என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    திருப்பத்தூர் தொகுதி
    X
    திருப்பத்தூர் தொகுதி

    மூன்று முறை வெற்றி பெற்ற பெரியகருப்பன் மீண்டும் களம் இறங்கும் திருப்பத்தூர் தொகுதி கண்ணோட்டம்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் பெரியகருப்பன் மூன்று முறை வெற்றி வாகை சூடியுள்ள நிலையில் 4-வது முறையாக களம் காண்கிறார்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வழிபாட்டு தலங்களை மட்டும் கொண்ட ஒரு தொகுதியாக திகழ்ந்து வருகிறது. கடந்த கால் நூற்றாண்டு மேல் இத்தொகுதியானது தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. 

    தொகுதியானது தி.மு.க.வின் கோட்டையாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். 

    இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 290647, ஆண்கள் 142327, பெண்கள் 148308, மூன்றாம் பாலினத்தவர் 12.

    இங்கு முத்தரையர், யாதவர், தேவேந்திரகுல வேளாளர், முக்குலத்தோர் மற்றும் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். 
    திருப்பத்தூர் தொகுதியில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, கானாடுகாத்தான், பள்ளத்தூர் பேரூராட்சிகளும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல், சாக்கோட்டை யூனியன்களும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை பஞ்சாயத்துக்களும் அடங்கி உள்ளன.

    திருப்பத்தூர் தொகுதி மாவட்டத்திலேயே வேலை வாய்ப்புகள் இன்றி பின்தங்கிய தொகுதியாக மக்களால் பார்க்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட இத்தொகுதியில் உலக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அதன் அருகிலேயே குன்றக்குடி மற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவராக சிறந்து விளங்கிய பாரி ஆண்ட பறம்பு மலை என்ற பிரான்மலை உள்ளது.

    பிரான்மலை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் வழிபடும் வழிபாட்டு தலமாக உள்ளது. அதேபோல் தளக்காவூர் மாதா கோவிலும் இங்கு உள்ளது.

    மக்களின் எதிர்பார்ப்பு

    திருப்பத்தூர் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வருவது காரைக்குடி- மதுரை ரெயில் போக்குவரத்து திட்டமாகும். இத்திட்டத்திற்காக மத்திய, மாநில அமைச்சர்கள் இடம் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் கோரிக்கையை இன்றளவும் வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

    அதேபோல் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட ஆர்.ஓ. குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது திருப்பத்தூர் நகர மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகும்.

    பத்திர பதிவிற்காக நெற்குப்பை பேரூராட்சி சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டையை சேர்ந்த பொன்னமராவதிக்கு சென்று பத்திரபதிவு மேற்கொள்ளும் அவல நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெற்குப்பை பேரூராட்சியிலேயே சார்பதிவாளர் அலுவலகம் அமைத்து தரும்படியான கோரிக்கையும், பஸ் நிலையம் அமைத்து தர வண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    சிங்கம்புணரி தாலுகாவை சேர்ந்த பிரான்மலை பூமி மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மாவட்டத்திலேயே மிகப்பெரிய மலையாக திகழ்ந்து வருகிறது. மலையின் உச்சியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமும் இந்துக்களின் வழிபாட்டுத் தலமும் இருந்து வருவதால் மலைக்கு அடிவாரத்தில் இருந்து சென்றுவர ரோப்கார் அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்பேட்டை நகரமாக சிறந்து விளங்கியது சிங்கம்புணரி. நாளடைவில் இங்கு இயங்கிவந்த தொழிற்சாலை இடம் மாற்றப்பட்டதால் அதில் வேலை பார்த்த மக்கள் பலர் வேலை இழக்க நேரிட்டது. எனவே முன்பு போல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டுவரவேண்டும். மேலும் இப்பகுதியில் தேங்காய் மட்டையைக் கொண்டு கயிறு, சாக்கு தயாரிப்பதற்கான மூலப்பொருள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கான மண் போன்ற தேங்காய் கழிவில் கிடைக்கும் இடுபொருள் போன்றவை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    மருது அழகுராஜ், பெரியகருப்பன்

    தேங்காய் மட்டையை கொண்டு தயாரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இப்பகுதியில் இயங்கி வருகிறது. எனவே இத்தொழிலை மேம்படுத்தும் வண்ணம் அரசே மிகப்பெரிய அளவில் உற்பத்தி தொழில் கூடங்களை இங்கு தொடங்கி அதன் மூலம் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்.

    மக்களின் கோரிக்கைகள் இந்த தேர்தலிலாவது நிறைவேறுமா? என்பது வரபோகிற ஆட்சியாளர் கையில்தான் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    திமுக சார்பில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ள பெரியகருப்பன் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் மருது அழகுராஜ் களம் இறங்குகிறார்.

    தேர்தல் வெற்றி

    1952 முத்தையா (சுயேட்சை)
    1967 மாதவன் (தி.மு.க.)
    1971 மாதவன் (தி.மு.க.)
    1977 சண்முகம் (இந்திய கம்யூ.)
    1980 வால்மிகி (காங்கிரஸ்)
    1984 மாதவன் (அ.தி.மு.க.)
    1989 தென்னரசு (தி.மு.க.)
    1991- கண்ணப்பன் (அ.தி.மு.க.)
    1996 சிவராமன் (தி.மு.க.)
    2001 உமாதேவன் (அ.தி.மு-.க.)
    2006 கே.ஆர். பெரியகருப்பன் (தி.மு.க.)
    2011 கே.ஆர். பெரியகருப்பன் (தி.மு.க.)
    2016 கே.ஆர். பெரியகருப்பன் (தி.மு.க.)
    Next Story
    ×