என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் நடந்தது.
    சிவகங்கை:

    நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் நடந்தது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் காரைக்குடி தொகுதியில் 1,976 பேரும், திருப்பத்தூர் தொகுதியில் 2,543, பேரும், சிவகங்கை தொகுதியில் 2,662 பேரும்,, மானாமதுரை (தனி) தொகுதியில் 3,464 பேரும் சேர்த்து மொத்தம் 10,645 பேர் உள்ளனர்.

    இதே போல் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் காரைக்குடி தொகுதியில் 7,581 பேரும், திருப்பத்தூர் தொகுதியில் 6,820, பேரும்,, சிவகங்கை தொகுதியில் 8,624 பேரும், மானாமதுரை(தனி) தொகுதியில் 5,827 பேரும் சேர்த்து மொத்தம் 28,852 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டு போட விண்ணப்பம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் மறுவீட்டிற்கு புறப்பட்டனர். மாப்பிள்ளை வீட்டான மாரியம்மன் நகருக்கு அவர்கள் மீன்பாடி வண்டியில் 10 கிலோமீட்டர் தூரம் சென்றனர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியப்பன் நகரில் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கழைக் கூத்தாடுவது, சர்க்கஸ் செய்வது இவர்களின் பிராதன தொழிலாக இருந்துவருகிறது.

    மானாமதுரை பகுதியில் உள்ள கங்கை அம்மன் குடியிருப்பு, மாரியம்மன் நகர், சன்னதி புதுக்குளம் பகுதியில் பெரும்பாலான கழைக் கூத்தாடிகள் வசித்து வருகின்றனர்.

    இதனிையே இந்த தொழிலை செய்து வரும் சன்னதிபுதுகுளத்தை சேர்ந்த சுப்பையா மகள் அம்சவல்லிக்கும், மாரியப்பன் நகரை சேர்ந்த கணேஷ் மகன் விஜய்க்கும் திருமணம் நடை பெற்றது.

    திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் மறுவீட்டிற்கு புறப்பட்டனர். மாப்பிள்ளை வீட்டான மாரியம்மன் நகருக்கு அவர்கள் மீன்பாடி வண்டியில் 10 கிலோமீட்டர் தூரம் சென்றனர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

    இதுகுறித்து மணமகனின் உறவினர்கள் கூறுகையில் ‘பெண் வீட்டில் வரதட்சணை என்பது கிடையாது. நாங்கள் யாரும் வாங்க மாட்டோம். சர்க்கஸ் வருமானம் மட்டுமே.

    பெண்ணுக்கு எங்களால் முடிந்த நகைகளை போட்டு நாங்கள் திருமணம் செய்து கூட்டி வருவோம். ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் அழைத்து சென்ற காலம் போய் தற்போது நவீன காலத்தில் குதிரை வண்டியிலும், கார்களிலும் அழைத்து செல்வது வழக்கம். எங்கள் வசதிக்கு ஏற்ப மீன்பாடி வண்டியில் அழைத்து வருவோம். இருப்பதே வைத்து மகிழ்ச்சி அடைகின்றோம் என்றனர்.

    இதுகுறித்து மாப்பிள்ளை விஜய் கூறும்போது, ‘இந்த வண்டியில் வருவது தான் மகிழ்ச்சி என்றாலும் ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் கையில் இழுத்து செல்லுவோம். ஆனால் தற்போது காலம் மாறியதால் நாங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் மீன்பாடி வண்டியில் ஊர்வலமாக வருகிறோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

    காரைக்குடி வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் என்ஜின் கோளாறு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் இருந்து சுமார் 150 நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை கோவிலூர் நெல்குடோனுக்கு சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி காரைக்குடி வாட்டர் டேங்க் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    உடனே லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதை நிறுத்தி விட்டு தப்பினார். இதுகுறித்து காரைக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. லாரியில் இருந்த 150 நெல் மூட்டைகளும் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் என்ஜின் கோளாறு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
    வீட்டை விட்டு ஓடியதால் கள்ளக்காதல் ஜோடி அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மானாமதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள மனச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன் (வயது 30). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிளாங்காட்டூரைச் சேர்ந்த வளர்மதி (24) என்பவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், ஆகாஷ் (3) என்ற மகனும் உள்ளனர்.

    சத்தியேந்திரன் திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவியையும், குழந்தைகளையும் பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி வளர்மதி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    விசாரணையில் வளர்மதிக்கும், மனச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் (20) என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு 2 பேரும் ஊரை விட்டு ஓடியது தெரியவந்தது. அவர்கள் திருச்சி தாராநல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

    கள்ளக்காதல் ஜோடியை சத்தியேந்திரன் மற்றும் வளர்மதியின் சகோதரர் ராமையா என்ற மணிகண்டன் ஆகியோர் தேடி வந்தனர்.

    அவர்கள் திருச்சியில் இருப்பதை அறிந்து சத்தியேந்திரன், அவரது தம்பி பிரபு, ராசையா மற்றும் உறவினர் காட்டுராஜா, தனசேகர் ஆகியோர் திருச்சி சென்றனர்.

    அங்கு வேல்ராஜை சரமாரியாக தாக்கி விட்டு வளர்மதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த வேல்ராஜை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் சத்தியேந்திரன், பிரபு உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் காட்டுராஜா மற்றும் தனசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வளர்மதியை சந்தித்து உன்னால்தான் நாங்கள் கொலை வழக்கில் சிக்கி விட்டோம் என கூறி தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளால் வளர்மதியை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்த மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று வளர்மதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக காட்டுராஜா, தனசேகர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    சிவகங்கை:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மேலும் பணநடமாட்டத்தை கட்டுப்படுத்த பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமனம் செய்து தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சிவகங்கையை அடுத்த இலந்தங்குடிபட்டி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த மொபட்டை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மொபட்டை ஓட்டிவந்த காரைக்குடியை அடுத்த கோட்டையூரை சேர்ந்த வைரவபிரகாஷ் என்பவரிடம் ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரிடம் பணத்துக்கான ஆவணங்கள் இல்லை.

    இதை தொடர்ந்து ரூ.17 லட்சத்து 19 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தொகை சிவகங்கை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    காங்கிரஸ் கட்சியில் என்னைப் பொறுத்தவரை எளிய தொண்டனாகவே பணியாற்ற விரும்புகிறேன் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.
    காரைக்குடி:

    முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறியதாவது, 

    தமிழகத்தில் அதிமுக- திமுக இடையேதான் போட்டி. 3-வது அணியில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக- திமுக இடையே மட்டுமே போட்டி என்பதால், இது நடிகர் கமல்ஹாசன் உட்பட அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. 

    காங்கிரசில் என்னைப் பொறுத்தவரை எளிய தொண்டனாகவே பணியாற்ற விரும்புகிறேன். நமக்கு அணுக்கமான அரசை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். தபால் வாக்களிக்கும் முறையில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
    சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை மறுதினம் (8-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வின் விநியோகம் இருக்காது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை மறுதினம் (8-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 

    எனவே சிங்கம்புணரி பகுதிகளான எஸ்.வி.மங்கலம், காளாப்பூர், பிரான்மலை, உள்ளிட்ட ஊர்களின் சுற்றுவட்டார கிராமங்களில் 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. 

    இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்து உள்ளார்.
    மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    மானாமதுரை:

    மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் வினோத்ராஜ், மணி. இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் இவர்கள் 2 பேரும் மானாமதுரை கோர்ட்டு எதிரில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

    இதில் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வினோத்ராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதத்திணல் இந்த கொலை நடந்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காட்டைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (வயது 23) என்பவர் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அவருக்கு மானாமதுரை போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதன் அடிப்படையில் அக்னிராஜ் தினமும் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

    இன்றும் அவர் வழக்கம் போல் கையெழுத்திடுவதற்காக மானாமதுரை வந்தார். இன்று மதியம் 11 மணியளவில் போலீஸ் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபம் அருகே அக்னிராஜ் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அக்னிராஜை வழிமறித்தது. மேலும் அந்தப்பகுதி மக்களை அரிவாளால் மிரட்டி இங்கிருந்து செல்லுங்கள் என அந்த கும்பல் கூறியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அக்னிராஜை சரமாரியாக வெட்டினர்.

    தன்னை காத்துக் கொள்ள அவர் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை துரத்திச் சென்று தலையில் சரமாரியாக வெட்டியது.

    இதில் அக்னிராஜ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பியது.

    பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    கடந்த மாதம் நடந்த கொலையில் பழிக்கு பழியாக அக்னிராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    பொதுத்தேர்தலில் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறும்படம் மூலம் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
    சிவகங்கை:

    100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.

    சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறும்படம் மூலம் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை சிவகங்கை பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற நிலைப்பாட்டை உறுதிசெய்யும் விதமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில் செய்தித்துறையின் மூலம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அகன்ற மின்னணு திரை கொண்ட வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகளவு கூடுமிடங்களுக்கு சென்று தேர்தல் நாளன்று கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பது ஜனநாயகத்தின் முதல் கடமை. அன்றைய தினம் தவறாமல் வாக்களிப்போம். மற்றவர்களுக்கும் நினைவூட்டுவோம் என்ற தொகுப்புகளுடன் கூடிய படங்கள் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி அரண்மனைவாசல் பகுதியில் பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். பின்னர் சிவகங்கை பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறி அங்கிருந்த பயணிகளிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதையடுத்து சிவகங்கை நகர் அரண்மனைவாசல் பகுதியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயக்குமார், நகராட்சி ஆணையர் .அய்யப்பன், வட்டாட்சியர்கள் தர்மலிங்கம், ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.

    மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    சிவகங்கை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. வருகிற 12-ந்தேதி வேட்பாளர்களின் மனு தாக்கல் தொடங்க உள்ளது. இதனால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பை அடைந்து உள்ளன.

    சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நிலையான குழுவினர் நியமிக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வாக்களிக்க உள்ளனர் ‌. இதற்காக சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மற்றும் மானாமதுரை(தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் உள்ள 1,679 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்த தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

    அதோடு சிவகங்கை பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் நேற்று நடைபெற்றது. இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவிபேட் எந்திரத்தின் செயல் முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து சிறப்புரையாற்றினார். இந்த எந்திரம் மூலம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்து உள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். புதிய வாக்காளர்கள் இந்த எந்திரத்தின் மூலம் வாக்களித்து செயல் முறைகளை தெரிந்து கொண்டனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு அதன் செயல்பாட்டை கண்டறிந்தனர்.

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர் செல்வம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் மளிகை கடனையும் ரத்து செய்து இருப்பார் எடப்பாடி பழனிசாமி என்று ப.சிதம்பரம் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்று மதியம் 3 மணிக்கே அவசரம், அவசரமாக பேனா, பென்சில் எடுத்து கடன் தள்ளுபடி அறிவிப்பை எழுதி அறிவித்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் மளிகை கடன் ரத்து, நண்பர்களிடம் வாங்கிய கைமாற்று கடன் ரத்து எனவும் அறிவித்திருப்பார்.

    எத்தனை மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன, எத்தனை ஆயிரம் கோடி கடன் கொடுக்கப்பட்டது, அதில் முதல் எவ்வளவு, நிலுவை எவ்வளவு, வட்டி எவ்வளவு என்று எதுவும் தெரியாமலும் தொகை ஒதுக்கீடு செய்யாமலும் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டார்.

    பட்ஜெட் 5 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்து விட்டார்கள். கணக்கு எல்லாம் முடித்து விட்டார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் கடன் தள்ளுபடி என்று அறிக்கை விடுகிறார். கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி என்கிறார். எத்தனை ஆயிரம் பேருக்கு, எத்தனை லட்சம் பேருக்கு, எவ்வளவு கோடி கடன் தள்ளுபடி என தொகையை ஒதுக்காமல் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் அறிவிப்பாகும். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் வெற்றுப் பேச்சு. அ.தி.மு.க. அரசு வெற்றி நடை போடும் அரசு அல்ல, வெற்றுப் பேச்சு அரசு.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சிவகங்கை அருகே 160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    சிவகங்கை:

    160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் கால கல்வெட்டை சிவகங்கை தொல்நடை குழுவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் கா.காளிராசா, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    சிவகங்கையை அடுத்த படமாத்தூர் சித்தாலங்குடியில் மகாராஜா கோவில் உள்ளது, இதில் வணங்கப்படுகிற கடவுள் சிவகங்கையை ஆண்ட முதல் ஜமீன் கவுரி வல்லப உடையண ராஜா (1801-1828) அல்லது அவரது மூதாதையராக இருக்கலாம். குதிரை மேல் அமர்ந்த வீரனைப் போன்ற அமைப்புடன் அணிகலன்கள் அணிந்து தலைப்பாகையுடன் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    இதே சிலை அமைப்புடன் சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியிலும் மகாராஜா கோவில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. படமாத்தூரில் இருக்கும் கவுரி வல்லவரை சிவகங்கை அரண்மனையினர் குலசாமியாக வணங்குவதோடு அப்பகுதி மக்களும் தங்களது காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.படமாத்தூர் கவுரி வல்லவர் கோவிலில் சுற்றுமதில் வடக்குப் பகுதியில் சுவரின் அடியில் 9 வரிகளை கொண்ட ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.

    அந்த கல்வெட்டில் 1861-ம் ஆண்டு துன்மதி வருஷம் வைகாசி மாதம் 26-ம் நாள் மகாராஜா சத்ரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டைக்குச் செல்லும்போது படமாத்தூரில் இருக்கும் இஷ்ட குல தெய்வமான வல்லவ சாமியிடம் செய்து கொண்ட பிரார்த்தனையின் படிக்கு புலியை குத்தியதாலே இந்த திருமதிலைக் கட்டினது என எழுதப் பெற்றுள்ளது.

    கல்வெட்டில் உள்ள காலத்தைக்கொண்டு இவர் சிவகங்கையின் ஐந்தாவது ஜமீனான இரண்டாம் போத குருசாமி மகாராஜா (1848-1865) என உறுதி செய்ய முடிகிறது. மேலும் 160 ஆண்டுகள் பழமையான சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியை தோற்றுவித்த கல்வி வள்ளலும் இவரே ஆவார். இவரது சிலை சிவகங்கை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது சிறப்பாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ×