search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கிராம மக்களுடன் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.
    X
    கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கிராம மக்களுடன் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    சிவகங்கை அருகே 160 ஆண்டு கால பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

    சிவகங்கை அருகே 160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    சிவகங்கை:

    160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் கால கல்வெட்டை சிவகங்கை தொல்நடை குழுவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் கா.காளிராசா, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    சிவகங்கையை அடுத்த படமாத்தூர் சித்தாலங்குடியில் மகாராஜா கோவில் உள்ளது, இதில் வணங்கப்படுகிற கடவுள் சிவகங்கையை ஆண்ட முதல் ஜமீன் கவுரி வல்லப உடையண ராஜா (1801-1828) அல்லது அவரது மூதாதையராக இருக்கலாம். குதிரை மேல் அமர்ந்த வீரனைப் போன்ற அமைப்புடன் அணிகலன்கள் அணிந்து தலைப்பாகையுடன் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    இதே சிலை அமைப்புடன் சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியிலும் மகாராஜா கோவில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. படமாத்தூரில் இருக்கும் கவுரி வல்லவரை சிவகங்கை அரண்மனையினர் குலசாமியாக வணங்குவதோடு அப்பகுதி மக்களும் தங்களது காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.படமாத்தூர் கவுரி வல்லவர் கோவிலில் சுற்றுமதில் வடக்குப் பகுதியில் சுவரின் அடியில் 9 வரிகளை கொண்ட ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.

    அந்த கல்வெட்டில் 1861-ம் ஆண்டு துன்மதி வருஷம் வைகாசி மாதம் 26-ம் நாள் மகாராஜா சத்ரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டைக்குச் செல்லும்போது படமாத்தூரில் இருக்கும் இஷ்ட குல தெய்வமான வல்லவ சாமியிடம் செய்து கொண்ட பிரார்த்தனையின் படிக்கு புலியை குத்தியதாலே இந்த திருமதிலைக் கட்டினது என எழுதப் பெற்றுள்ளது.

    கல்வெட்டில் உள்ள காலத்தைக்கொண்டு இவர் சிவகங்கையின் ஐந்தாவது ஜமீனான இரண்டாம் போத குருசாமி மகாராஜா (1848-1865) என உறுதி செய்ய முடிகிறது. மேலும் 160 ஆண்டுகள் பழமையான சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியை தோற்றுவித்த கல்வி வள்ளலும் இவரே ஆவார். இவரது சிலை சிவகங்கை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது சிறப்பாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×