலம் வழியாக தமிழகம் வந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு திரு ப்புவனம் வழியாக மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை மானாமதுரை மார்க்கமாக ராமேசுவரம் சென்றனர்.

    மானாமதுரையில் இளைஞர்கள் கூறியதாவது:- அதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களால் தற்போது காற்று மாசுபட்டு வருகிறது. மும்பை நகரில் ஏற்பட்ட அதிகஅளவு மாசு காரணமாக அப்பகுதி மக்கள் தற்போது அதிகஅளவில் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த உலகில் பிறந்த மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தை நேசிப்பது போல் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் நேசிக்க வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் இந்த பிரசார பயணத்தை தொடங்கி உள்ளோம்.

    ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் நாங்கள் இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளோம். காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் எங்களைப் போல் இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மக்களிடையே உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எங்க ளது விழிப்புணர்வு பிரசாரத்தை ராமேசுவரத்தில் முடித்து விட்டு மீண்டும் சைக்கிளில் மும்பை செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மும்பையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர்கள் இதுவரை 1,746 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர்.
    திருப்பத்தூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தரியம்பட்டியை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மகன் ரேபக் (வயது 18). கூலித்தொழிலாளி. ரேபக் பூலாங்குறிச்சியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    பழைய காட்டாம்பூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் ரேபக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரேபக்கின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரேபக்கின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.

    குடும்பத்தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகா புரியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக பெரியநாயகி (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி சேகர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெரியநாயகி தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடப்பதாக பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெரிய நாயகியை சேகர் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. சேகரை கைது செய்த போலீசார், பெரியநாயகியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி மேல்நிலைபள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    எஸ்.புதூர்:

    எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி மேல்நிலைப்பள்ளி 1990-ல் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு 217 மாணவிகள் மற்றும் 271 மாணவர்கள் என மொத்தம் 482 பேர் படித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 20 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தநிலையில் பள்ளி நடைபெறும் போது அந்த பகுதியில் சுற்றிதிரியும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் பள்ளியின் உள்ளே நுழைந்து விடுகின்றன.

    இதனால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதோடு, மதிய உணவு இடைவேளையின் போது மாணவ-மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் பள்ளியில் சுற்றுச்சுவர் கிடையாது என்பது தான். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாராமாகவும் மாறி வருகிறது.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு பல முறை தெரிவிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் விடுமுறை நாட்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

    மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பு கருதியும், அரசுப்பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை மாவட்டத்திலும் திடீர் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #Dengue
    சிவகங்கை:

    தமிழகம் முழுவதும் தற்போது காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்திலும் திடீர் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் தாயமங்கலம் ஷண்மிகா (வயது 3) பாகனேரியை சேர்ந்த கவின்(10) இடையமேலூரை சோந்த ஆறுமுகம் ஆகிய 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பத்தூரில் பணம் கொடுக்க மறுத்த தந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 65). ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இவரது மகன் ராஜ்குமார் (37). இவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டு அடிக்கடி தனது தந்தை மனோகரனிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி ராஜ்குமார் தனது தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது மனோகரன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தனது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

    பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீசில் சரணடைந்தார். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிந்து கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் ராஜ்குமார் ஜாமீனில் வெளியேவந்தார்.

    அவரது வீட்டின் எதிரே உள்ள காசி என்பவரது வீட்டில் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்கி படித்து வருகின்றனர்.

    நேற்று அவர்கள் வெளியில் சென்ற நேரத்தில் ராஜ்குமார் அவர்களது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், மாலையில் மாணவர்கள் அறைக்கு வந்து பார்த்தபோது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இறந்த ராஜ்குமார் வேலூர் மத்திய சிறையில் சைக்கோ போல் செயல்பட்டு வந்ததால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் திருப்பத்தூர் பகுதிகளில் சைக்கோ போல் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாராம்.

    தற்போது தனது வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒரு மாதம் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதையொட்டி 36 வாகனங்களில் மருத்துவ குழுவினர் கிராமம் கிரமமாக சென்று மருத்தவ பரிசோதனை செய்ய உள்ளனர். முகாம் தொடக்க விழா சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். சுகாதரத்துறை இணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி வரவேற்றார்.

    இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:- மழைக்காலம் தொடங்க உள்ளால் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கொசுக்கள் பரவாமல் தடுக்க உள்ளாட்சித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது இவர்களுடன் மருத்துவ துறையும் இணைந்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்ய 36 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் மருந்தாளுனர் மற்றும் சமுதாயநல செவிலியர் ஆகியோர் இருப்பார்கள்.

    இவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று முகாமிட்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து வழங்குவார்கள். இந்த முகாம் ஒரு மாதம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், பூச்சியல் வல்லுனர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் மோகன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கானாடுகாத்தான், மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    மானாமதுரை:

    மானாமதுரை பேரூராட்சியில் ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி பார்த்திபனூர் ரஸ்தா, கடைவீதி, அண்ணாசிலை வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், மகளிர்சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய விழிப்புணர்வு குறித்து ஆட்டோ, மைக்செட் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. பேரூராட்சி பரப்புரையாளர்கள் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக ஊர்வலத்தை மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் சகர்பான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜான்முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பாலசுப்பிரமணியன், குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    கானாடுகாத்தான் பேரூராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்.சிடி.எம். மேல்நிலைப் பள்ளி மற்றும் சிவி.சிடி.வி. மீனாட்சி ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், பேரூராட்சிகள் மூலம் வாகன விளம்பரம் செய்து பொது மக்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் இருந்து திண்டுக்கல் சாலை வழியாக சிங்கம்புணரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளிக்கு ஊர்வலம் வந்தனர். சிங்கம்புணரி தேர்வு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், இளநிலை உதவியாளர் ஹபீப் ராஜா ஆகியோர் ஊர்வலத்தை தொடக்கி வைத்தனர். பேரூராட்சி அதிகாரி சேரல தரன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், துணை மேற்பார்வையாளர் தென்னரசு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் ஆய்வாளர்கள் மதியரசன், எழில்மாறன், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் அன்பு உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கலந்து கொண்டார்.

    திருப்புவனம் யூனியனை சேர்ந்த மடப்புரத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் யூனியன் ஆணையாளர் முத்துக்குமார், மேலாளர் சுகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், ஊராட்சி எழுத்தர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல திருப்புவனம் யூனியனை சேர்ந்த 45 ஊராட்சிகளிலும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஜஹாங்கீர் உள்பட அலுவலகப்பணியாளர்கள் செய்திருந்தனர். 
    மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #MaruthuPandiyar
    திருப்பத்தூர்:

    சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 217-ம் ஆண்டு நினைவுதினம் திருப்பத்தூரில் நேற்று அரசு விழாவாக நடைபெற்றது. இதையொட்டி மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர் ராமசாமி தலைமையில் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராசு, ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், மணிகண்டன் ஆகிய 7 அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கோகுல இந்திரா, பி.ஆர். செந்தில்நாதன் எம்.பி., சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆவின் தலைவர் கே.ஆர்.அசோகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



    முன்னதாக திருப்பத்தூர் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.நாகராஜன், கரு.சிதம்பரம், புதுத்தெரு முருகேசன், வக்கீல் ராஜசேகர், ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஜெயலலிதா பேரவை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மேலும் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தி.மு.க. மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, கே.எஸ்.நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், மாணிக்கம், நெடுஞ்செழியன், நகர செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புராம், ராம.அருணகிரி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், பாபா அமீர்பாதுஷா, வட்டார தலைவர் பன்னீர்செல்வம், நகர தலைவர் திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், பாண்டியன், கோட்டையிருப்பு கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், மாணவ-மாணவிகள், சமுதாய பிரமுகர்கள் கலந்துகொண்டு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    மருதுபாண்டியர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.
    சிவகங்கை:

    மருதுபாண்டியர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர முழக்கமிட்டதுடன், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் மருது பாண்டியர். மருதுபாண்டியரின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 24-ந்தேதி மருதுபாண்டியர் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அரசு சார்பில் குருபூஜை விழா நடைபெற உள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது.

    மருது பாண்டியர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் பாதுகாப்புடன் மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று(நேற்று) முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடவோ, பேசவோ கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மருதுபாண்டியர்கள் நினைவுதினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர்:

    சுதந்திர போராட்டத்தின் போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மன்னர்கள் சின்ன மருது, பெரிய மருது ஆகியோர் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்து வந்தனர். மருதுபாண்டியர்களின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந்தேதி மருதுபாண்டியர்கள் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூரில் உள்ள மணி மண்டபத்தில் அரசு சார்பில் நாளை(புதன்கிழமை) அரசு விழா நடைபெற உள்ளது. இதேபோல் வருகிற 27-ந் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதையடுத்து திருப்பத்தூரில் நடைபெற உள்ள விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையி ட்டு ஆய்வு செய்தார். மணிமண்டபத்தில் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களிடம் விழா குறித்து கேட்டறிந்தார். இதுதவிர விழாவின்போது போக்குவரத்து வழித் தடங்கள், பாதுகாப்புப் பணிகள், பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கான நேரம் ஒதுக்கீடு குறித்து கேட்டறிந்தார்.

    தென் மண்டல ஐ.ஜி. ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, செயல் அலுவலர் முருகன், தி ருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர்கள் பொன்ரகு, கீதா மற்றும் துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, வருவாய் ஆய்வாளர் பழனிக் குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியர் வாரிசுதாரர் குழுத் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து திரு ப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் அவரது நினைவு ஸ்தூபியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ×