என் மலர்
செய்திகள்

மானாமதுரையில் இன்று போலீஸ் நிலையம் அருகில் வாலிபர் வெட்டிக் கொலை
மானாமதுரை:
மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் வினோத்ராஜ், மணி. இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த மாதம் இவர்கள் 2 பேரும் மானாமதுரை கோர்ட்டு எதிரில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.
இதில் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வினோத்ராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதத்திணல் இந்த கொலை நடந்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காட்டைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (வயது 23) என்பவர் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு மானாமதுரை போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதன் அடிப்படையில் அக்னிராஜ் தினமும் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இன்றும் அவர் வழக்கம் போல் கையெழுத்திடுவதற்காக மானாமதுரை வந்தார். இன்று மதியம் 11 மணியளவில் போலீஸ் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபம் அருகே அக்னிராஜ் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அக்னிராஜை வழிமறித்தது. மேலும் அந்தப்பகுதி மக்களை அரிவாளால் மிரட்டி இங்கிருந்து செல்லுங்கள் என அந்த கும்பல் கூறியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அக்னிராஜை சரமாரியாக வெட்டினர்.
தன்னை காத்துக் கொள்ள அவர் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை துரத்திச் சென்று தலையில் சரமாரியாக வெட்டியது.
இதில் அக்னிராஜ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பியது.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த மாதம் நடந்த கொலையில் பழிக்கு பழியாக அக்னிராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.






