என் மலர்
சிவகங்கை
மானாமதுரை அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
மானாமதுரை ரெயில்வே நிலையம் பின்புறம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த கிளங்காட்டூரைச் சேர்ந்த ரவுடி அன்பழகன், அமர்நாத், விக்கி என்ற பாம்பு விக்கி, சுரேஷ்பாண்டியன், ரமேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 5 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
குண்டும்-குழி சாலையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கல்லல்:
காளையார்கோவில் ஒன்றியம் பாகனேரி செக்கடி கண்மாயில் இருந்து இலந்தமங்கலம் செல்லும் 2 கிலோ மீட்டர் சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.இந்த சாலை வழியாக பாகனேரி, மாங்காடுபட்டி, கோவினிப்பட்டி பகுதியில் இருந்தும் சிவகங்கை, கண்டுபட்டி ,காளையார்கோவில் செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். குண்டும்-குழி சாலையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்த 659 வாக்காளர்களுக்கு சிறப்பு முகாமில் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
கடந்த 2021-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையினை e-EPIC செயலி மூலம் பதிவிறக்கம் செய்ய நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.
காளையார்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார். அங்கு புதிய வாக்காளர்கள் அடையாள அட்டை பெறுவதை பார்வையிட்டு விசாரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத்திருத்தத்தின்போது புதிய வாக்காளர்கள் படிவம்-6-ல் கொடுக்கப்பட்ட கைப்பேசி எண்ணைக் கொண்டு வரும் 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் தங்கள் எல்லைக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் தங்களது வாக்காளர் புகைப்பட அட்டையினை பதிவிறக்கம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
இந்த முகாமில் 2 நாட்களில் காரைக்குடி தொகுதியில் 196 இளம் வாக்காளர்களும், திருப்பத்தூர் தொகுதியில் 150 பேரும், சிவகங்கை தொகுதியில் 168 பேரும், மானாமதுரை தொகுதியில் 145 பேர் என மொத்தம் 659 பேர் புதியதாக வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நான்கு முறை அதிக வெற்றி பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவரை அதிமுக களம் இறக்க, திமுக முன்னாள் அமைச்சரை களம் இறக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்மணக்கும் தொகுதியாகும். இங்கு உலக புகழ்மிக்க மண்பாண்ட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடம் இசை கருவி மானாமதுரை மண்ணில் செய்யப்பட்டு உலகம் முழுவதும் கர்நாடக இசை கலைஞர்களால் வாசிக்கப்படுகிறது.
இந்த தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் சம அளவில் உள்ளனர். 1952 முதல் 3 முறை காங்கிரஸ் கட்சியும், சுதந்திரா கட்சி 2 முறையும், தி.மு.க. கூட்டணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிக முறை அ.தி.மு.க. வெற்றி கண்டுள்ளது.
2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல், 2019 இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நெட்டூர் எஸ். நாகராஜனே தற்போது மீண்டும் களம் காண்கிறார். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2011-ம் ஆண்டு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். 2006-ம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இந்த தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி போட்டியிடுகிறார்.
மானாமதுரை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,26,144. பெண் வாக்காளர்கள் 1,28,131. மொத்தம் 2,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.
மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மானாமதுரை, திருப்புவனம், இளையான் குடி ஆகிய தாலுகாக்களும், ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த ஜங்சன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக மானாமதுரை உள்ளது.
1952-ல் இருந்து 1971 வரை பொது தொகுதியாகவும், 1977-ல் இருந்து இப்போது (2021) வரை தனி தொகுதியாகவே உள்ளது. 2011-ல் தொகுதி மறு சீரமைப்பில் இளையான்குடி தொகுதியும் மானாமதுரையோடு சேர்க்கப்பட்டது. மானாமதுரை தொகுதியில் தனியார் கல்லூரிகள் மட்டும் உள்ளது. அரசு கல்லூரிகள் ஏதும் கிடையாது. கடந்த 4 சட்டமன்ற தேர்தலிலும் வாக்கு கொடுக்கப்படுகிறது தவிர இதுவரை அரசு கல்லூரிகள் வரவில்லை.
வானம் பார்த்த மானாமதுரையில் மிக முக்கிய தொழில் விவசாயம் ஆகும். ராமபிரான், அனுமனுக்கு உபதேசம் செய்த புண்ணிய பூமி மானாமதுரை ஆகும். கங்கை போல் வைகை நதி வடக்கு தெற்காக பாயும் இடத்தில் மானாமதுரை உள்ளது.
தமிழகத்தில் விவேகானந்தர் சொற்பொழிவு நிகழ்த்திய இடமாக மானாமதுரை உள்ளது. சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள் பிறந்து வாழ்ந்த இடம் மானாமதுரை தொகுதியில் உள்ள கட்டிக்குளத்தில் உள்ளது. அனைவரும் வந்து செல்லும் ஆன்மீக பகுதியாக மானாமதுரை திகழ்ந்து வருகிறது.
இதேபோல் மானாமதுரை பூர்விக வைகை பாசன பகுதியாகும். இங்கு விவசாயிகளுக்கான வைகை நீர் கிடைப்பது மிக அரிதாக உள்ளது. இந்தப்பகுதியில் வசிக்கும் பலர் மதுரை சென்றுதான் வேலை செய்து வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் எஸ். நாகராஜன், திமுக வேட்பாளர் தமிழரசி
மதுரை- மானாமதுரை தனி பஸ் போக்குவரத்து கிடையாது. ராமேசுவரம், பரமக்குடி, கமுதி பஸ்களில் மதுரைக்கு நின்று சென்று பயணிக்கும் நிலைமைதான் இன்றும் உள்ளது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மானாமதுரையில் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதில் வேலை வாய்ப்பை உருவாக்கும் எந்தவித பெரிய தொழிற்சாலைகள் இதுவரை வரவில்லை.
அதேபோல் திருப்புவனம் பகுதியில் இதுவரை பஸ் நிலையம் இல்லாதது மிக வேதனையாக உள்ளது. மிளகாய் விளைச்சலுக்கு பெயர் பெற்ற இளையான்குடி பகுதியில் மிளகாய் பதப்படுத்தும் தொழிற்கூடம், விவசாய பொருட்களை பாதுகாக்க குளிரூபட்டப்பட்ட வேளாண்மை மையம் ஏதும் இல்லாததால் விவசாய பொருட்களை உரிய விலையில் விற்பதற்கு விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மானாமதுரை தொகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் பூர்வீக பாசன பகுதியான மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி விவசாயிகளுக்கு முழுமையான நீர்பாசன வசதி விவசாய பொருட்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட நிலையங்கள், மதுரை- மானாமதுரை நேரடி அரசு பஸ், சிவகங்கை, சென்னைக்கு மானாமதுரையில் இருந்து கூடுதல் பஸ் போக்குவரத்து.
மானாமதுரை வைகை ஆற்றில் குடிநீர் திட்டத்துக்கு கூடுதல் தடுப்பணைகள், ஆன்மீக பகுதியான மானாமதுரை, தாயமங்கலம், மடப்புரம், கட்டிக்குளம், குறிச்சி, லாடனேந்தல், திருப்புவனம் பகுதியில் நவீன சுகாதார வளாகங்கள், பக்தர்கள் தங்குமிடம் அமைக்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம் செய்து புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
2019 இடைத்தேர்தல்
நாகராஜன் (அ.தி.மு.க. வெற்றி)- 85228
காசிலிங்கம் (தி.மு.க.)- 77034
மாரியப்பன் கென்னடி (அ.ம.மு.க.)- 20395
சண்முகப்பிரியா (நாம் தமிழர்)- 9315
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-
1952- கிருஷ்ணசாமி (காங்கிரஸ்)
1957- சிதம்பர பாரதி (காங்கிரஸ்)
1962- சீமைச்சாமி (சுதந்திர கட்சி)
1967- சீமைச்சாமி (சுதந்திர கட்சி)
1971- சோனையா (தி.மு-.க.)
1977- பாரமலை (காங்கிரஸ்)
1984- பாரமலை (காங்கிரஸ்)
1989- துரைபாண்டி (தி.மு.க.)
1991- சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
1996- தங்கமணி (இ.கம்யூ.)
2001- பாரமலை (அ.தி.மு-.க.)
2006- குணசேகரன் (அ.தி.மு.க.)
2011- குணசேகரன் (அ.தி.மு.க.)
2016- மாரியப்பன் கென்னடி (அ.தி.மு.க.) தகுதி நீக்கம்
2019- நாகராஜன் (அ.தி.மு.க.) இடைத்தேர்தல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் பெரியகருப்பன் மூன்று முறை வெற்றி வாகை சூடியுள்ள நிலையில் 4-வது முறையாக களம் காண்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வழிபாட்டு தலங்களை மட்டும் கொண்ட ஒரு தொகுதியாக திகழ்ந்து வருகிறது. கடந்த கால் நூற்றாண்டு மேல் இத்தொகுதியானது தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது.
தொகுதியானது தி.மு.க.வின் கோட்டையாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 290647, ஆண்கள் 142327, பெண்கள் 148308, மூன்றாம் பாலினத்தவர் 12.
இங்கு முத்தரையர், யாதவர், தேவேந்திரகுல வேளாளர், முக்குலத்தோர் மற்றும் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர்.
திருப்பத்தூர் தொகுதியில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, கானாடுகாத்தான், பள்ளத்தூர் பேரூராட்சிகளும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல், சாக்கோட்டை யூனியன்களும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை பஞ்சாயத்துக்களும் அடங்கி உள்ளன.
திருப்பத்தூர் தொகுதி மாவட்டத்திலேயே வேலை வாய்ப்புகள் இன்றி பின்தங்கிய தொகுதியாக மக்களால் பார்க்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட இத்தொகுதியில் உலக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அதன் அருகிலேயே குன்றக்குடி மற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவராக சிறந்து விளங்கிய பாரி ஆண்ட பறம்பு மலை என்ற பிரான்மலை உள்ளது.
பிரான்மலை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் வழிபடும் வழிபாட்டு தலமாக உள்ளது. அதேபோல் தளக்காவூர் மாதா கோவிலும் இங்கு உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
திருப்பத்தூர் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வருவது காரைக்குடி- மதுரை ரெயில் போக்குவரத்து திட்டமாகும். இத்திட்டத்திற்காக மத்திய, மாநில அமைச்சர்கள் இடம் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் கோரிக்கையை இன்றளவும் வெறும் கனவாகவே இருந்து வருகிறது.
அதேபோல் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட ஆர்.ஓ. குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது திருப்பத்தூர் நகர மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகும்.
பத்திர பதிவிற்காக நெற்குப்பை பேரூராட்சி சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டையை சேர்ந்த பொன்னமராவதிக்கு சென்று பத்திரபதிவு மேற்கொள்ளும் அவல நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெற்குப்பை பேரூராட்சியிலேயே சார்பதிவாளர் அலுவலகம் அமைத்து தரும்படியான கோரிக்கையும், பஸ் நிலையம் அமைத்து தர வண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
சிங்கம்புணரி தாலுகாவை சேர்ந்த பிரான்மலை பூமி மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மாவட்டத்திலேயே மிகப்பெரிய மலையாக திகழ்ந்து வருகிறது. மலையின் உச்சியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமும் இந்துக்களின் வழிபாட்டுத் தலமும் இருந்து வருவதால் மலைக்கு அடிவாரத்தில் இருந்து சென்றுவர ரோப்கார் அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்பேட்டை நகரமாக சிறந்து விளங்கியது சிங்கம்புணரி. நாளடைவில் இங்கு இயங்கிவந்த தொழிற்சாலை இடம் மாற்றப்பட்டதால் அதில் வேலை பார்த்த மக்கள் பலர் வேலை இழக்க நேரிட்டது. எனவே முன்பு போல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டுவரவேண்டும். மேலும் இப்பகுதியில் தேங்காய் மட்டையைக் கொண்டு கயிறு, சாக்கு தயாரிப்பதற்கான மூலப்பொருள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கான மண் போன்ற தேங்காய் கழிவில் கிடைக்கும் இடுபொருள் போன்றவை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தேங்காய் மட்டையை கொண்டு தயாரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இப்பகுதியில் இயங்கி வருகிறது. எனவே இத்தொழிலை மேம்படுத்தும் வண்ணம் அரசே மிகப்பெரிய அளவில் உற்பத்தி தொழில் கூடங்களை இங்கு தொடங்கி அதன் மூலம் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்.
மக்களின் கோரிக்கைகள் இந்த தேர்தலிலாவது நிறைவேறுமா? என்பது வரபோகிற ஆட்சியாளர் கையில்தான் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
திமுக சார்பில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ள பெரியகருப்பன் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் மருது அழகுராஜ் களம் இறங்குகிறார்.
தேர்தல் வெற்றி
1952 முத்தையா (சுயேட்சை)
1967 மாதவன் (தி.மு.க.)
1971 மாதவன் (தி.மு.க.)
1977 சண்முகம் (இந்திய கம்யூ.)
1980 வால்மிகி (காங்கிரஸ்)
1984 மாதவன் (அ.தி.மு.க.)
1989 தென்னரசு (தி.மு.க.)
1991- கண்ணப்பன் (அ.தி.மு.க.)
1996 சிவராமன் (தி.மு.க.)
2001 உமாதேவன் (அ.தி.மு-.க.)
2006 கே.ஆர். பெரியகருப்பன் (தி.மு.க.)
2011 கே.ஆர். பெரியகருப்பன் (தி.மு.க.)
2016 கே.ஆர். பெரியகருப்பன் (தி.மு.க.)
திருப்பத்தூர் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் பனை மரத்தில் கார் மோதியதில் பாட்டி-பேத்தி பலியானார்கள்.
திருப்பத்தூர்:
தேனி மாவட்டம் வடுகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 51). இவர் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் புறப்பட்டு உள்ளார். காரை அவரது மருமகன் குருசாமி(36) ஓட்டினார்.
அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு பகுதியில் மொட்டை பிள்ளையார் கோவில் வளைவில் கார் வந்த போது திடீரென எதிர்பாராத விதமாக நாய் ஒன்று ரோட்டின் குறுக்கே ஓடி உள்ளது. இதனால் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார்.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் உள்ள பனைமரத்தில் மோதி பள்ளத்தில் பாய்ந்து நின்றது. காருக்குள் இருந்தவர்கள் அய்யோ! அம்மா! என அலறினார்கள். கார் கதவை திறக்கமுடியவில்லை.
இந்த நிலையில் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களும் கார் கதவை திறக்க முயன்றனர். அவர்களால் முடியவில்லை.
பின்னர் இது குறித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கார் கதவை உடைத்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர்.
விபத்தில் சண்முகசுந்தரம், அவரது மனைவி முத்துலெட்சுமி (45), மருமகன் குருசாமி மற்றும் இரண்டு மகள்கள், பேரன், பேத்திகள் என 9 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த 9 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமியும், 2 வயது குழந்தை சுபிக்ஷாவும் இறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பாட்டியும், பேத்தியும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை(தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதனும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாநில செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜூம், மானாமதுரை தனி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. நாகராஜனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர், இதையொட்டி மதுரையில் இருந்து வந்த 3 பேருக்கும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக்கட்சியான பா.ஜ.க.வினர் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட எல்லையான திருப்புவனத்தில் உள்ள சந்தை திடலில் 3 வேட்பாளர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பூவந்தி, திருமாஞ்சோலை, பில்லூர்விலக்கு, முத்துப்பட்டி, சிவகங்கை ரிங்ரோடு, ஆகிய இடங்களில் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் 3 பேரும் திறந்த ஜீப்பில் சிவகங்கை ரிங் ரோட்டில் இருந்து சிவகங்கை சிவன் கோவில் வரை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். வழி நெடுக ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அதன்பின்னர் 3 வேட்பாளர்களும் சிவகங்கை சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக அரண்மனை வாசல் வரை தொண்டர்கள் அழைத்து சென்றனர்.
அரண்மனை வாசலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, மற்றும் எம்.ஜி.ஆர்.உருவப்படத்திற்கு வேட்பாளர்கள் மாலை அணிவித்தனர்.
பின்னர் 3 வேட்பாளர்களும் திறந்த ஜீபபில் ஏறி நின்று தொண்டர்கள் மத்தியி்ல் பேசினார்கள். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசியதாவது:-
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதியில் அ.தி.மு.க.வும் ஒரு தொகுதியில் நமது கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் போட்டியிடுகிறது.
கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட 3 வேட்பாளர்களுக்கும் கொளுத்தும் வெயிலில் நீங்கள் அளித்த வரவேற்பில் இருந்து நமது வெற்றி உறுதி என தெரிகிறது. நமது கூட்டணி வெற்றி கூட்டணி. 4 ெதாகுதிகளிலும் நாம் வெற்றி பெறுேவாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர் செந்தில்நாதனுக்கு கொல்லங்குடி, மற்றும் காளையார் கோவில், மற்றும் புலியடிதம்மம் ஆகிய ஊர்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கம்புணரி ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதே போல் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மருதுஅழகுராஜூவிற்கு திருக்கோஷ்டியூர், திருப்பத்தூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் மானாமதுரை தொகுதி வேட்பாளர் நாகராஜனுக்கு மானாமதுரை, இளையான்குடி, மற்றும் சாலைகிராமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாக்காளர்கள் அனைவரும், காலையிலேயே கண்ணியத்துடன் வாக்களிக்க வருமாறு காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் வேண்டுகோள் விடுத்து, அழைப்பிதழ் அச்சடித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரைக்குடி:
தமிழக சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்நாளில் வாக்காளர்கள் அனைவரும், காலையிலேயே கண்ணியத்துடன் வாக்களிக்க வருமாறு காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் வேண்டுகோள் விடுத்து, அழைப்பிதழ் அச்சடித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ-மாணவிகள் கல்லூரியிலிருந்து மேள,தாளத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு பதாகைகளை ஏந்தி அரியக்குடி ெரயில்வே கேட் வரை சென்றனர். வழி நெடுகிலும் வாகனங்களில் செல்வோர், வியாபாரிகளிடம் அழைப்பிதழை கொடுத்து ‘அன்பளிப்பு மற்றும் பணம் வாங்கி கொண்டு வாக்களிப்பது சட்டப்படி குற்றமாகும்’ என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதில் பேராசிரியை வித்தியபாரதி, நூலகர் நாச்சியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தை ராமசாமி தமிழ் கல்லூரி முதல்வர் கணேசன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியை ஜெயமணி செய்திருந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுபவர்களிடமிருந்து நேற்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சிவகங்கை தொகுதிக்கு போட்டியிட விரும்புவோர் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், காரைக்குடி தொகுதிக்கு போட்டியிட விரும்புபவர்கள் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், காரைக்குடி தாலுகா அலுவலகத்திலும், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் திருப்பத்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்திலும், மானாமதுரை தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் மானாமதுரையில் உள்ள தாலுகா அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் நாளான நேற்று 4 தொகுதிகளிலும் யாரும் விண்ணப்பிக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் பெற்று சென்றனர். அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்கள் மட்டும் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வருகின்ற 19-ந்தேதி கடைசி நாளாகும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும்பொழுது வேட்பாளருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் அளவிற்கு 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்யுமிடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
சிவகங்கை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த நாலுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி(வயது 51). கட்டிட சென்டரிங் தொழிலாளி. இவருைடய மனைவி ராக்கு (46).இவர்களுக்கு மணிகண்டன் (28) என்ற மகனும் பொன்னி (26) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் சென்டரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முனியாண்டிக்கும் அவரது மனைவி ராக்குவுக்கும் நேற்று காலை குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனியாண்டி தனது மனைவியை தாக்கி உள்ளார்.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த இரும்பு அடுப்பை தூக்கி கொண்டு முனியாண்டியை சரமாரி தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனியாண்டி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி விசாரணை நடத்தி மணிகண்டன் மற்றும் அவரது தாயார் ராக்கு ஆகிய 2 பேரையும் கைது செய்தார். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
காரைக்குடி தொகுதி அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கும், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியை செட்டிநாடு என்றும், கல்வி நகரம் என்றும், சிறப்புற்று அழைக்கிறார்கள். இங்கு கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. கல்விக்காகவும், இருப்பிட வசதிக்காகவும், இயற்கையின் பெரும்கொடை சம்பை ஊற்றின் குடிநீருக்காகவும் இங்கு ஏராளமானோர் குடியேறி உள்ளனர்.
உலகில் மொழிக்கென ஒரு கோவில் முதலில் உருவாக்கப்பட்டது என்றால் அது காரைக்குடியில்தான். இங்கு உள்ள கம்பன் மணிமண்டபத்தில் தமிழ் தாய்க்கென தனிக்கோவில் உள்ளது. திருக்குறள் கழகம், அண்ணா தமிழ் கழகம், கம்பன் கழகம், பாரதிதாசன் பேரவை உள்பட பல்வேறு தமிழ் சார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் காரைக்குடிக்கு சிறப்பிடம் உண்டு.

காரைக்குடி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 15 ஆயிரத்து 351. ஆண்கள் 1 லட்சத்து 54 ஆயிரத்து 905. பெண்கள் 1 லட்சத்து 60 ஆயிரத்து 399. மூன்றாம் பாலினத்தவர் 47.
காரைக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை காரைக்குடி நகராட்சி, மற்றும் தேவகோட்டை நகராட்சி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. மேலும் தேவகோட்டை ஒன்றியம், கண்ணங்குடி ஒன்றியம், சாக்கோட்டை ஒன்றியத்தில் பெரும்பகுதி, கல்லல் ஒன்றியத்தில் ஒரு பகுதி, புதுவயல் கண்டனூர் பேரூராட்சி பகுதிகள் உள்ளன.

இத்தொகுதியில் கடந்த 1952 முதல் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க தலா 4 முறையும், தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
முக்குலத்தோர், சிறுபான்மையினர், தலித், முத்தரையர், வல்லம்பர், இதர சாதியினர் என அனைவரும் கணிசமாக உள்ள தொகுதி காரைக்குடி சட்டமன்ற தொகுதியாகும்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இது தவிர கைத்தறி நெசவு தறிக்கூடங்கள், அரிசி ஆலைகள் ஏராளம் உண்டு. ஏராளமான பெண்கள் ஈடுபட்டுவரும் பிரதான கைத்தொழிலாக செட்டிநாடு ஸ்நாக்ஸ் எனப்படும் திண்பண்ட வகைகள் உலகப்புகழ் பெற்றது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொழிகளிலான சினிமா சூட்டிங் தொழில் இங்கு நடைபெற்று வருகிறது. அவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலரின் சொந்த ஊர் காரைக்குடி தொகுதியில் அமைந்துள்ளது.
கோரிக்கைகள்
காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஆகியவற்றை தொடங்க வேண்டும். சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட சிப்காட் திட்டத்தை செயல்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

தேவகோட்டையில் அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க வேண்டும். காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆண்டுக்கு 500-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. ஆனால் மருத்துவமனை தொடங்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லை. கண்டனூர் பகுதியில் மூடிக்கிடக்கும் கிராம தொழில் மையத்தை திறந்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

காரைக்குடி- மதுரை 4 வழிச்சாலை பணியை விரைவு படுத்த வேண்டும். தொகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும்.
காரைக்குடியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பவை இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தேர்தல் வெற்றி


1952- சொக்கலிங்கம் செட்டியார் (காங்கிரஸ்)
1957- ராஜா சர் முத்தையா செட்டியார் (காங்கிரஸ்)
1962- கணேசன் (சுதந்திரா கட்சி)
1967- வக்கீல் மெய்யப்ப செட்டியார் (சுதந்திரா கட்சி)
1971- சித.சிதம்பரம் (தி.மு-.க.)
1977- காளியப்பன் (அ.தி.மு.-க.)
1980- சித.சிதம்பரம் (தி.மு-.க.)
1984- துரைராஜ் (அ.தி.மு.க.)
1989- ராம.நாராயணன் (தி.மு.க.)
1991- கற்பகம் இளங்கோ (அ.தி.மு.க.)
1996- சுந்தரம் (த.மா.கா.)
2001- எச்.ராஜா (பா.ஜனதா)
2006- சுந்தரம் (காங்கிரஸ்)
2011- சித.பழனிச்சாமி (அ.தி.மு.க.)
2016- கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்)
5 முறை காங்கிரசும், 4 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், 2 முறை இந்திய கம்யூனிஸ்டும் வென்ற சிவகங்கை தொகுதி கண்ணோட்டம்.
சிவகங்கை.
இந்த பெயரை உச்சரித்ததும் அனைவரது நினைவுக்கும் வருவது மருது சகோதரர்கள்தான். சிவகங்கை தொகுதி 1952 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாக்கள், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியுடன் காரைக்குடி தாலுகாவை சேர்ந்த கீரணிப்பட்டி, வரிவயல், கூத்தலூர் சேது, ரெகுநாதபட்டினம், பிலார், தேவபட்டு, கல்லல், செம்பனூர், அரண்மனை சிறுவயல், குருந்தம்பட்டு, சன்னவனம், வேப்பங்களம், விளாவடியேந்தல், ஆலாம்பட்டு, மாலைகண்டான் மற்றும் வெற்றியூர் ஆகிய பகுதிகள் சிவகங்கை தொகுதியில் அடங்கி உள்ளன.

இந்த தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,99,118. ஆண்கள் 1,47097, பெண்கள் 1,52,021, மூன்றாம் பாலினத்தவர் 4.
சிவகங்கை தொகுதியில் 5 முறை காங்கிரசும், 4 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், 2 முறை இந்திய கம்யூனிஸ்டும், ஒருமுறை சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் முக்கிய தொகுதி விவசாயம். இதனை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளனர். ஆனால் வறட்சி காரணமாக விவசாயம் சரிவர நடப்பதில்லை. இதனால் இங்குள்ள பலரும் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.
சிவகங்கையில் முன்பு பல நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் இவை மூடப்பட்டதால் பகுதி மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
கோரிக்கை
சிவகங்கை மக்களின் நீண்டகால கனவாக இருப்பது கிராபைட் தொழிற்சாலை. சிவகங்கை பகுதியில் கிடைக்கும் கிராபைட் தாது உலகிலேயே மிகசிறந்த வகையானது. இதனை தற்போது வெட்டி எடுத்து சுத்திகரிப்பு பணி மட்டும் இங்கு நடக்கிறது. ஆனால் இதனை பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இங்கு தொடங்கப்பட்டால் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கை

மேலும் சிவகங்கை அருகே தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. அரசனூர் பகுதியில் அமைக்கப்படும் சிப்காட் அறிவிப்போடு நின்று போனது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத சூழல் இத்தொகுதியில் உள்ளது.
சிவகங்கையில் முக்கிய பிரச்சினை குடிநீர். ஒரு நாள் விட்டு ஒருநாள் வழங்கப்படும் குடிநீரை தினமும் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டாலும் தடையின்றி நகராட்சி சார்பில் குடிநீர் வழங்க முடியாதது வேதனையானது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு வர மறுக்கிறது. இந்த திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்துடன் நின்று விடுகிறது. இதனை சிவகங்கையோடு இணைக்க வேண்டும். மாவட்ட தலைநகராக சிவகங்கை இருந்தாலும் இங்கிருந்து தொலைதூர ஊர்களுக்கு பஸ்கள் இல்லை. இப்படி தொகுதியில் பல்வேறு குறைகள் உள்ளன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அரசு செவிலியர் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி போன்றவை தொடங்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தேர்தல் வெற்றி


1952- சுவாமிநாதன் (காங்கிரஸ்)
1957- மன்னர் சுப்பிரமணியராஜா (சுயேட்சை)
1962- சுவாமிநாதன் (காங்கிரஸ்)
1967- சேதுராமன் (தி.மு-.க.)
1971- சேதுராமன் (தி.மு-.க.)
1977- சுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1980- சுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1984- சுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1989- மனோகரன் (தி.மு.க.)
1991- முருகானந்தம் (அ.தி.மு.க.)
1996- தா.கிருஷ்ணன் (தி.மு.க.)
2001- சந்திரன் (அ.தி.மு-.க.)
2006- குணசேகரன் (இந்திய கம்யூ.)
2011- குணசேகரன் (இந்திய கம்யூ.)
2016- பாஸ்கரன் (அ.தி.மு.க.)






